இந்தியாவில் அதிகரிக்கும் முதியவர்கள்... குறைந்து வரும் குழந்தைகள்..!



‘‘இந்தியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது; முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது...’’ என்பதுதான் சமீபத்திய ஹாட் டாக். கடந்த 2023ம் வருடத்தின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் 60 வயது அல்லது 60 வயதுக்கும் அதிகமானோரின் எண்ணிக்கை, 110 கோடியைத் தாண்டிவிட்டது. 
அதாவது, 2023ன் கணக்கெடுப்பின்படி உலக மக்கள் தொகையில் 14.16 சதவீதத்தினர் முதியவர்கள். 2050ம் வருடம் முதியவர்களின் எண்ணிக்கை, 221 கோடியாக உயரும். அதாவது, 2050ல் உலகில் வாழும் மொத்த மக்களில் 22 சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பார்கள்.

மட்டுமல்ல, முதியவர்களைக் கவனித்துக்கொள்வதும், அவர்களின் நல்வாழ்வும் இந்தியாவின் முன்னுரிமையாக மாறப்போகிறது. ஆம்; மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

அதே நேரத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இப்போது இந்தியாவில் 60 வயது மற்றும் 60 வயதுக்கும் மேலானவர்களின் எண்ணிக்கை, 14.9 கோடி. அதாவது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை, 10.5 சதவீதம்.

2050ல் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, 35 கோடியாக இருக்கும். அதாவது, மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 20.8 சதவீதமாக இருக்கும். ஃபிரான்ஸில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக 120 ஆண்டுகளானது; ஸ்வீடனில் 80 ஆண்டுகளானது. 

ஆனால், இந்தியாவில் 26 வருடங்களில் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகப் போகிறது என்பதுதான் இதில் ஹைலைட். இன்றைய தேதியில் இந்தியாவில் வாழும் முதியவர்களில் 40 சதவீதம் பேர் ஏழ்மையான நிலையில் உள்ளனர்; மீதி 40 சதவீதம் பேர் கடுமையான ஏழ்மையிலும், 20 சதவீதம் பேர் ஓரளவுக்கு வசதி மற்றும் நல்ல வசதியுடன் இருக்கின்றனர்.

இந்தியாவில் மக்களின் ஆயுட்காலம் உயர்ந்திருப்பதும், மருத்துவ முன்னேற்றமும்தான் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முதன்மை காரணமாகச் சொல்லப்படுகிறது.
முன்பெல்லாம் இந்தியாவில் ஏதாவது பெரிய நோய் என்றாலே உயிர் பிழைப்பது கடினம். தவிர, அந்த நாட்களில் அறுபது வருடங்களுக்குள் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

இந்தியாவில் ஒரு பக்கம் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம் கருத்தரிப்பு விகிதம் குறைந்திருப்பது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆம்; 1950களில் ஒரு பெண்ணுக்குக் கருத்தரிப்பு விகிதம் 5.7 ஆக இருந்தது. அதாவது, அப்போது சராசரியாக ஓர் இந்தியப் பெண் குறைந்தபட்சம் 6 குழந்தைகளாவது பெற்றுக்கொள்வார். ஆனால், இன்று கருத்தரிப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு இரண்டாக குறைந்துவிட்டது.

மட்டுமல்ல, 17 மாநிலங்களில் கருத்தரிப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு இரண்டுக்கும் குறைவாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் கருத்தரிப்பு விகிதம் 1.6 ஆகவும், தமிழ்நாட்டில் 1.4 ஆகவும் உள்ளது. இந்த விகிதம் பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது கூட குறைவு என்பது கவனிக்கத்தக்கது. ஆம்; தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் வாழும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் ஒரு குழந்தையே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.  

ஆந்திராவின் கருத்தரிப்பு விகிதமும், ஸ்வீடனின் கருத்தரிப்பு விகிதமும் ஒரே அளவில் இருக்கின்றன. ஆனால், ஸ்வீடனின் தனி நபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது, ஆந்திராவில் 28 மடங்கு குறைவு. இந்த ஒப்பீடு கருத்தரிப்பு விகிதத்தில் ஐரோப்பாவுடன் போட்டி போட்டாலும் கூட, பொருளாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.

‘‘இந்தியாவின் எதிர்காலத்தை முன்னிட்டு, ஒவ்வொரு தம்பதியினரும் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அரசியல் நெருக்கடி உருவாகலாம்...’’ என்கின்றனர் சமூக நிபுணர்கள்.

‘‘ஒரு தேசத்தில் கருத்தரிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டே சென்றால், அந்நாட்டின் மக்கள் தொகை பெரியளவில் வீழ்ச்சியடையும்...’’ என்கிறார் மக்கள் தொகை ஆய்வாளரான டிம் டைசன். இந்தியாவில் இப்போதிருக்கும் கருத்தரிப்பு விகிதமே தொடர்ந்தால், 2050ல் 1.29 என்ற விகிதத்தை அடையும். 2100ல் 1.04 என்ற அளவில் கருத்தரிப்பு விகிதம் இருக்கும்.

உலகளவில் 1950ல் கருத்தரிப்பு விகிதம் 4.5 ஆக இருந்தது. ஆனால், 2021ல் 2.2 ஆக குறைந்தது. 2050ல் 1.8 ஆகவும், 2100ல் 1.6 ஆகவும் உலகின் கருத்தரிப்பு விகிதம் இருக்கும் என்று சமீபத்திய ஆய்வு சொல்கிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கடந்த 70 வருடங்களில் உலகளவில் கருத்தரிப்பு விகிதம் 50 சதவீதம் குறைந்திருக்கிறது என்பதுதான் என்று சுட்டிக்காட்டுகின்றனர் நிபுணர்கள்.
நகரமயமாகுதலும், நவீன வாழ்க்கை முறையும் கருத்தரிப்பு விகிதம் குறைந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. நகரங்களில் வாழ்கின்ற பெரும்பாலான பெண்கள் சிறிய குடும்பத்தையே விரும்புகின்றனர். அதனால் ஒரு குழந்தையுடனே நிறுத்திவிடுகின்றனர்.

தவிர, தள்ளிப்போகும் திருமணங்கள், வேலையில் முன்னேற்றத்திற்காக காத்திருத்தல் போன்றவையும் குழந்தை பிறப்பைக் குறைக்கின்றன. முக்கியமாக பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளும் ஒரு காரணம்.

ஆம்; நகரங்களில் வாழ அதிக பணம் தேவையாக இருக்கிறது, நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் பொருளாதார ரீதியாக சமாளிப்பது கடினம் போன்றவற்றாலும் பல குடும்பங்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திவிடுகின்றனர். குழந்தையே வேண்டாம் என்று கூட பல தம்பதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது நல்லது.l

படத்தில் இருப்பவர்கள் மாடல்களே.

த.சக்திவேல்