அராத்து பையனின் சக்சஸ் ஸ்டோரி !



‘கோட்’ வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘டிராகன்’. ‘லவ்டுடே’ பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் இது. இச்சினிமாவை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்திருக்கிறார். இவர் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கியவர். ரிலீஸ் பிசியிலும் பொறுமையாக பேச ஆரம்பித்தார் அஸ்வத் மாரிமுத்து.

‘டிராகன்’ யார்?

காலேஜ் லைஃப்ல மொத்த கல்லூரியையும் கன்ட்ரோல் எடுத்த மாதிரி சீனியர் ஸ்டுடண்ட்னு ஒரு கேரக்டர் இருக்கும். அந்த ஸ்டூடண்ட்டை மொத்த காலேஜும் சேர்ந்து கொண்டாடும். திரும்பிய பக்கமெல்லலாம் அவனைப் பத்திதான் பேசுவாங்க. அந்தக் கேரக்டருடைய ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்காதா என்று பசங்களிடையே போட்டியே நடக்கும்.
ஏனெனில் காலேஜ்ல அவன்தான் கெத்து. டாக் ஆஃப் த காலேஜ்னு கூட சொல்லலாம்.

இந்தக் கொண்டாட்டம் எல்லாம் அவனுடைய அறத்துக்காக இல்லாம அவனுடைய அராத்துக்காக இருக்கும். நிறைய அரியர்ஸ் இருக்கும். பண்ணாத அட்டகாசம் கிடையாது. அந்த மாதிரி என்னுடைய ஹீரோ, அதான் சார்... நம்ம டிராகனுக்கு நாற்பத்தியெட்டு அரியர்ஸ் இருக்கும். காலேஜ்ல அவர்தான் கெத்து.ஆனால், இந்த மாதிரி பசங்க காலேஜை விட்டு வெளியே போனால் சீண்டுவதற்கு ஒருத்தர் இருக்கமாட்டார். அப்படியே மறந்துடுவாங்க.

அந்தமாதிரி கேரக்டர் காலேஜ்ல இருக்கிறவரைதான் ஹீரோ. வெளியே வந்துட்டா ஜீரோ. கெத்து காட்டும் அந்த மாணவன் பற்றிய கதைதான் ‘டிராகன்’.இந்த இடத்துல டிராகனுடைய பாசிடிவ்வையும் சொல்லணும். டிராகன் படிக்காத மக்கு கிடையாது. படிப்புல கில்லி. அவனுடைய காலேஜ்ல நல்லா தொண்ணூறு சதவீதத்துக்கு மேல மார்க் எடுக்கிறவங்களுக்குதான் சீட் கிடைக்கும். 
அதிலிருந்து டிராகன் ப்ளஸ் டூல எவ்வளவு மார்க் எடுத்திருப்பான்னு தெரிஞ்சுக்கலாம்.டிராகன் வாழ்க்கை மாறிய இடம் காலேஜ். அதற்கு காரணம் ஒரு பொண்ணு. நல்லா படிச்சா பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னு நம்பிட்டிருந்தான். ஒரு கட்டத்துல  பொண்ணுங்களுக்கு அராத்து மாதிரி பசங்களைத்தான் பிடிக்குதுன்னு தெரிஞ்சதும் அட்டென்ஷனுக்காக தன்னையும் அப்படி மாத்திக்கிட்டான்.

காலேஜ் லைஃப்ல இருந்து வெளியே வந்தபிறகுதான் ரியாலிட்டி வேற என்பது புரியுது. அந்த உலகத்தில் அவன் எப்படி மேலே வருகிறான் என்பதை ஃபேமிலி டிராமாவா சொல்லியிருக்கிறேன்.

படம் எதைப்பத்தி பேசுகிறது என்றால், வெற்றி, தோல்வி எது என்பதைப் பேசுகிறது. வாழ்க்கையில் குறிப்பிட்ட விஷயத்தை அச்சீவ் பண்ணுவது சக்சஸ் கிடையாது. 

எல்லாருடைய வாழ்க்கையிலும் சக்சஸ் இருக்கு. ஒருவர் நேர்மையான வழியில் தன் குடும்பத்தை நல்லா கவனிச்சிக்கும்போது அவர் சக்சஸ் மேன். குறுக்குவழியில் முன்னேறியவன் திரும்பவும் நடுத்தெருவுக்கு வருவான் என்பதையும் பேசும்.

பிரதீப் ரங்கநாதன் எப்படி படத்துக்குள் வந்தார்?

