ஒரு காட்சி என்றாலும் அஜித் சார் படம் என்றால் டிரிபுள் ஓகே!



‘வெண் மேகம் பெண் ஆனதோ...’ என்ற கவிஞரின் வரிக்கு வலிமை சேர்க்கும் அழகுக்கு சொந்தக்காரர் மீனாட்சி கோவிந்தராஜன். ‘கென்னடி கிளப்’, ‘கோப்ரா’ போன்ற படங்களில் கவனிக்க வைத்தவர். இப்போது சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2 கே லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்துள்ளார்.

மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிச்ச அனுபவம் எப்படியிருந்துச்சு?

சுசீந்திரன் சாருடன் எனக்கு மூணாவது படம் இது. பெரிய அளவுல தத்துவம் சொல்லாம மனசை லேசா வெச்சுக்கக்கூடிய அழகான  படம்னு படம் பார்த்தவங்க கமெண்ட் பண்ணினாங்க. நானும் ஒரு 2 கே கிட் என்பதால கதையை ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.சுசீந்திரன் சாருடன் வேலை செய்வது எப்போதும் ஈசியான விஷயம். 
கதைக்கு என்ன வேணுமோ அதை ஒவ்வொரு காட்சியா நடிச்சுக்காட்டுவார். புது நடிகர், நடிகை கூட அவரோடு ரொம்ப ஈசியா வேலைபார்க்க முடியும்.இந்தப் படத்துக்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை. எல்லாம் செட்ல டைரக்டர் சொன்னது மட்டுமே. கறார் பொண்ணா நடிச்சதற்கு நிறைய பாராட்டு கிடைச்சது.

ஒவ்வொரு படத்திலும் ஏதாவது கத்துக்கற மாதிரி ஒரு விஷயம் இருக்கும். இதுவரை கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர்தான் பண்ணியிருக்கிறேன். இதுல இதுவரை பண்ணாத ரோல் என்பதால் புது விஷயங்களை கத்துக்க முடிஞ்சது. அதற்கு இயக்குநர் சுசீந்திரன் சார் உதவியா இருந்தார்.

புதுமுக ஹீரோவுடன் வேலை செஞ்சது கஷ்டமா இருந்துச்சா?

ஹீரோ ஜெகவீருக்கு இதுதான் முதல் படம். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. நான் ஏற்கனவே சொன்னமாதிரி புதுமுகமா இருந்தாலும் தெரிஞ்ச முகமா இருந்தாலும் சுசீ சார் நடிக்க வெச்சுடுவார். அதுதான் நான் சினிமாவுக்கு வந்தபோதும் நடந்துச்சு.என்னுடைய சினிமா பயணம் சுசீ சார் பண்ணிய ‘கென்னடி கிளப்’ படத்துலதான் ஆரம்பமாச்சு. அந்த சமயத்துல சினிமாவைப் பற்றி எனக்கு சுத்தமா எதுவும் தெரியாது.

அதுல நான் மட்டுமல்ல, கிட்டத்தட்ட பனிரெண்டு ஒரிஜினல் கபடி வீரர்கள் நடிச்சிருந்தாங்க. அவங்க எல்லோருமே சினிமாவுக்கு புதுசு. எல்லோரையும் கதைக்கேத்த மாதிரி சிறப்பா டிரைன் பண்ணி நடிக்க வெச்ச பெருமை அவருக்கு உண்டு.

நீங்க நடிச்சதுல கஷ்டமான படம் எது?

விக்ரம் சாரின் ‘கோப்ரா’. ஏனெனில், சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் அது. டயலாக் எல்லாமே கணக்குப் பாடம் மாதிரி இருக்கும். எந்த விதத்திலும் நிஜ வாழ்க்கையோடு ரிலேட் பண்ணி நடிக்க முடியாது.‘2 கே லவ் ஸ்டோரி’ படத்துல என்னுடைய கேரக்டரை ஃபீல் பண்ணி நடிக்க முடிஞ்சது. இந்த மாதிரி கேரக்டர் பண்றதுக்கும் ‘கோப்ரா’ மாதிரி கேரக்டர் பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் மட்டுமல்ல, சவாலான கேரக்டர் என்றும் சொல்லலாம்.

விக்ரமுடன் நடிச்ச அனுபவம் ஞாபகம் இருக்கிறதா?

விக்ரம் சாருக்கு வெளியே மட்டுமல்ல, செட்டுக்குள்ளேயும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எல்லோரிடமும் சகஜமா பழகுவார். பெரிய நடிகருடன் நடிக்கிறோம் என்ற ஃபீலிங் எந்த இடத்திலும் வந்ததில்லை. பெரிய நடிகர், எப்படி மிக எளிமையா இருக்க முடியும் என்று ஆச்சர்யப்பட வைத்தார். அவரிடமிருந்து கத்துக்க வேண்டிய விஷயம் அது.

சினிமாவுக்கு வந்த பிறகு உங்களிடம் என்ன மாற்றம் வந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

ஆறேழு படங்கள் முடிச்சிருக்கிறேன். கரியர் கிராஃப் எந்தளவுக்கு ஏறியிருக்குன்னு சொல்லத் தெரியல. ஆனால், ஆக்டிங் ஸ்கில் டெவலப் ஆனதா நினைக்கிறேன். அது மற்ற மொழிகளில் வாய்ப்பு வந்தாலும் கமிட்  பண்ணலாம் என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கு.

சினிமா உங்க ப்ரொஃபஷனா மாறும்னு நினைச்சிருந்தீங்களா?

