ஓம் காதலாய நமஹ..! இது 2K காதல் டிக்ஷனரி
‘‘என் மகன் / மகள் என்ன மொழி பேசுகிறார் என்பது எங்களுக்கு புரியவே இல்லை...’’ என 2கே குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் புலம்பினால் கூட பரவாயில்லை.
‘‘என் பாய் ஃபிரண்ட்/ கேர்ள் ஃபிரண்ட் சொல்லும் சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை...’’ என்கிறார்கள் இக்கால இளசுகளே! ‘‘புரியவில்லை என சொன்னாலும் ‘பூமர்’ என சொல்லிவிடுகிறார்கள்...’’இப்படி இக்கால இளைஞர்களும் புலம்பும் அளவிற்கு தற்போதைய காதல் மொழிகள் எதுவும் நமக்கு அவ்வளவாக விளங்குவதில்லை.  அப்படி ரிலேஷன்ஷிப்பில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன... எந்தப் பெயரில் உங்களை உங்கள் காதலன் அல்லது காதலி வைத்திருக்கிறார் என ஒரு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி ஆராய்ச்சி இதோ...  பெரும்பாலும் 2கே பெண்களை கேர்ள் ஃபிரண்டாக கொண்டிருப்பவர்கள் 90ஸ் கிட்ஸ் என்கிற பட்சத்தில் இந்தக் கட்டுரை அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என நம்புவோமாக!
 *அஃபோர்டிங் (Affording)
பட்ஜெட் காதல். அதாவது புதிதாக ஒருவரை டேட்டிங் செய்யும்பொழுது அல்லது காதலிக்கத் துவங்கி ஓரிரு மாதங்கள்தான் ஆகின்றன எனில் அந்த உறவில் பெரிதாக நம்பிக்கை உருவாகி இருக்காது என்கிற நிலையில் எதற்காக இவருக்கு நாம் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்கிற மனநிலை இரண்டு பக்கமும் இருக்கும்.
 இதை மனதில் கொண்டு இருவருமே தங்களால் என்ன செலவு செய்ய முடியுமோ அல்லது எவ்வளவு செலவு செய்தால் போதும் என நினைக்கிறார்களோ அதை செலவு செய்து டேட்டிங் செய்து கொள்வதே அஃபோர்டிங். இதில் இன்னும் ஜென்டில்மேன் மற்றும் வுமன் அக்ரீமெண்ட் ஆக செலவு பில் எதுவானாலும் சரிசமமாக பிரித்துக் கொள்வார்கள் என்பது கொசுறு தகவல்.
 *டெக்ஸ்டேஷன்ஷிப் (Textationship)
இரு பக்கமும் விருப்பம் இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கை இல்லா சூழல் காரணமாக இவர்களின் உறவு மெசஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளில் வெறும் மெசேஜ்களாகவே தொடரும்.
ஆனால், மெசேஜில் அத்தனையும் வெளிப்படையாகஇருவரும் மனது விட்டு பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், நேரில் ஒருமுறை கூட பார்ப்பதற்கு இருவருமே ஆர்வம் காட்ட மாட்டார்கள். தற்போது முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அத்தனை சமூக வலைத்தள செயலிகளிலும் அதிகம் காணப்படுவது இந்த டெக்ஸ்டேஷன்ஷிப்தான்.
 *கிரவுண்ட்ஹாக்கிங் (Groundhogging)
‘நம்மைப் போலவே ஒருவர்...’ அதாவது நம்மைப் போலவே ஒரே எண்ணங்கள் கொண்ட நபரை தேடித் தேடி அலைந்து கடைசியில் தோல்வியுறும் உறவுமுறை. ஒருமித்த சிந்தனை கொண்ட இருவர் ஒன்றாக இருப்பது என்பது கிட்டத்தட்ட சிங்கமும் புலியும் ஒரே நேரத்தில் மோதிக் கொள்வதற்கு சமம்.
ஆனால், இதில் மீண்டும் மீண்டும் தோல்வி என்றாலும் கூட அதேபோன்றதொரு உறவைத்தான் இந்த நபர்கள் தேடுவார்கள். இதனால் இவர்கள் அதிகம் காதல் தோல்வியை சந்தித்தவர்களாக இருப்பார்கள். இந்த முறையையே கிரௌண்ட்ஹாக்கிங் என்கிறார்கள். இந்த வார்த்தை 1993ம் ஆண்டு வெளியான ‘கிரவுண்ட் ஹாக் டே’ என்கிற படத்தின் தலைப்பிலிருந்து உருவானது. *நெக்ஸ்ட் ஆன் டெக் (Next On Deck)
பொதுவாக இது இரண்டு முறையில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒன்று, ஆண் பெண் இருவரும் தங்களது முதற்கட்ட சந்திப்பு மற்றும் காதல் என அனைத்தும் சீராக செல்லும் தருவாயில் வாழ்க்கையின் அடுத்த கட்டமாக வேலை, திருமணம், குழந்தை உள்ளிட்ட நீண்ட நாள் உறவுக்கான திட்டங்களைக் குறித்து பேசுவது.
