தஞ்சாவூர் பெயிண்டிங்கில் கலக்கும் 69 வயது இளைஞி!



சுற்றிலும் ஓவியங்கள். ஒருபக்கம் விநாயகர். இன்னொரு பக்கம் முருகர், வள்ளி - தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மற்றொரு புறத்தில் வெண்ணெய் பானையுடன் அமர்ந்திருக்கும் குழந்தை கிருஷ்ணரும், திருப்பதி வெங்கடாலஜபதியும், லட்சுமியும், சரஸ்வதியும் வீற்றிருக்கின்றனர். 
இவர்களிடையே மேரி மாதா கையில் குழந்தை இயேசுவுடன் புன்னகைக்கிறார். இதுதவிர பறவைகள், இயற்கைக் காட்சிகள் அழகு சேர்க்கின்றன. இப்படி விதவிதமான தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அந்த வீடு முழுவதும் நிரம்பியுள்ளன. அதன் நடுவில் அமர்ந்து மேலும் ஒரு தஞ்சாவூர் பாணி ஓவியத்தை அத்தனை சிரத்தையுடன் வரைந்து கொண்டிருக்கிறார் இந்திரா.

கடந்த முப்பது ஆண்டுகளாக தஞ்சாவூர் பெயிண்டிங்கே தன் உயிர்மூச்சாக செய்து வருபவர். இப்போது அவருக்கு 69 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் வரைவதை அவ்வளவு ஆர்வத்துடன் மேற்கொள்வது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘‘முதல்ல பென்சிலால் அழகாக ஓவியத்தை தத்ரூபமாக வரைஞ்சிடணும். 
அப்புறம், சாக் பவுடர் போட்டு மென்மையாக்கி, கற்கள் பதிச்சு, பிறகு கோல்டு பேப்பர் ஒட்டி ப்ரேம் பண்ணணும். நிறைய மெனக்கெட்டால் மட்டுமே இந்தப் பெயிண்டிங் அவ்வளவு அழகா வரும்...’’ என வரைந்தபடியே பேசுகிறார் இந்திரா.
சென்னை பம்மலில் வசித்து வரும் இவர் தற்போது சென்னை, தஞ்சை பூம்புகார் ஷோரூம்களுக்கு மட்டும் தனது தஞ்சாவூர் ஓவியப் படைப்புகளை அனுப்பி வருகிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். அப்பா ரயில்வேயில் வேலை பார்த்த தால் நான் படிச்சது, வளர்ந்தது எல்லாம் ஈரோட்டுல. என்னுடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, மூணு சகோதரர்கள். குடும்பச் சூழல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி வரைதான் படிக்க முடிஞ்சது. பிறகு ஓராண்டு பியூசி போனேன். மேற்கொண்டு படிக்க முடியல. 

வீட்டை கவனிச்சுக்கிட்டேன். குடும்பம்தான் என் உலகமாக இருந்தது. இந்நேரம் என் சித்தப்பா தஞ்சாவூர் பெயிண்டிங் பண்ணிட்டு இருந்தார். அவர் வரைவதைப் பார்த்து எனக்கும் பெயிண்டிங்கில் ஆசை வந்தது. அவரிடம் எனக்கும் சொல்லித் தரக்கேட்டேன். ஆனால் அவர், இதெல்லாம் உனக்கு சரிவராதும்மானு சொல்லிட்டார்.

பிறகு நானே வீட்டில் ஓவியங்கள் வரைஞ்சு பார்க்க ஆரம்பிச்சேன். இப்படியே நாட்கள் நகர்ந்துச்சு. 32 வயசுல திருமணமாச்சு. அப்போ, என் கணவர் சிவபாலன் ஈரோட்டுல அரசுப் பணியில் இருந்தார். அவருக்கும் திடீர்னு சென்னை தலைமைச் செயலகத்திற்கு மாற்றலாச்சு. அப்படியாக நாங்க சென்னையில் குடியேறினோம்...’’ என்கிறவர், அருகில் அமர்ந்திருக்கும் கணவர் சிவபாலனைப் பார்த்தபடி தொடர்ந்தார். 

‘‘நான் தஞ்சாவூர் ஓவியங்களுக்குள் வருவதற்குக் காரணமே என் கணவர்தான். நாங்க சென்னை வந்தபிறகும் வீடே உலகம்னுதான் இருந்தேன். அவர்தான் ஏதாவது படினு ஊக்கப்படுத்தினார். பிறகு, பி.ஏ. போஸ்ட்ல படிக்க சொல்லி விண்ணப்பமும் வாங்கித் தந்தார்.
 
டிகிரி படிச்சு முடிச்சேன். உடனே, அடுத்து என்ன செய்யப் போறேனு கேட்டார். அவரிடம் என் தஞ்சாவூர் ஓவிய ஆசையைச் சொன்னேன். என் ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு சென்னை கலாத்ராவில் வேலை செய்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி மேடத்திடம் தஞ்சாவூர் பெயிண்டிங் கத்துக்க வச்சார். அவங்ககிட்ட மூணு வருஷம் நல்லா ட்ரைனிங் எடுத்தேன். முழுவதும் கத்துக்கிட்டு தஞ்சாவூர் பெயிண்டிங்ல சர்டிபிகேட் வாங்கினேன்.  

அப்புறம், தேசிய விருது பெற்ற ஈஸ்வர்லால் சாரிடம் கிளாஸ் பெயிண்டிங் கத்துக்கிட்டேன். இதை பொழுதுபோக்காகவே படிச்சேன். இதற்கிடையில் பொண்ணு பொறந்தா.  அப்புறம், தஞ்சாவூர் பெயிண்டிங் வேலையை முன்னெடுக்க ஆரம்பிச்சேன். என்னுடைய முதல் பெயிண்டிங்கை தஞ்சாவூர் சொசைட்டிக்குக் கொடுத்தேன். 