இது பிரதீப்புக்காகவே எழுதப்பட்ட கதை. பிரதீப் என் காலேஜ் ஜூனியர். பிரதீப் நிஜ வாழ்க்கையில் நல்ல பையன். காலேஜ்ல அராத்து மாதிரி ஒரு பையன் இருப்பான்னு சொன்னேன் தெரியுமா... அது வேற யாருமல்ல... நான்தான் அது. என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைத்தான் சினிமாவுக்காக மாத்தி எழுதினேன். ஒரு திரைப்படத்துல எப்படி கஷ்டப்பட்டாங்க என்பதை சொல்வாங்க. நான் மத்தவங்களை எப்படி கஷ்டப்படுத்தினேன் என்பதை இதுல  சொல்லியுள்ளேன்.

‘ஓ மை கடவுளே’ பண்ணும்போது அந்தப் படத்தைப்பற்றிய எல்லா விஷயமும் பிரதீப்புக்கு தெரியும். அதேமாதிரி பிரதீப் ‘கோமாளி’ பண்ணும்போது அந்தப் படம் பற்றி எனக்கும் தெரியும்.
பிரதீப் எனக்கு தம்பி மாதிரி. 

பிரதீப்பை வெச்சு டைரக்‌ஷன் பண்ணணும்னு ஆசையா இருந்தேன். அதற்கு பிரதீப், ‘ப்ரோ... எனக்கான மார்க்கெட்டை ஏத்திட்டு உங்க கிட்ட வருவேன்’னு சொன்னார். ‘லவ் டுடே’ பெரிய ஹிட். அது கனவு மட்டுமல்ல, பத்து வருட பயணம். இருவரும் எங்களுக்கான பாதையை அமைச்சுக்கிட்ட பிறகு ஏஜிஎஸ் என்ற பெரிய நிறுவனத்துல சேர்ந்து படம் பண்ணியிருக்கிறோம்.

பிரதீப் சிறந்த நடிகர். அவர் நடிக்கப்போற விஷயத்தை முதன் முதலில் என்னிடம்தான் சொன்னார். அப்படி பிரதீப்பை நல்ல நடிகனாகத்தான் பார்த்தேன். ‘கோமாளி’ செட்ல இருந்தவங்க பிரதீப் காட்சிகளை சொல்லும்போது நல்லா நடிக்கிறார்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நாம சேர்ந்து படம் பண்ணலாம்னு சத்தியம் பண்ணியிருந்தோம். அதுதான் இப்போ நடந்திருக்கு.

பெரிய வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் என்பதால் அழுத்தம் இருந்துச்சா?

அழுத்தம் என்பதைவிட பொறுப்புதான் இருந்துச்சு. படம் செய்யணும் என்று முடிவானதும் ஃப்ரெண்ட்ஷிப் என்பதைத் தாண்டி ஹீரோவாதான் தெரிஞ்சார். அப்படி நான் டைரக்டராகவும், அவர் ஹிரோவாகவும் எங்கள் வேலையில் சின்சியரா இருந்தோம். ‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு பிரதீப்புக்கு இது மைல் ஸ்டோன் படமா இருக்கும்.‘லவ் டுடே’ படத்துல பிரதீப் கேரக்டரா மட்டும் இருந்தார். இதுல ஹீரோவா தெரிவார். வெற்றி என்பது எளிதல்ல. கடின உழைப்பு தேவை.

பிரதீப் ஹீரோவா நடிக்க சான்ஸ் கேட்டபோது சந்திச்ச அவமானங்கள் எனக்கு தெரியும். ‘லவ் டுடே’ வெற்றி மூலம் திறமை இருந்தா யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா அவருக்கான இடத்தை அமைச்சுக் கொடுத்திருக்கு. அதற்கு சின்சியரா இருந்து இந்தப் படத்தை  பண்ணியுள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன் நல்ல நடிகைன்னு பேர் வாங்கியவங்களாச்சே..?

எனக்கு நூடுல்ஸ் மண்டை மீது மோகம் அதிகம். என்னுடைய முதல் பட ஹீரோயின் ரித்திகா சிங்கும் நூடுல்ஸ் ஹேர்ஸ்டைல் உள்ளவர். சில இயக்குநர்கள் ஹீரோயினை ஃபிக்ஸ் பண்ணும்போது கண் அழகா இருக்கணும், ஸ்கின் இந்த கலர்ல இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. அப்படி எனக்கு சுருள் முடி. 

அதுல சொல்ல முடியாத அழகு இருக்கு. அது எனக்குப் பிடிக்கும்.
அதுக்காக மட்டுமே அவரை நடிக்க வைக்கவில்லை. கதைக்குப் பொருத்தமா இருந்தார். ‘ஓ மை கடவுளே’ தெலுங்குல அவருடன் வேலை செய்ய நினைத்தேன். அது அமையவில்லை.
இதுல கீர்த்தி என்ற கேரக்டர்ல வர்றார். பிரேக் அப் சீன்ல பிச்சு உதறிட்டார். அது மாதிரி அவருக்கான சில காட்சிகள் கவனிக்க வைக்கும்.

