சிறுகதை - டுவிஸ்ட்



சாரதி, தினம் ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி, அது இயக்குநர் சூர்ய பிரகாஷின் கவனத்திற்கு வர, ஒருநாள் அவனை நேரில் வரச் சொன்னார்.
“இத்தனை டைரக்டர்ஸ் இருக்கும் போது எதுக்காக என்கிட்ட சேரணும்ன்னு நினைக்குற..?’’“உங்க பிரசன்டேஷன் சார். ஒரு கதைய எப்படி சொல்றதுன்னு நீங்க எடுக்குற முடிவு, ஸ்கிரீன்ல ரொம்ப அழகா ஒர்க்கவுட் ஆகுது சார்...’’

“என்ன படிச்சுருக்க..?’’
“டி எம் ஈ...’’
“ஓகே. சொந்த ஊர்?’’
“நாகப்பட்டினம்...’’
“புத்தகம் படிக்குற பழக்கம் உண்டா..?’’
“ம்... உண்டு சார்...’’
“புடிச்ச ரைட்டர்..?’’
“பிரபஞ்சன்...’’
அவனை ஆச்சரியமாகப் பார்த்தவர், “சரி, நாளைக்கு வந்து ஜாய்ன் பண்ணிக்க...’’ என்றார்.

“தேங்க்யூ சார்...’’
அவன் எழுந்து வெளியில் வந்தான். நடந்த சம்பவத்தை அவனால் நம்ப முடியவில்லை. இது நிஜமா? அல்லது கனவா?

காரணம், இன்றைய தேதியில் சூர்ய பிரகாஷ் இந்தியாவின் நம்பர் ஒன் டைரக்டர்களில் ஒருவர். அவர் இயக்குகிற படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகும். இதுவரை எந்தப்படமும் தோற்றதில்லை. பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவரது டைரக்‌ஷனில் நடிக்க வரிசை கட்டி நிற்கிறார்கள். அவர் கண்ணசைத்தால் போதும் ஓடி வந்து விடுவார்கள்.ரூமிற்கு வந்தவன் முதலில் தனது அப்பாவிற்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னான். அவர் சந்தோஷப்பட்டார்.

டி எம் ஈ படித்தவன் சினிமாவிற்கு போகிறேன் என்று சொன்னதும் முதலில் கவலைப்பட்டவர் அவர்தான். சினிமா ஒருவரை வாழவைத்தால் நூறு பேரை சாய்த்துவிடும். ரொம்ப ரிஸ்க்கான தொழில். இதற்குப் போய் ஆசைப்படுகிறானே?

“இது சரியா வருமா சாரதி...’’ கவலையுடன் கேட்டார்.“எந்த தொழில்லதான் ரிஸ்க் இல்லப்பா... எல்லா தொழில்லயும் இருக்கு. திறமை உள்ளவங்க வெற்றி அடைவாங்க...’’

“உனக்கு சினிமாவைப்பத்தி என்ன தெரியும்..?’’

“வாரத்துக்கு நாலு படம் பாக்குறனே... அது போதாதா? அதெல்லாம் எதுக்கு பாக்குறேன்னு நினைச்சிங்க... பொழுது போக்குறதுக்கா..? இல்லப்பா. ஒவ்வொரு டைரக்டரும் எப்படி எடுத்துருக்காங்கன்றத வித்தியாசப்படுத்தி பார்க்கதான். அதுமட்டுமல்ல, சினிமா சம்பந்தப்பட்ட புக்ஸ் நிறைய படிச்சுருக்கேன். பிராக்ட்டிக்கலா என்னன்னு தெரியாதே தவிர, தியரிட்டிக்கலா நிறைய தெரியும்...’’

“உனக்கு நம்பிக்கை இருந்தா சரி...’’ என்று கூறி “நா எந்த வகைல ஹெல்ப் பண்ணணும்..?’’ என கேட்டார்.“ஆறு மாசம் நா சென்னைல தங்கி வாய்ப்பு தேடுறதுக்கு எக்கனாமிக்கலா சப்போர்ட்
பண்ணணும்...’’“சரி பார்த்துக்கலாம். நீ புறப்படுறதுக்கான ஏற்பாட்ட பண்ணு...’’

அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அவன், உதவி இயக்குநராக சேர்ந்தால் சூர்ய பிரகாஷிடம்தான் சேர வேண்டும் என்பதை உறுதி செய்து வைத்திருந்தான்.
அதனால், அவரது படங்களைப் பார்த்து, தினமும் ஐந்து வரியில் அவருக்கு மெசேஜ் அனுப்பினான். ஆரம்பத்தில் எரிச்சல் அடைந்த அவர், ஒருநாள், அவன் அனுப்பிய மெசேஜை படித்துப் பார்க்க, அவன் மேல் ஈர்ப்பு வந்தது.

சரி, அவனை அழைத்துப் பேசலாம் என்கிற முடிவிற்கு வந்தார். அதுதான் இப்போது நடந்தது. அப்பா “ரொம்ப சந்தோஷம்ப்பா... சீக்கிரமே டைரக்டராகி நம்ம ஊருக்கும் நம்ம குடும்பத்துக்கும் பெருமை சேர்...’’ என்றார்.“நிச்சயமாப்பா...’’மறுநாள் சூர்யபிரகாஷின் ஆபீஸிற்கு வந்தான் சாரதி. ஆபீஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல் காட்சி அளித்தது. 

அவனை தனது ரூமிற்கு அழைத்த சூர்யபிரகாஷ், கோ டைரக்டரை அழைத்து “இவன் சாரதி. நம்ம டீம்ல சேர்த்துக்கங்க...’’ என்றார்.“சரி சார்...’’ என்றவன், சாரதியை வெளியே அழைத்து வந்து, உதவி இயக்குநர்களின் வேலை என்ன என்பதையும், ஷூட்டிங் நடக்கும்போது டயம் கோட் எழுதும் வேலையை பார் என்பதையும், அதை எப்படி எழுத வேண்டும் என்பதையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்தான். மேலும் டைரக்டரிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரித்தான்.

அத்துடன், அடுத்த படத்திற்கான டிஸ்கஷன், முந்தைய படத்திற்கான எடிட்டிங், டப்பிங், ரீ ரெக்கார்டிங் என எல்லாவற்றிலும் கலந்து கொண்டான். அது அவனுக்கு புது உலகமாக காட்சி அளித்தது.கதை விவாதத்தின்போது, தனக்கு தோன்றிய கருத்துகளை தைரியமாக முன்வைத்தான். கோ டைரக்டர் “அவசரப்படாதிங்க சாரதி...’’ என அவனை கையடக்கினான்.
சூர்யபிரகாஷ் “கண்ட்ரோல் பண்ணாதிங்க. அவனுக்கு என்ன தோணுதோ சொல்லட்டும்...’’ என, அவன் தைரியமாக பேசுவதற்கு வழி வகுத்துக் கொடுத்தார்.

அப்போது முதல், அவன், கதையில் தனக்கு தவறு என்று தோன்றும் இடங்களை தைரியமாக சுட்டிக்காட்டினான். அது டைரக்டருக்கும் பிடித்திருந்தது. அந்தக் கதை முழுமை அடைந்ததும், அதைப் படமாக்கும் வேலையைத் தொடங்கினார் டைரக்டர். சாரதி ஷூட்டிங் நடக்கப் போவதை எண்ணி மிக மகிழ்ச்சியில் இருந்தான்.ஒரு நல்ல நாளில், பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கியது. ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் திரிஷா.  

சாரதி டயம் கோட் எழுதுவது மட்டும் இல்லாமல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தான். தனக்கு சந்தேகம் வரும்போது தனது சீனியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான்.
இருபத்தி ஐந்து நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. 

அவன் டைரக்டரை குளோஸாக வாட்ச் பண்ணினான். அவர் எப்படி ஃபீல் பண்ணுகிறார், எப்படி டயலாக் சொல்லித் தருகிறார், ஆர்ட்டிஸ்ட்களிடம் எப்படி ஃபேஸ் எக்ஸ்பிரஷன் வாங்குகிறார் என எல்லாவற்றையும் நுணுக்கமாக கவனித்தான்.

அதுபோல், ஒரு ஷாட் வைப்பதற்கு முன் டைரக்டரும் கேமராமேனும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் கவனித்தான். டெக்னிக்கலாக அவனுக்கு ஓரளவிற்கு புரிய ஆரம்பித்தது.

ஒரு காதல் காட்சி படமான போது, டைரக்டர் திரிஷாவிற்கு குளோசப் ஷாட் வைத்து “லெஃப்ட் லுக் பாருங்க...’’ என்றார்.

