உலகம் முழுவதும் 100 வயது பெண்கள் அதிகம்!



‘‘உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 100 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை, 7,22,000...’’ என்று 2024ல் எடுக்கப்பட்ட ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. 
இந்த எண்ணிக்கை 2030ல் பத்து லட்சத்தை எட்டும். இதில் ஜப்பானில் மட்டுமே 1,46,000 முதியவர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே 100 வயதான முதியவர்கள் அதிகமாக வாழும் நாடு ஜப்பான்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை ஜப்பானில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை 95,000தான். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரியில் மட்டுமே 50 ஆயிரம் ஜப்பானியர்கள் தங்களின் 100வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கலாம். ஆம்; கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே ஜப்பானில் 50 ஆயிரம் பேர் 100 வயதைத் தொட்டிருக்கின்றனர். 

இப்படி நூறு வயதைத் தொட்ட ஜப்பானியர்களில் 90 சதவீதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள 100 வயதானவர்களில் பெண்களின் சதவீதம்தான் அதிகம்.

ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கே வாழ்ந்து வருகின்ற 100 வயது மற்றும் அதற்கும் மேலான வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை, 1,08,000.
சீனாவில் 60 ஆயிரம், இந்தியாவில் 48 ஆயிரம், தாய்லாந்தில் 38 ஆயிரம் என 100 வயதான முதியவர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியல் நீள்கிறது. இந்த ஐந்து நாடுகளின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, 100 வயதானவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, ஜப்பானில் உள்ள 10 ஆயிரம் பேரில், 12 பேர் நூறு வயதான முதியவர்கள், தாய்லாந்தில் வசிக்கும் 10 ஆயிரம் பேரில் 5 பேர் 100 வயதானவர்கள், 10 ஆயிரம் அமெரிக்கர்களில் மூன்று பேர் மட்டுமே 100 வயதை எட்டியவர்கள். 

ஆனால், இந்தியாவிலும், சீனாவிலும் 10 ஆயிரம் பேரில் ஒருவர் கூட 100 வயதைத் தொடவில்லை. இந்நிலையில், 2054ம் வருடம் உலகம் முழுவதும் வாழ்கின்ற 100 வயது மற்றும் அதற்கும் மேலான வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கும் என்கின்றனர். குறிப்பாக 100 வயதான முதியவர்கள் அதிகமாக வாழும் நாடு என்ற பெருமையை சீனா தன்வசப்படுத்தும்.

ஆம்; அங்கே 2054ல் 100 வயதுடையவர்களின் எண்ணிக்கை 7,67,000 ஆக இருக்கும். தவிர, சீனாவில் வசிக்கும் 10 ஆயிரம் பேரில், 6 பேர் 100 வயதை எட்டியிருப்பார்கள். அமெரிக்காவில் 100 வயதானவர்கள் 5,13,000 பேர் இருப்பார்கள். அங்கே வசிக்கும் 10 ஆயிரம் பேரில், 14 பேர் 100 வயதை எட்டியிருப்பார்கள். இந்தியாவில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை, 4,02,000 ஆக இருக்கும். அப்போது 10 ஆயிரம் இந்தியர்களில், 2 பேர் 100 வயதை தொட்டிருப்பார்கள்.

ஜப்பானிலும் 100 வயதானவர்களின் எண்ணிக்கை 4,02,000 ஆக இருக்கும். பல வருடங்களாக 100 வயதுடைய முதியவர்கள் அதிகமாக வாழும் நாடு என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருக்கும் ஜப்பான், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும்.

10 ஆயிரம் ஜப்பானியர்களில் 40 பேர் 100 வயதானவர்களாக இருப்பார்கள். தாய்லாந்தில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை எகிறி, 3,26,000 ஆக இருக்கும். அங்கே வசிக்கும் 10 ஆயிரம் பேரில், 49 பேர் 100 வயதை அடைந்திருப்பார்கள். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... 2054லிலும் பெண்கள்தான் அதிகமாக 100 வயதைக் கடந்திருப்பார்கள்.

த.சக்திவேல்