பேரனை பெற்றெடுத்த பாட்டி!



அமெரிக்காவைச் சேர்ந்த சாரா என்ற பெண், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் பிரச்னைகளை சந்தித்தார். அதே நேரத்தில் அவர் வேறு குழந்தையை தத்தெடுக்கவும் விரும்பவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றி இருக்கிறது. தன் குழந்தையை பெற்றெடுக்குமாறு தனது 61 வயது தாயான Kristine Casey-யிடம் உதவி கேட்டிருக்கிறார். தாயும் சம்மதித்திருக்கிறார். விரைவில் மகளுக்காக அம்மா, வாடகைத் தாயாக மாறப் போகிறார்.

இணையத்தில் கசிந்துள்ள இந்தத் தகவல் ஆங்காங்கே விவாதங்களை எழுப்பியுள்ளது. அதில் முக்கியமானது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாடகைத் தாயாக இருக்க முடியுமா என்பது.
இக்கேள்விக்கான விடைகளாக பல சம்பவங்கள் கொட்டுகின்றன. அதே அமெரிக்காவில் என்பதுதான் ஹைலைட்.உதாரணமாக ஒரு சம்பவம். 

இது 2004ம் ஆண்டு நடந்தது. அதே ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த Connel என்ற 34 வயதான பெண்ணுக்கும் குழந்தை பெற்றுக்கொள்வது கடினமாக இருந்துள்ளது. இதற்காக பலவித மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்ட அவர், சில நாட்கள் கழித்து கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுமே இறந்து பிறந்துள்ளன. இதனால் Connel மனமுடைந்தார். இந்த சமயத்தில், அவரது தாயும் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்று மன அமைதியைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் Connelக்கு ஒரு யோசனை தோன்றியது.குழந்தையை surrogacy (வாடகைத் தாய்) முறை மூலம் பெற்றுத் தருமாறு, தனது தாயிடம் கேட்டார். தாயும் தன் மகளுக்கு உதவ முன்வந்தார்.

இருப்பினும் 61 வயதில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது 2004ல் பெரிய விஷயமாகும். இதனால் மருத்துவர்கள் எந்த பிரச்னையும் வராது என கிரீன் சிக்னல் கொடுத்த பின்பு குழந்தையைப் பெற்றெடுக்கும் மருத்துவப் பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றன.

அந்த 61 வயது பெண் தனது கர்ப்பப்பையை இளமையாக்கும் ஹார்மோன்களை எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவருக்கு surrogacy முறை நடைபெற்றுள்ளது. இதில் இரண்டாம் முயற்சியில் அவர் கர்ப்பம் தரித்துள்ளார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் இவருக்கு C section முறையில் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தப் பிரசவத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு, சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. ஆனால், அதிலிருந்து அவர் விரைவிலேயே குணமானார்.வயதான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது இது முதன்முறையல்ல. வர்ஜீனியாவில், 55 வயது பெண் ஒருவர் இதே 2004ம் ஆண்டில், 3 குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். 2007ம் ஆண்டில் ஒரு பெண் Surrogacy முறையில் வேறொருவருக்கு குழந்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.l

என்.ஆனந்தி