அவரும் கேமராவிற்கு இடது பக்கம் பார்க்க, சாரதி அவசரமாக டைரக்டர் அருகில் ஓடி வந்து “சார் லெஃப்ட் லுக் வராது. ரைட் லுக் குடுக்கணும்...’’
என்றான். அவர் சற்று கோபமாக அவனைத் திரும்பிப் பார்த்தார். கேமராமேனும், அவனுடைய சீனியர்ஸும் பதற்றத்துடன் அவனைப் பார்த்தார்கள்.

எவ்வளவு பெரிய டைரக்டர்? அவருக்கே லுக் சொல்லிக் கொடுக்கிறானா? அந்த அளவிற்கு தேறிவிட்டானா?அவன் விடாமல், “சார் டூ ஷாட்ல ஹீரோ ஹீரோயினுக்கு ரைட் சைடுலதான நின்னார். அப்ப ஹீரோயின் ரைட் லுக்தான குடுக்கணும்...’’ என்றான்.

டைரக்டர் தனது கோபத்தை அடக்கிக் கொண்டு “ஓ... ஸாரி...’’ என்று கூறி, திரிஷாவிடம் “ரைட் லுக் குடும்மா...’’ என்று கூறி அந்தக் காட்சியை எடுத்து முடித்தார்.

அன்று மாலை படப்பிடிப்பு முடியும் வரை பதற்றமாகத்தான் நடந்தது. டைரக்டர் கோபத்தில் யாரைக் கடித்துத் துப்பப்போகிறாரோ என ஒவ்வொருவரும் பயத்திலேயே வேலைபார்த்தார்கள்.
ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. அமைதியாக நடந்து முடிந்தது.  

டைரக்டர் “பேக்கப்...’’ சொல்லி காரில் ஏறும்போது, சாரதியை அருகே அழைத்து “என்னை ரூம்ல வந்து பாரு...’’ என்று கூறி புறப்பட்டுச் சென்றார். அவன் நடுநடுங்கிப் போனான். கோ டைரக்டர், “வாய வச்சுகிட்டு சும்மா இருக்காம, உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்..? நாங்கல்லாம் இல்ல..? அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேருறதுன்னா சும்மாவா..? எவ்வளவு கஷ்டப்பட்டு சேர்ந்த... அதை தக்க வச்சுக்க வேண்டாம். நா ஆரம்பத்துலயே சொன்னேன் இல்ல, டைரக்டர்கிட்ட மரியாதையா நடந்துக்கணும்ன்னு.

அத்தனைபேர் முன்னால அவருக்கே லுக் சொல்லிக் குடுக்குற? அவ்வளவு அவசரம். போய் ரூம்ல பாரு. சீட்ட கிழிச்சு வெளில அனுப்புவாரு...’’ என்றான். சாரதிக்கு சொரேல் என்று இருந்தது. 

அவர் காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டு இந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான். கண்கள் கசிய ஆரம்பித்தது.ரூமிற்கு வந்து குளித்து முடித்து ஃபிரஷ்ஷாகி டைரக்டரின் ரூமிற்கு வந்தான். மறுநாள் எடுக்கப் போகும் காட்சியை படித்துக் கொண்டிருந்தவர் அவனைப் பார்த்ததும் உட்காரச் சொன்னார். அவன் பயத்துடனேயே உட்கார்ந்தான்.

“ஸாரி சார்...’’ என்றான்.“எதுக்கு?’’
“ஷூட்டிங் ஸ்பாட்ல லுக் சொன்னதுக்கு...’’
“அதுல என்ன தப்பு இருக்கு..? அதுதான அசிஸ்டென்ட் டைரக்டரோட வேலை...’’
அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.“ஒவ்வொருத்தருக்கு ரெண்டு படம் ஒர்க் பண்ணா கூட எந்தப்பக்கம் நிக்கிற ஆர்ட்டிஸ்ட்டுக்கு என்ன லுக் குடுக்குறதுன்னு தெரியாது. நீ இவ்வளவு ஷார்ட் பீரியட்லயே கத்துகிட்டியே... குட்... குட்...’’அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு புரியவில்லை. கோபமாகக் கத்தி, வேலையை விட்டு அனுப்பி விடுவார் என எதிர்பார்த்து வந்தவனுக்கு அவர் பேசிய விதம் ஏமாற்றத்தைத் தந்தது.

“நீ கத்துகிட்டது போதும். போய் ஸ்ட்ரெய்ட்டா படம் பண்ண ட்ரை பண்ணு...’’
“சார்...’’“நிஜமாதான்ய்யா சொல்றேன். டயத்த வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத...’’
“இல்ல சார்... இந்த ஒரு படம் மட்டும்...’’
“அதெல்லாம் மூளை இல்லாதவங்களுக்கு. உன்கிட்ட கதை இருக்குல்ல..?’’
“ஒரு கதை எழுதி வச்சுருக்கேன் சார்...’’

