தென்னிந்தியாவில் குட்டி திபெத்!
புதுப்புது இடங்களுக்குச் சென்று, அங்கு கிடைக்கும் அனுபவங்களைச் சேகரிப்பது பயண ஆர்வலர்களுக்கு விருப்பமான ஒன்று. ஆனால், இன்று பயண ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், எல்லோருமே பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/3.jpg) தொடர் விடுமுறை கிடைத்தால், தொலைவில் இருக்கும் புது இடங்களுக்குப் பயணம் செல்வதுதான் பலரது திட்டம். தவிர, யாருமே பயணிக்காத இடங்களுக்குச் சென்று, பயண அனுபவங்களைப் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் சமூக வலைத்தளங்களில் பகிர்வது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. ![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/3a.jpg)
அதே நேரத்தில் மன அமைதிக்காகவும், நகரச் சூழலிலிருந்து விடுபடவும் சலசலப்பற்ற ஓர் அமைதியான இடத்தைத் தேடி பயணம் செல்வதும் அதிகரித்துவிட்டது.
அமைதியைத் தேடுபவர்களுக்குச் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது, டாண்டன்லிங். இது இந்தியாவில், அதுவும் கர்நாடகாவின் எல்லையில் இருக்கும் திபெத்தியன் கிராமம். இதை குட்டி திபெத் என்றே சொல்லலாம்.
நீங்கள் எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தாலும் கூட, மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த ஓர் இடம் இது. இயற்கைப்பேரழகு கொட்டிக்கிடக்கும் இவ்விடத்தைப் பார்த்தாலே போதும். உடனடியாக நம் மனது புத்துணர்வை அடையும்.
கர்நாடக மாநிலத்தின் எல்லைப் பகுதியான கொள்ளேகாலில், கடல் மட்டத்திலிருந்து 3345 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய கிராமம். சத்தியமங்கலத்தின் புலிகள் காப்பக மலைப்பகுதியின் வழியாக திம்பம் தாண்டி, இந்தக் கிராமத்துக்குப் பயணம் செய்வதே பேரனுபவம்.
ஆம்; இரு புறமும் அடர்ந்த காடு. அதற்கு நடுவிலிருக்கும் தார் சாலையில் பயணிக்கும் போது, சாலையில் ஓரத்திலேயே மான் கூட்டங்களைத் தரிசிக்கலாம்.
அதிர்ஷ்டம் இருந்தால் யானைகளையும், புலிகளையும் கூட பார்க்க முடியும். வன விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதி என்பதால், அவற்றுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் மெதுவாகத்தான் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இப்படிப்பட்ட ஒரு பகுதியில் எப்படி திபெத்திய கிராமம் வந்தது என்ற கேள்வி எழலாம். ஐம்பதுகளுக்கு முன்பு வரை தனிப் பிரதேசமாக இருந்தது திபெத். ஆனால், தனது நாட்டின் ஒரு பகுதி என்று திபெத்தை ஆக்கிரமித்து, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சீனா. இந்தச் சம்பவம் திபெத் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஆம்; சீனாவுடன் திபெத் இணைவதில் திபெத்தியர்களுக்கு விருப்பம் இல்லை. சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தில் போராட்டங்கள் வெடித்தன.
தலாய் லாமாவின் தலைமையில் போராட்டங்கள் நடந்தன. அதனால் தலாய்லாமாவுக்கு ஆபத்து ஏற்பட்டது. அவர் பாதுகாப்புக்காக இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதுபோக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க விருப்பமில்லாமல் லட்சக்கணக்கான திபெத்தியர்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தனர்.
அப்போது பிரதமராக இருந்த நேரு, திபெத்தியர்களுக்கு உரிய அடைக்கலத்தை தந்தார். அப்படி அகதிகளாக வந்த திபெத்தியர்களுக்காக முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வாழ்விடங்கள் உருவாகின. அவற்றில் ஒன்றுதான் இந்த டாண்டன்லிங்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் திபெத்திய அகதிகளின் வாழ்விடமாக உருவானது டாண்டன்லிங். திபெத்தியர்களின் வருகையின் போது இந்தப் பகுதி வெறும் காடாக இருந்தது. ஒருசில ஆண்டுகளிலேயே ஒரு ஊராக மாறியது. இக்கிராமம் உருவாகி ஐம்பது வருடங்கள் ஆனதை சமீபத்தில்தான் கொண்டாடியிருக்கின்றனர். மட்டுமல்ல, திபெத்தியர்கள் வேறு ஓர் இடத்தில் அதிகமாக வாழ்வது இங்குதான் என்கின்றனர்.
இங்கே இருபதுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இருக்கின்றன. நாலாப் பக்கத்தையும் புத்த விகாரைகள் அலங்கரிக்கின்றன. திபெத்தியர்கள் வாழ்கின்ற வீடுகளும், தெரு அமைப்பும், தூய்மையும் உண்மையான திபெத்தில் இருக்கிறோமோ என்ற ஆச்சர்ய உணர்வைத் தருகின்றன.
இதுபோக அந்த மக்கள் அணிந்திருக்கும் உடைகளும், அங்கே கிடைக்கும் உணவுகளும் திபெத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன. இங்கே வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கின்றனர். சோளம், அரிசி, ராகி உட்பட பலவிதமான தானியங்களை விளைவிக்கின்றனர்.
டாண்டன்லிங்கில் மூன்று ஆரம்பப் பள்ளிகள், நவீன மருத்துவமனை, திபெத்தியன் மெடிக்கல் அண்ட் ஆஸ்ட்ரோ இன்டிடியூட், வங்கி, அஞ்சலகம், டிராக்டர் பழுது பார்க்கும் கடை, கைவினைப் பொருட்ள் விற்பனையகம் உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் உள்ளன. இதுபோக டாண்டன்லிங்கில் இருநூறுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகளும் வசிக்கின்றனர்.
இங்கே ட்ஜாக்சென், டக்சம், டனா, தர்கயல், பாயே என்று ஐந்து புத்த மடாலயங்கள் இருக்கின்றன. ஐம்பதுகளில் திபெத்தில் இருந்த ட்ஜாக்சென் மடாலயம் தீயினால் அழிக்கப்பட்டது.
1980களில் 14வது தலாய்லாமா, டாண்டன்லிங்கில் டஜாக்சென் மடாலயத்தைக் கட்ட வேண்டும் என்று மத்திய மற்றும் கர்நாடகா அரசிடம் கோரிக்கை வைத்தார். இரு அரசுகளின் உதவியுடன் 1984ல் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து, 1991ல் முடிவடைந்தது. பிரமாண்ட புத்த விகாரை, புத்த பிக்குகள் தங்குமிடம், குருகுலம் என இந்த மடாலயம் பல ஏக்கர்களில் பரந்து விரிந்திருக்கிறது.
இங்கிருக்கும் புத்த விகாரை பகல் நேரத்தில் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் உள்ளே செல்ல அனுமதியுண்டு. திபெத்தியர்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ள விரும்புகிறவர்களும், இயற்கையை நேசிக்கிறவர்களும், அமைதியைத் தேடுபவர்களும், பயண ஆர்வலர்களும் கட்டாயமாக இங்கே வரவேண்டும். இந்தக் கிராமத்தையும், புத்த விகாரைகளையும், மடாலயங்களையும் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதுமானது. ஆனால், இங்கே கிடைக்கும் நினைவுகள் வாழ் நாட்களுக்கும் தொடரும்.
டாண்டன்லிங்கில் இருந்து த.சக்திவேல்
|