பிறகு நண்பர்களுக்குத் தந்தேன். அதைப் பார்த்திட்டு எல்லோரும் பிசினஸாக பண்ணலாமேனு சொன்னாங்க. இதன்பிறகே மாவட்ட தொழில் மையம் மூலம் கடன்பெற்று பெயிண்டிங் பிசினஸைத் தொடங்கினேன். தஞ்சாவூர் சொசைட்டிக்குப் பிறகு சென்னை பூம்புகார் ஷோரூமிற்கு சப்ளை செய்தேன்.

என்னுடைய வொர்க் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இன்னமும் சப்ளை பண்ணுங்கம்மானு சொன்னாங்க. அப்படியாக கோயமுத்தூர், தில்லி பூம்புகார் ஷோரூம்களுக்கு அனுப்பக் கேட்டாங்க. அங்கேயும் சப்ளை செய்தேன். பூம்புகார் ஷோரூம்களுக்கு தஞ்சாவூர் ஓவியங்களை வரைஞ்சு அனுப்பிட்டு இருந்தேன். பூம்புகார் நிறுவனம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தாங்க.

அதேநேரம் எல்லா ஷோரூம்களிலும் நான் பண்ணின படங்கள் ரொம்ப அருமையா இருக்குனு சொன்னாங்க. நானும் நல்லா கச்சிதமாக செய்து தந்தேன். அதனால் வெளியிலிருந்தும் ஆர்டர்கள் வந்தன. பலர் தேடிவந்து என்னிடம் வாங்கினாங்க. 

அடையாரைச் சேர்ந்த ஒரு பொண்ணு இரண்டு குருவாயூர் கிருஷ்ணர் படத்தை வாங்கினாங்க. அவங்க வெளிநாட்டுல இருக்காங்க. எங்களைப் பத்தி எப்படியோ கேள்விப்பட்டு போன் பண்ணி ஆர்டர் கொடுத்தாங்க. என் ஓவியத்தைப் பார்த்திட்டு அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க.

அப்புறம், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு செய்து கொடுத்தேன். பிறகு பாண்டிச்சேரியில் உள்ள ஒரு சில்க் ஹவுஸ்ல வொர்க் பண்ணி கேட்டாங்க. அவங்கதசரா திருவிழா நேரத்துல கஸ்டமருக்கு கிஃப்ட்டா என் தஞ்சாவூர் ஓவியத்தைக் கொடுத்தாங்க. அதனால் நிறைய படங்கள் செய்து கொடுத்தேன். இதுதவிர நிறைய ஆர்ட் கேலரி, வள்ளுவர் கோட்டம், ஹால்கள்னு பல இடங்கள்ல ஸ்டால் போட்டு அங்கேயும் என் ஓவியங்கள் நிறைய சேல்ஸ் ஆனது.

இதன்பிறகு நான் வரைந்த ராதாகிருஷ்ணன் ஓவியம் பூம்புகார்ல இருந்து மாவட்ட அளவிலான சிறந்த விருதுக்கு தேர்வானது. இந்த விருது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைத் தந்தது. இப்ப மாநில விருதுக்காக அப்ளை செய்திருக்கேன். 

கிடைக்குமானு தெரியல...’’ என்கிற இந்திரா, உற்சாகமாகத் தொடர்ந்தார்.‘‘கணவர் ஓய்வுபெற்ற பிறகு இன்னும் ப்ரொஃபஷனலாக இந்த பெயிண்டிங் வேலையை எடுத்து செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல நாங்க மாதவரத்துல இருந்தோம். பொண்ணை திருமணம் செய்து கொடுத்தபிறகு தனியா வசிக்க பிடிக்காமல் இங்க பம்மல்ல என் தம்பி வீட்டுக்கு அருகே வந்திட்டோம்.

அவரும் எனக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார். ஆனா, இப்ப அவருக்கும் 72 வயசாகிடுச்சு. எனக்கும் 69 வயசாகுது. அதனால், முடியல. இப்ப சென்னை, தஞ்சாவூர் ஷோரூமிற்கு மட்டுமே கொடுக்குறேன். 

தவிர ஆர்டரின் பேரில் தெரிஞ்சவங்களுக்கு செய்றேன்.இதுல சிலர் ‘அழகாக லட்சணமாக செய்து தர்றீங்க’னு சொல்றதை கேட்குறப்ப இன்னும் நல்லா செய்யணும், நிறைய பண்ணணும்னு மனசு ஆசைப்படுது. ஆனா, உடல் ஒத்துழைக்கமாட்டேங்குது. இருந்தும் முடிந்தவரை செய்துகொடுக்குறேன்.

இதுதவிர, கிளாஸ் பெயிண்டிங் வொர்க் நிறைய வருது. இதையும் நுணுக்கமாக செய்து தர்றேன். இது விற்பனையாகவும் நல்லா போகுது. இந்த கிளாஸ் பெயிண்டிங்ல தண்ணீர் பட்டாலும் ஒண்ணும் ஆகாது. 

பல வருஷங்கள் கழித்து பார்த்தாலும் அப்படியே பளிச்னு இருக்கும். அதனால், இதற்கு டிமாண்ட் நிறைய இருக்கு’’ என்கிறவர், ‘‘நான் தஞ்சாவூர் பெயிண்டிங்கை காசு பணத்திற்காக மட்டும் செய்யல. கடவுளின் படங்களை தீட்டுவதில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி கிடைக்குது. அதுதான் என்னை இந்த வயதிலும் இயங்க வைக்குது...’’ நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் இந்திரா.

ஆர்.சந்திரசேகர்