Must Watch



ஃபியர்

பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற தெலுங்குப் படம், ‘ஃபியர்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. ஜாலியான இளம் பெண், சிந்து. அவளுக்கு சம்பத் என்ற காதலன் இருக்கிறான். எந்தப் பிரச்னையும் இல்லாமல் சிந்துவின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வேலை விஷயமாக சம்பத் வேறு ஒரு இடத்துக்கு இடம் மாறுகிறான். 

அதற்குப்பிறகு சிந்துவின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. சிந்துவின் வாழ்க்கையில் விசித்திரமான, அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. யாரோ தன்னைப் பின்தொடர்ந்து வருவதைப் போல உணர்கிறாள் சிந்து. ஆனால், அவளால் தன்னைப் பின்தொடந்து வருபவரை அடையாளம் காண முடியவில்லை.

உண்மையில் சிந்துவுக்கு என்ன நடக்கிறது? சிந்துவின் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அவளைப் பின்தொடர்கிறதா? தனது காதலனை மீண்டும் சந்தித்தாளா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.வித்தியாசமான சைக்காலஜிக்கல் திரில்லிங் அனுபவத்தைத் தருகிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ஹரிதா ஹோஹினேனி.

பணி

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய மலையாளப்படம், ‘பணி’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.திருச்சூரிலேயே செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர், கிரி. பிசினஸ்மேன் மற்றும் தாதாவாக வலம் வரும் கிரிக்கு கௌரி என்ற மனைவி இருக்கிறார். இன்னொரு பக்கம் இரண்டு இளைஞர்கள் பணத்துக்காக கொலை செய்துவிட்டு, ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டுக்கு கௌரி செல்கிறார். அங்கே வரும் அந்த இளைஞர்கள் கௌரியிடம் மோசமாக நடந்துகொள்கின்றனர். அவர்களை அடித்து, மிரட்டி
விடுகிறார் கிரி. நாட்கள் நகர்கின்றன. 

கிரி இல்லாத போது வீட்டுக்குள் நுழைகின்ற இளைஞர்கள், வேலையாட்களை அடித்துவிட்டு, கௌரியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகின்றனர்.

இதை கிரியால் தாங்க முடிவதில்லை. கிரி எப்படி அந்த இளைஞர்களைப் பழிவாங்குகிறார் என்பதே திரைக்கதை.இதுபோல நிறைய கதைகள் வந்திருந்தாலும், எங்கேயும் சலிப்பு தட்டாமல் சுவாரஸ்யமாகப் படத்தைக் கொண்டு போயிருப்பது சிறப்பு. கிரியாக நடித்து, படத்தையும் இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ்.

லுக்கா’ஸ் வேர்ல்டு

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘லுக்கா’ஸ் வேர்ல்டு’. மருத்துவர் சொன்ன தேதிக்கும் முன்பே பிரசவத்துக்காக மருத்துவமனைக்குக் கணவனுடன் வந்து சேர்கிறாள் பார்பரா. அவளுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தையைப் பார்க்க விரும்புகிறாள் பார்பரா. ஆனால், மூளையில் வீக்கம் இருப்பதால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருக்கின்றனர்.

குழந்தைக்கு லுக்கா என்று பெயர் வைக்கின்றனர். லுக்கா வளர ஆரம்பிக்கிறான். அவன் வளர ஆரம்பிக்கும்போதே மூளையில் ஏற்பட்ட வீக்கத்தின் பாதிப்பு வெளிப்பட ஆரம்பிக்கிறது.
செரிபிரல் பால்சி எனும் பெரு மூளை வாதத்தால் லுக்கா அவதிப்படுவதை பார்பராவால் தாங்க முடிவதில்லை. இந்த நோய்க்கு சரியான சிகிச்சை எங்கும் இல்லை. இருந்தாலும் எல்லா இடங்களிலும் மகனுக்கான சிகிச்சையைத் தேடி அலைகிறாள் லுக்கா.

இந்தியாவில் மகனைக் குணப்படுத்த முடியும் என்று அறிகிறாள். இந்த சிகிச்சை ஒரு பரிசோதனை முயற்சிதான். இருந்தாலும் நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு வருகிறது பார்பராவின் குடும்பம்.

லுக்கா குணமடைந்தானா என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். படத்தின் இயக்குநர் மரியானோ செனிலோ.

த ஸ்டோரி டெல்லர்

‘ஹாட்ஸ்டாரி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிவரும் இந்திப்படம், ‘த ஸ்டோரிடெல்லர்’. மகிழ்ச்சியான மனிதர் தாரிணி. மகனுடன் வெளிநாடு சென்று ஜாலியாக இருக்கலாம். ஆனால், அதை அவர் விரும்புவதில்லை. முதலாளித்துவத்துக்கு எதிரானவர். அதனால் எந்த வேலையிலும் அவர் நிரந்தமாக இருப்பதில்லை. வருடத்துக்கு குறைந்தபட்சம் பத்து வேலைகளாவது மாறிவிடுவார். மீன்களை விரும்பிச் சாப்பிடக்கூடியவர்.

இப்படி தாரிணியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமானது, தாரிணி ஒரு சிறந்த கதைசொல்லி. அதுவும், தானே புனைந்து கதைகளைச் சொல்பவர். 

தான் கதைகளாகச் சொல்வதை அவர் எழுதுவதில்லை. இன்னொரு பக்கம் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார் பெரும் பிசினஸ்மேனான ரத்தன். அவருக்கு கதை சொல்லும் வேலைக்குச் செல்கிறார் தாரிணி. இருவருக்குமிடையிலான உறவும், தாரிணி சொல்கின்ற கதைகள் என்னவாகின்றன என்பதும்தான் மீதிக்கதை.

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து, இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. தாரிணி மற்றும் ரத்தன் கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு அவ்வளவு இயல்பு. படத்தின் இயக்குநர் ஆனந்த் மகாதேவன்.

தொகுப்பு: த.சக்திவேல்