கணவரின் கிட்னியை விற்று காதலருடன் ஓட்டம்!
கடந்த சில நாட்களாக இணையத்தை அலற வைக்கும் வைரல் நியூஸ் இதுதான்.மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த ‘இந்தப் பெண்’ தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தியுள்ளார்.
![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/22.jpg)
அதுவும் தாலி கட்டிய கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்துக்கு விற்குமாறு ‘இந்தப் பெண்’ மிகுந்த அழுத்தத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.மனைவியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு கணவர் தனது சிறுநீரகத்தை விற்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் உறுப்பு வாங்குவோரை கண்டுபிடித்துள்ளனர்.இந்த உறுப்பை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்திவிடலாம் என்று ‘அந்த கணவர்’ தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். தனது உறுப்பு தானத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை எதிர்காலத்தில் தனது மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தலாம் என்று எண்ணிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். கணவரை இவ்வாறு வற்புறுத்தி உறுப்பை தானம் செய்ய வைத்ததற்கு பின்னால் மனைவி வேறொரு திட்டம் போட்டுள்ளார்.அவரது மனைவி - அதாவது ‘இந்தப் பெண்’ - தனது எதிர்காலத்தை பாரக்பூரைச் சேர்ந்த மற்றொரு நபருடன் திட்டமிட்டுள்ளார். ஓவியரான அந்த நபர் ஃபேஸ்புக் மூலம் இந்தப் பெண்ணுக்கு அறிமுகமானாராம். அது படிப்படியாக நட்பாகி, பிறகு காதலானதாம்.
காதலனுடன் தன் எஞ்சிய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாடவே திட்டமிட்டு கணவரை சிறுநீரகத்தை விற்கச் செய்துள்ளார் ‘இந்தப் பெண்’. மனைவியின் மீதுள்ள காதலில், தங்கள் மகளுக்காகத்தான் தன் சிறுநீரகத்தை விற்கப் போகிறோம் என்று நினைத்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கிட்னியை விற்றதன் வழியாகக் கிடைத்த ரூபாய் பத்து லட்சத்துடன் அவரது மனைவி - அதாவது ‘இந்தப் பெண்’ - தன் காதலருடன் தலைமறைவாகி விட்டாராம்.
விவரம் அறிந்து ஷாக் ஆன கணவர், போலீஸில் புகார் அளிக்கவே இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். டிஸ்கி: 1994ம் ஆண்டு முதல் இந்தியாவில் மனித உறுப்புகள் விற்பனை செய்வது சட்ட விரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
காம்ஸ் பாப்பா
|