இன்னொரு புரிதலாக, பொதுவாக கால்பந்து மைதானத்தில் ‘நெக்ஸ்ட் ஆன் டெக்’ என ஒரு வீரர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார். விளையாடிக் கொண்டிருக்கும் வீரருக்கு அடிபட்டால் அவருக்கு பதில் இவர் விளையாடுவது போல்.
அதாவது, இருக்கும் உறவில் ஒருவர் பிரச்னை செய்கிறார் எனில் பேக்கப் பிளானாக இன்னொருவரை தயார் நிலையில் வைத்திருப்பதையும் நெக்ஸ்ட் ஆன் டெக் என்கிற பொருளில் 2k கண்மணிகள் அடையாளப்படுத்துகிறார்கள்!இதில் நெக்ஸ்ட் ஆன் டெக் பேர்வழி பாய் பெஸ்டி அல்லது கேர்ள் பெஸ்டி நிலையிலும் கூட காத்திருப்பில் வைத்திருப்பதுண்டு. *பிரட் கிரம்பிங் (Bread Crumbing)
ஒருவர் இன்னொரு நபரை தன் மீது விருப்பத்துடனே வைத்திருப்பது. அதாவது அவர்களுக்காக எல்லா மெனக்கெடலையும் செய்வதுபோல் காண்பித்து, ஆனால், எதையும் செய்யாமல் இருப்பது.
உதாரணத்திற்கு அத்தனையும் பேச்சில்தான் இருக்கும்... செயலில் இருக்காது. ஒருவேளை எதிர்த்தரப்பில் உணர்வுபூர்வமாக அல்லது சீரியஸ் திட்டங்கள் செய்ய நினைத்தால் உடனே அவர்களை திசை திருப்புவது அல்லது பேச்சை மாற்றுவது.
எதற்கும் பிடி கொடுக்காமல் எப்படி பிரட் கிரம்ஸ் ஒட்டியும் ஒட்டாமல் தட்டினால் உதிர்ந்து விடும்படி இருக்குமோ அப்படியான உறவில் வைத்திருப்பார்கள்.90% இந்த உறவில் ஒருவர் மட்டுமே உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுவார்கள். மற்றவர் இவரை கூடுமானவரை பயன்படுத்திக் கொள்வார்.
*பாக்கெட்டிங் (Pocketing)
தனது கேர்ள் ஃபிரண்ட் அல்லது பாய் ஃபிரண்டை தன்னுடைய சுற்றுவட்டத்தில் அறிமுகப்படுத்துவதை தவிர்ப்பர். குறிப்பாக தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் முன் தனது உறவை வெளிப்படுத்த மாட்டார்கள்.
அதேபோல் தன் பற்றிய அந்தரங்க தகவல்களையும் முழுவதுமாக தெரிவிக்க மாட்டார்கள். அத்தனையும் அவர்கள் சொல்லும் வார்த்தைகளாக மட்டும்தான் மற்றவர் புரிந்து கொள்ள முடியும். ஒருவேளை மற்றவர் இவருடைய அந்தரங்க விஷயங்களில் தலையிடவோ அல்லது தன்னை வெளிப்படுத்த முயற்சி செய்தாலோ உடனடியாகவே உறவைத் துண்டித்துக் கொள்வார்கள். இவர்களின் மொபைல் போன் உட்பட அத்தனையும் ரகசியம் நிறைந்ததாக இருக்கும். இவர்கள் பலதரப்பட்ட உறவுகளில் இருப்பதும் பெரிய ஆச்சரியமாக இருக்காது.
*குஷனிங் (Cushioning)
பலதரப்பட்ட ரொமாண்டிக் உறவுகள்... ஒன்று தோல்வியடைந்தால் மற்றொன்றை ஆக்டிவேட் செய்து, இருக்கும் முதன்மை உறவை பிரேக் அப் செய்து விடுவது.
புது உறவுக்குள் சென்றதும் மீண்டும் இன்னொரு பேக்கப் பிளானை ஆக்டிவேட் செய்து விடுவார்கள். ஒன்று தகராறு செய்தால் மற்றொன்று என இவர்களுக்கு எந்த எல்லையோ, குறிக்கோளோ உறவில் இருக்காது.
*பேப்பர் கிளிப்பிங் (Paper clipping)
ஒரு துண்டு சீட்டு என்றாலும் அதை வேண்டாம் என குப்பையில் போடாமல் என்றாவது ஒருநாள் தேவைப்படும் என கிளிப் போட்டு வைப்போமே... அப்படி காதல் உறவு முறிந்தாலும் அந்த உறவை முழுமையாக முடித்துக் கொள்ளாமல் ஒரு ஆப்ஷன் மெனுவில் வைத்திருப்பர்.
