ரெண்டு தினேஷ்... ஜல்லிக்கட்டு... உறுமும் கருப்பு பல்சர்
2012ம் ஆண்டு ‘அட்டக்கத்தி’ வெளியானது. அன்று முதல் ‘அட்டக்கத்தி’ தினேஷ் என அழைக்கப்பட்ட தினேஷ், சரியாக 12 வருடங்கள் கழித்து ‘கெத்து’ தினேஷ் ஆக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அவரது தவத்துக்கு கிடைத்த வரமாக சென்ற ஆண்டு வெளியான ‘லப்பர் பந்து’ அமைந்தது. மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் அவர் ஏற்ற ‘கெத்து’ கதாபாத்திரம் அவரது அடையாளமாகவே இன்று மாறிவிட்டது.
 இதோ அதற்கேற்ப அடுத்தடுத்து படங்களும் வெளியீட்டிற்கு தயார். இப்போது டபுள் ஆக்ஷனில் ‘கருப்பு பல்சர்’ படம் மூலம் ஆக்சிலேட்டரை அழுத்த தயாராக இருக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் முரளி கிருஷ். இயக்குநர் ராஜேஷ் எம் பட்டறையில் தீட்டப்பட்ட வைரம் இவர்.
‘கருப்பு பல்சர்’..?
படத்தின் மிக முக்கிய கருவாக ஒரு கருப்பு கலர் பல்சர் அமைகிறது. இதன் மேல்தான் கதை பயணிக்கும். மேலும் கருப்பு பல்சர் பைக் கேட்கவே கெத்தாக இருக்க, ‘கெத்து’ தினேஷ் நடிக்கும் இப்படத்திற்கு இதைக் காட்டிலும் மேன்லியான பெயர் வேண்டுமா என்ன!
 என்ன கதை..?
மதுரையில் துவங்கி சென்னைக்கு பயணமாகும் கதை. ஜல்லிக்கட்டுதான் கதைக்களம். ஒரு ஜல்லிக்கட்டு வீரரும் அவருக்கு பரிசுப் பொருளாகக் கிடைக்கும் பல்சரும், அதைத் தொடர்ந்து நிகழும் பழிவாங்கும் பிரச்னைகளும் சேர்ந்துதான் கதைக்களம். இந்த பல்சர் பைக் பரிசு என்னவாக மாறுகிறது... இங்கே மதுரையில் இருக்கும் மாடுபிடி வீரருக்கும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் இன்னொரு கேரக்டருக்கும் என்ன சம்பந்தம்... இதெல்லாம் சேர்த்து ஆக்ஷன் மற்றும் காமெடி கமர்ஷியலில் கிளைமேக்ஸ். டபுள் ஆக்ஷனில் தினேஷ்... இன்னும் வேறு யார் யாரெல்லாம் படத்தில் நடிச்சிருக்காங்க?
 இந்தப் படத்துக்காக தினேஷ் உண்மையாகவே ஜல்லிக்கட்டு காளையை பிடிச்சார். அவருக்கும் அதுதான் முதல் தடவை. ஆனால், ஷாட் ரெடி... டேக் என்றதும் யோசிக்காமல் காளையின் திமிலைப் பிடித்து கொஞ்ச நேரம் சுத்தினார். நாங்க மிரண்டுட்டோம். மதுரை தினேஷ் மற்றும் சென்னை தினேஷ் இரண்டு பேருக்கும் நிறைய வித்தியாசங்களை படத்தில் பார்க்கலாம். ரெண்டு தினேஷுக்கும் ரெண்டு ஜோடிகள். ‘ரசவாதி’ படத்தில் நடிச்ச ரேஷ்மா வெங்கட், மற்றும் மதுனிகா.
இவர்களுடன் மன்சூர் அலிகான் சார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்கார். சரவண சுப்பையா, பிராங்ஸ்டர் ராகுல், பிரின்ஸ் அஜய் இவங்க போர்ஷனும் நிறைய இடங்களில் நல்ல காமெடியாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கு.
ஜல்லிக்கட்டு காட்சிகளை எப்படி படமாக்கினீங்க ?
தஞ்சாவூரில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி தினேஷையும் களத்தில் இறக்கிதான் படமாக்கினோம். ஒருசில காட்சிகளை செட்டு போட்டு எடுக்க வேண்டிய சூழல் இருந்துச்சு. படப்பிடிப்பை மொத்தமாகவே 23 நாட்களில் முடிச்சிட்டோம். இதற்கு சினிமாட்டோகிராபர் பாஸ்கர் ஆறுமுகம் ரொம்ப பெரிய சப்போர்ட்டா இருந்தார். சசி தாட்சர் எடிட்டிங், டி.உதயகுமார் சவுண்ட் டிசைன்ல ஜல்லிக்கட்டு காட்சிகளின் கள சூழல் சப்தம் எல்லாம் தத்ரூபமாக வந்திருக்கு.
படத்துக்கு இசையமைத்து பாடல்கள் எழுதியிருக்கார் இன்பராஜ் ராஜேந்திரன். அவர் ஜஸ்டின் பிரபாகரன் கூட வேலை செய்தவர். மேலும் நிறைய ஆல்பம் பாடல்கள் செய்திருக்கார். லொகேஷன் முழுக்க மதுரை மற்றும் சென்னைதான். ஜல்லிக்கட்டு போர்ஷன்களுக்காக மட்டும் தஞ்சாவூர்.
உங்க கதை சொல்லல் எப்படி..? உங்க குருநாதர் இயக்குநர் ராஜேஷ் எம் போல குடும்பம் + காமெடிதானா?
எந்த டெம்ப்ளேட்களும் செட் செய்துக்கலை. ஆனால், டிக்கெட் எடுத்து படம் பார்க்க வர்றவங்க சந்தோஷமா வெளியே போகணும். இதுதான் குறிக்கோள். சென்னை மதுராந்தகம்தான் எனக்கு சொந்த ஊர். ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட் நான். தொடர்ந்து ராஜேஷ் எம் சார்கிட்ட அசிஸ்டென்ட்.
ஸ்டூடண்ட் ஆக இருந்தப்போ மிஷ்கின் சார், சற்குணம் சார் எல்லாம் கிளாஸ் எடுத்திருக்காங்க. எங்க பேட்ச்ல முதல் பட இயக்குநராக அறிமுகம் ஆகறது நான்தான். தொடர்ந்து என்னுடைய ஃபிரண்ட்ஸ் எல்லாருமே படம் செய்யணும். நானும் அடுத்தடுத்த கதைகளுடன் தயாராய் இருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|