“எந்த ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஆப்ட்டா இருக்கும்..?’’
“ஜெயம் ரவிக்கு ஆப்ட்டா இருக்கும் சார்...’’
“ஓகே... நா அவர்கிட்ட பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரேன். நீ போய் கதை சொல்லு...’’
“சரி சார்...’’ அவன் திகைத்துப் போய் நின்றான்.

“வேற என்ன..?’’“நீங்க தப்பா எதுவும் நினைச்சுக்கலையே...’’
“இன்னுமா உனக்கு புரியல..? நீ எலிஜிபுள் பர்சன்ய்யா. இதுக்கப்புறமும் வேலை பார்த்துகிட்டு இருந்த, சோம்பேறி ஆயிடுவ...’’“சரி சார்... தேங்க்ஸ் சார்...’’ என்று கூறி அவரை கையெடுத்து கும்பிட்டு விட்டு வெளியில் வந்தான். 

அவனுக்கு குழப்பமாக இருந்தது. தான் பேசியது, அவர் எடுத்த முடிவு இரண்டும் சரிதானா? இருபத்தி ஐந்து நாள் படப்பிடிப்பில், ஒரு காட்சியை எப்படி படமாக்க வேண்டும் என்பதை அவன் கற்றுக்கொண்டான் என்பது உண்மைதான். ஆனால், ஒரு முழுப் படத்தையும் தன்னால் இயக்க முடியுமா? எந்த தைரியத்தில் டைரக்டருக்கு அப்படி ஒரு நம்பிக்கை வந்தது என்று தெரிய வில்லை. கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது.

சொன்னது போல் ஜெயம் ரவியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்தார். அவனும் அவரை சந்தித்து தட்டுத் தடுமாறி கதையைச் சொன்னான்.
கதை அவருக்கு பிடித்துப் போனது. சில திருத்தங்களை மட்டும் சொல்லி, எப்போது ஆரம்பிக்கலாம் என கேட்டார். 

அவனுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது.
“உங்க டேட்ஸ் பொருத்து பண்ணிக்கலாம் சார்...’’“அடுத்த மாசத்துலேருந்து பிளான் பண்ணிக்கங்க...’’அவ்வளவுதான். அவன் சிறகு முளைத்து வானத்தில் பறக்க ஆரம்பித்தான். ப்ரொடியூஸர் யார் என்பதையும் அவரே சொன்னார்.படம் ஆரம்பமானது. ஐம்பது நாட்களில் படத்தை முடித்து ரிலீஸ் செய்தான்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
படத்தைப் பார்த்துவிட்டு சூர்யபிரகாஷ் அவனை
வீட்டிற்கு அழைத்தார்.
“என்னய்யா... நா சொன்னது சரியா போச்சா..?’’
“என்னால இன்னமும் நம்ப முடியல சார்...’’

“எனக்கு தெரியும்ய்யா... யாரால படம் பண்ண முடியும்... யாரால படம் பண்ண முடியாதுன்னு. இத்தனை வருஷ அனுபவத்துல இதைக்கூட கண்டு பிடிக்க முடியலன்னா எப்படி? அன்னிக்கு அத்தனை பேர் முன்னால நீ லுக் தப்புன்னு சொன்னதும் ஒரு செகண்ட் எனக்கு கோபம் வந்துது. உடனே அந்தக் கோபத்த அடக்கிகிட்டு நீ சொல்றது கரெக்டுதானேன்னு யோசிச்சேன்.

ஒருவேளை நீ சொல்லாம விட்டுருந்தா, இல்ல சொல்லி நா கேட்காம விட்டுருந்தா, மறுபடியும் அதே லொகேஷனுக்கு போய் அந்த சீன மறுபடியும் ஷூட் பண்ணணும். அது டபுள் வேலை. எனிவே, எல்லாம் நல்லதுக்குதான் நடந்துருக்கு.. வாழ்த்துக்கள்ய்யா...’’இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

சாரதிக்கு, அவரிடமிருந்து ஒரு விஷயம் புரிந்தது. கோபத்தை அடக்கி ஆள வேண்டும். எதையும் நேர்மறையுடன் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய டைரக்டராக வளர்ந்து நிற்கிறார் என்றால் சும்மாவா?.

இயக்குநர் மணிபாரதி