திடீரென பல மாதங்கள் கழித்து ‘எப்படி இருக்கே?’, ‘என்னை முழுசா மறந்துட்டியா...’ என கேள்விகள் கேட்டு ஒருவேளை ஆர்வம் இருந்தால் அவர்களுடன் மீண்டும் உறவை புதுப்பித்துக்கொண்டு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால், முன்பு போலவே அவர்கள் எந்த வகையிலும் தன்னை மாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள் அல்லது ஆர்வம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
*கோஸ்டிங் (Ghosting)
சமீபத்திய காதல் படங்கள் பலவற்றிலும் இந்த வார்த்தையை கேட்டிருப்போம். எந்தக் காரணமும் இல்லாமல் தொடர்புகள் அத்தனையும் துண்டித்து விட்டு மற்றவரை குழப்பத்தில் அல்லது மன உளைச்சலில் விட்டு விடுவது. எந்த அளவிற்கு தன்னை அவர் தேடுகிறார் என்னும் பரீட்சை அதிகம் வைத்து இன்னொருவரை மனதளவில் காயப்படுத்திக் கொண்டே இருக்கும் உறவு முறை இது. ஒரு வித டாக்சிக் உறவு என்றும் சொல்லலாம்.
*டிங் (Ding)
அலர்ட் நோட்டிபிகேஷன். தன்னுடைய விருப்பத்துக்குரிய நபரிடம் இருந்து ஏதாவது மெசேஜ் வந்தால் உடனே உற்சாகமும் சந்தோஷமும் அடைவது. இந்த முறையில் இருபக்கமும் ஒருவருக்கு ஒருவர் ஏதாவது தகவல் வராதா என்னும் காத்திருப்பிலேயே இருப்பார்கள். அதே சமயம் வெளிப்படையாக அழைத்துப் பேசவும் மாட்டார்கள். இந்த நோட்டிபிகேஷன் அலர்ட் கொடுக்கும் சந்தோஷத்திலேயே உறவை நீண்ட நாட்கள் தொடர்வது.
*ஃப்ளிங் (Fling)
எந்த எதிர்கால கமிட்மெண்ட்டும் இல்லாமல் உறவில் இருப்பது. இதற்கு கால அவகாசம் எதுவும் கிடையாது. பிடித்தால் உறவில் தொடரலாம்... இல்லையேல் பை பை சொல்லி விட்டு செல்லலாம்.
தற்போதைய 2கே ஜெனரேஷனில் அதிகம் காணப்படுவது இந்த ஃப்ளிங் கலாசாரம்தான். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை... மேலும் அவரவர் குடும்பத்திற்குள்ளும் எந்த பிரச்னைகளும் வராது. சுருக்கமாக சொன்னால் கமிட்மெண்டுகளுக்கு தயாராகாத ஒரு உறவு. இதற்கு வயது வரம்பும் கிடையாது. *பிளாட்டானிக் (Platonic)
காதலும் அல்ல நட்பும் அல்ல... இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு உறவு முறை. இருவருக்கும் இடையே எல்லாமே வெளிப்படையான பேச்சுவார்த்தையில் இருக்கும். ஆனால், உடல் ரீதியான எந்த ஒரு உறவும் இருக்காது. ஆனால், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத... அவர்களுக்கே வெளியில் சொல்லத் தெரியாத ஒரு உறவில் இருப்பர்.
*ஸ்வேப் (Swap)
இரண்டு தம்பதிகள் தங்களுக்குள் பாலியல் நடவடிக்கைகளுக்காக தங்களது பார்ட்னரை அடிக்கடி மாற்றிக் கொள்வர். இதில் மற்ற தம்பதியருக்கு அனுமதி கிடையாது. எங்கு சென்றாலும் இந்த நால்வர் குழுவாகத்தான் செல்லும். நால்வருக்குள்ளும் எந்த ரகசியமும் கிடையாது.
*ஸ்வைப் (Swipe)
‘மை ஸ்வைப்’ என தன் நண்பர்களுக்கு உங்களை உங்கள் பார்ட்னர் அறிமுகப்படுத்தினால், நீங்கள் டேட்டிங் ஆப் மூலம் கிடைத்த உறவு எனப் பொருள். ‘தேவைப்பட்டால் வைத்துக்கொள்வேன்’ அல்லது ‘ஸ்வைப் செய்து அடுத்தவரை தேர்வு செய்துவிடுவேன்’ என்னும் பொருளும் அடங்கும்.
இந்த வகைகளில் எந்த முறையில் உங்களை உங்கள் உறவு நடத்துகிறது என்பதைக் கொண்டே இந்த உறவில் உங்களின் அடுத்த கட்டங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.இதுவே பாதி டிக்ஷனரிதான்.என்ன... தலை சுற்றுகிறது அல்லவா..? எங்களுக்கும் இஷ்க் இஷ்க் என்றுதான் கேட்கிறது!
ஷாலினி நியூட்டன்
|