எல்லாத்தையும் விட நான் வியந்தது, அவருடைய தமிழ். மலையாள ஆர்ட்டிஸ்ட். தெலுங்கில் படம் பண்றார். தமிழ் கத்துக்கிட்டு அற்புதமா நடிச்சார். அவரே டப்பிங் பேசியிருக்கிறார். உச்சரிப்புல எந்தப் பிழையும் பார்க்க முடியாது.அசாமைச் சேர்ந்த கயடு லோகர் முக்கியமான லீட் பண்ணியிருக்கிறார். தெலுங்கு, மலையாளம் பண்ணியவர். முதன் முறையா தமிழுக்கு வந்திருக்கிறார்.

மிஷ்கின் சார் இருக்கிறார். படம் பார்த்தபிறகு அவரை லவ் பண்ணுவீங்க. இதற்கு முன் வந்த படங்களில் அவரை விறைப்பானவரா பார்த்திருப்பீங்க.  படம் பாத்ததும் இப்படி நடிக்க வெச்சிருக்கீங்களேன்னு நீங்களே போன் பண்ணுவீங்க. இந்தமாதிரி ஒருத்தர் நம்ம கூட இருந்தா லைஃப் நல்லாயிருக்குமேனு ஏங்க வைக்குமளவுக்கு அவர் கேரக்டர் இருக்கும். 
 
கெளதம் மேனன் சார் பிரின்சிபலா வர்றார். அவரையும் சீரியஸாதான்  பார்த்திருப்போம். இதுல டான்ஸ், ஹியூமர்னு ரகளையான கேரக்டர். கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கும் வித்தியாசமான ரோல்.

சிம்பு பாடிய ‘ஏண்டி விட்டுப்போன...’ பாடல் வைரலாகும்னு நினைச்சீங்களா?

சிம்பு சார் பெரீய ஹீரோ. பாடியதோடு இல்லாம ப்ரொமோ வீடியோவிலும் நடிச்சுக் கொடுத்தார். அடுத்த படத்தோட டைரக்டர் என்றில்லாமல், இந்த பையன் நல்லா வேலை பார்க்கிறான் என்று என் மீதுள்ள நம்பிக்கை, ஏஜிஎஸ் மீதுள்ள மதிப்பு காரணமா பண்ணினார்.மியூசிக் லியோன் ஜேம்ஸ். ‘ஓ மை கடவுளே’ பண்ணியவர். 

எல்லோரும் ஒரு வெற்றிக்குப் பிறகு யாருடன் ஒர்க் பண்ணப்போகிறார்ன்னு கவனிப்பாங்க. நான் அப்படி பண்ணவில்லை. லியோன்தான்  வேணும்னு சொன்னேன். பிரதீப், அர்ச்சனா மேடம் சரின்னு சொல்லிட்டாங்க. படத்துல ஆறு பாடல்கள். எல்லாமே டிரெண்டிங்ல இருக்கு.

ஒளிப்பதிவு நிக்கேத். இன்னொரு டைரக்டர் மாதிரி. செட்ல நான் அதிகம் பேசமாட்டேன். டைரக்‌ஷன் டிப்பார்ட்மெண்ட் வேலையையும் சேர்த்து செய்வார்.  இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர். என்னுடைய அடுத்த படத்துக்கும் அவர்தான் ஒளிப்பதிவு.பெரிய ஹீரோ, மெகா பட்ஜெட் படங்கள் எடுத்தவர்கள் ஏஜிஎஸ்.

அவர்களுக்கு படம் செய்யும்போது அழுத்தம் இருந்துச்சா?

பெரிய படம் மட்டும்லல, சிறு பட்ஜெட் படங்களும் செய்துள்ளார்கள். டேலண்ட்டுக்கு மதிப்பு தருவாங்க. பிரதீப் ஹீரோவா அலைஞ்சுட்டு இருந்தப்ப அவருடைய டேலண்டை கவனிச்சு படம் கொடுத்தாங்க. இயக்குநர்களுக்கு பெரிய மரியாதை தருவாங்க.

‘காட் ஆஃப் லவ்’?

என்னுடைய ட்ரீம் படம். ஏஜிஎஸ் கம்பெனிக்கு இதுதான் முதலாவதாக பண்ணுவதாக இருந்தது. நடுவுல ‘டிராகன்’ வெளியாகிறது. இரண்டு  போஸ்டர் பார்த்திருப்பீங்க. அதுல இருக்கிற எலிமெண்ட்ஸ் நிறைய கதையைச் சொல்லும். வின்டேஜ் சிம்புவிடம் ஆடியன்ஸ் என்ன ரசிச்சாங்களோ அது எல்லாமே இருக்கும்.  

எஸ்.ராஜா