இல்லை. அடிப்படையில் நான் பரதநாட்டிய டான்சர். பதினைஞ்சு வருஷத்துக்கு மேல் அதுதான் என்னுடைய அடையாளமா இருந்துச்சு. சினிமா என்பது லைஃப்ல யோசிச்சுப் பார்க்காத விஷயம். அந்த சமயத்துல வாய்ப்பு வந்துச்சு. 

‘கென்னடி கிளப்’ படத்துக்கு முன் வேற படத்தோட ஆடிஷன்ல கலந்துகிட்டேன். அதைப்பார்த்துட்டுதான் சுசீ சார் கூப்பிட்டார். முதல் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சதால அப்படியே அஜய் ஞானமுத்து சார் படத்துல நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. உண்மையிலேயே நான் நடிகையாவேன் என்ற விஷயத்தை யோசிச்சதில்லை.

பரதநாட்டியம் தெரியும் என்பதால் தடுமாற்றம் இல்லாமல் நடிக்க முடிஞ்சது. அதன் பிறகு சிறந்த டைரக்டர்களுடன் வேலை செஞ்சதால நானும் சினிமாவிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துச்சு.ஹீரோயின் என்றால் ஒருவித டெம்ப்ளேட் கேரக்டர் கொடுப்பது வழக்கம்.

அப்படி வழக்கமான கேரக்டரிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டு செய்ய நினைக்கும் கேரக்டர் எது?

முன்பு சினிமாவுல டைப்காஸ்ட் தவிர்க்க முடியாத விஷயமா இருந்துச்சு. இப்போது முன்பு இருந்ததைவிட அதன் பார்வை மாறியிருப்பதா நினைக்கிறேன். எல்லோருக்கும் எல்லாவிதமான ஸ்கிரிப்ட்ஸ் வருது.‘2 கே லவ் ஸ்டோரி’ படத்துக்குப் பிறகு மஹத் நடிக்கும் ‘காதலே காதலே’ பண்ணியிருக்கிறேன். இன்னொரு படமும் நடித்திருக்கிறேன். எல்லாமே வேற, வேற ஜானர். ‘டிமாண்டி காலனி’ பண்ணியிருந்தேன். அதுவும் வித்தியாசமான படம்.

அந்த வகையில் எனக்கு வர்ற ஸ்கிரிப்ட்ஸ் எல்லாமே வித்தியாசமா வேறு விதமான பரிமாணத்தை தர்ற மாதிரிதான் வருது. முன்பு மாதிரி ஸ்டீரியோடைப் கேரக்டர்ஸ் வருவது குறைஞ்சிருக்குன்னு சொல்லலாம்.

சினிமா உங்களுக்கு கத்துக்கொடுத்த விஷயம் எது?

சினிமாவுக்கு வந்தபிறகு என்னுடைய தனித்திறமையை டெவலப்  பண்ணியிருக்கிறேன். பொறுமையை கத்துக்கொடுத்திருக்கு. அடுத்து, கத்துக்கிட்டது என்பதைவிட நான் சினிமாவுக்கு வருவேன் என்பது நினைச்சுப்பார்க்காத விஷயம்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் ஹீரோயின் ஜாப் போனோமா, வந்தோமா என்பது மாதிரி ஈசியான வேலைன்னு நினைச்சதுண்டு. ஆனால், அப்படியல்ல. இந்த வேலைக்கான கஷ்டங்கள் இருக்கு.

நம்முடைய வாழ்க்கையில் கடந்துபோகும் நபர்களை எப்படி மேனேஜ் பண்ணலாம் என்பதை சினிமா கத்துக்கொடுத்திருக்கு. என் வயசுல இருக்கிற பொண்ணுங்க இவ்வளவு பேருடன் பழகியிருப்பாங்களா, இவ்வளவு எக்ஸ்போஷர் கிடைச்சிருக்குமான்னு தெரியாது.

ஆனால், எனக்கு பல்வேறு மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. என் ஏஜ்ல இருக்கிறவங்க குறிப்பிட்ட வயதுடையவர்களைத்தான் சந்திச்சிருப்பாங்க. ஆனால், எனக்கு நடிகையா பல தரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.

அடுத்த அஞ்சு வருஷத்துல உங்களை எந்த இடத்துல வெச்சு பார்க்க விரும்புறீங்க?

திடுதிப்புன்னு கேட்டா... சொல்லத் தெரியல. வர்ற படத்தை ஒழுங்கா பண்ணாபோதும்னு நினைக்கிறேன். எந்த இடத்துல இருக்கப்போறோம்னு தெரியாது. ஏனெனில் இங்கே இருப்பேன் என்பதே என்னுடைய ப்ளான் கிடையாது. சினிமாவுக்கு வருவேன் என்பது நான் ப்ளான் பண்ணாத விஷயம். அப்படி அடுத்த அஞ்சு  வருஷத்துல எங்கே இருப்பேன்னு சத்தியமா தெரியாது.

ஹீரோயின் என்றில்லாமல் சின்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க ரெடின்னு யாரை சொல்வீங்க?

அஜித் சார் படம்.உங்களுடைய ஆரம்பம் டிவி. அங்கிருந்து வருபவர்களுக்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது?

இப்போது டிவி மட்டும் கிடையாது. இன்ஸ்டாகிராமிலிருந்து நடிகையானவங்க உண்டு. இப்போது தளங்கள் அதிகமாகியுள்ளது. திறமை உள்ள யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாம் என்ற சூழல் உள்ளது. சினிமாவுல டிவி, சோஷியல் மீடியா என்று பிரிச்சுப் பார்ப்பதில்லை.

எஸ்.ராஜா