இந்திய அரசியல் சாசனத்துக்கு 75 வயது!



1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் இந்திய அரசியல் சாசனம் எனும் ‘இண்டியன் கான்ஸ்டிடியூஷன்’ ஏற்கப்பட்ட தினத்தைத்தான் ‘இந்தியக் குடியரசு’ தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
இந்த ஜனவரியில் நாம் கொண்டாடியது இந்தியக் குடியரசின் 75ம் ஆண்டு நிறைவு நாள். எத்தனையோ நாடுகளில் அரசியல் சாசனம் இருந்தாலும் அந்த நாடுகளைப் போல இல்லாமல் பல்வேறு இன, மொழி, மதம் கொண்ட இந்திய தேசத்தில் ஒரே ஒரு சட்டம்தான் நம்மை வழிநடத்துகிறது என்றால் அது இந்த அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தில்தான் இருக்கிறது.
அந்த முக்கியத்துவத்துக்கும் காரணம் அந்த சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பாபாசாகேப் அம்பேத்கர்.

ஒரிஜினலான இந்திய அரசியல் சாசனத்தில் 8 அட்டவணைகள் (ஷெட்யூல்), 22 பகுதிகள் (பார்ட்ஸ்), 395 சரத்துக்கள் இருந்தன. அரசியல் சாசனத்தின் முக்கியமான ஒரு இரு பிரிவுகள் ‘அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டு சட்டங்கள்’. 

அடிப்படை உரிமைகளில்தான் பேச்சு சுதந்திரம், உயிர்வாழ்வதற்கான சுதந்திரம், வழிபாட்டு உரிமை, சமத்துவம் எல்லாம் இருக்கிறது.வழிகாட்டு சட்டங்களில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு சில சட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் வேறுபடும்.

ஆனால், இந்த அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டு சட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் கட்டுப்படுத்துவது அந்த அரசியல் சாசனத்தில் இருக்கும் முகப்பு (பிரியாம்பில்)
வாசகங்கள்.

*அது என்ன?

‘இந்திய மக்களாகிய நாம், இந்த அரசியல் சாசனம் மூலம் ‘இந்திய இறையாண்மையுள்ள’ மக்களாட்சி குடியரசை உருவாக்கி, அந்தக் குடியரசின் மூலம் ஒவ்வொரு குடிநபருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கிடைக்கும்படி செய்யவேண்டும்...’ ஆனால், இந்திராகாந்தி பிரதமராக இருந்த 1975களில் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தபோது இந்த அரசியல் சாசன முகப்பில் சில திருத்தங்களைச் செய்தார். அதில் ஒன்று அரசியல் சாசனத்தின் முகப்பில் 1976ம்ஆண்டு செய்த திருத்தம்.

இந்தத் திருத்தம் இறையாண்மையுள்ள என்பதோடு சோஷலிச என்பதையும் சேர்த்தது. மக்களாட்சி குடியரசை மதச்சார்பில்லாத மக்களாட்சி குடியரசு என்று மாற்றியது.

இந்தியாவின் எமர்ஜென்சி கெடுபிடிகளுக்கு மக்கள் அடுத்த தேர்தலில் இந்திராவுக்கு பதிலடி கொடுத்து ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தாலும் இந்த அரசியல் சாசனத்தில் இந்திரா கொண்டுவந்த சோஷலிச மற்றும் மதச்சார்பின்மை வாசகங்கள் தேவையானதாக பிறகு பல்வேறு நபர்களால் பார்க்கப்பட்டது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற இன்னும் பல நாடுகள் மதச் சார்புள்ள அரசியல் சாசனங்கள் மூலம் மைனாரிட்டிகளான பல இனத்தாரை கீழ் நிலையில் வைத்திருக்கும் நிலையில் இந்திரா அரசியல் காரணங்களுக்காக சோஷலிச மற்றும் மதச்சார்பின்மை வாசகங்களைக் கொண்டுவந்தாலும் அது இந்தியா போன்ற பல இன மக்கள் வாழும் ஒரு தேசத்தில் தேவையான ஒன்றாகவே பார்க்கப்படுவதால், இந்த இரண்டு வாசகங்களுக்கும் மக்களும் நீதிமன்றங்களும் ஆதரவு தெரிவித்ததால் இவை என்றுமே நீடிக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.

சரி, இந்திய அரசியல் சாசனம் காலனிய மனப்பான்மையினால் உருவாக்கப்பட்டது, அதை திருத்தவேண்டும் என்று சில தரப்பினர் கோருவது சரியா?

இந்திய அரசியல் சாசனம் அம்பேத்கர் தலைமையில் பல்வேறு நபர்களால் உருவாக்கப்பட்டது. இந்திய சாசனம் நம்மை ஆண்ட பிரித்தானியர் சட்டத்தின் காப்பி பேஸ்ட் எல்லாம் கிடையாது.
உதாரணமாக இந்திய சாசனம் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா என்று 60 நாட்டு சட்டங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து உருவாக்கப்பட்டது என்று சொல்வார்கள்.
இந்திய சாசனத்தில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோகரத்துவம் போன்ற வாசகங்கள் 1789ம் ஆண்டு ஃபிரான்ஸ் தேசத்தின் மன்னர் ஆட்சி ஒழிப்பில் ஒலித்த வாசகங்கள்.

ஆனாலும் இந்த வாசகங்கள் அமெரிக்காவின் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றதால் அதன் முக்கியத்துவம் கருதி அண்ணல் அம்பேத்கர் அந்த வாசகத்தை இந்திய சாசனத்தின் முகப்பில் வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. 

அண்ணல் அம்பேத்கர் ஒருமுறை இந்திய அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசுகையில் ‘ஒரு நல்ல அரசியல் சாசனத்தை ஒரு மோசமான ஆட்சியாளர்களால் சிதைக்கமுடியும் என்றால் ஒரு மோசமான அரசியல் சாசனத்தை ஒரு நல்ல அரசியல் நிர்வாகி சிறப்பாக மாற்றிவிடுவார்’ என்று சொன் னது எல்லா அரசியல் சாசனங்களுக்குமே பொருந்தக்கூடியது.

இந்திய அரசியல் சாசனமும் முற்றும் முழுதாக அப்பழுக்கற்றது என்று சொல்லமுடியாவிட்டாலும் அதன் குறைகளை மக்களின் விருப்பங்கள் - எதிர்பார்ப்புகளை வைத்து திருத்தமுடியும் என்பதே இந்திய சாசனத்தின் பெருமையாக இருக்கிறது.

இந்திய சாசனத்திலும் இதுவரை 106 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் சில திருத்தங்கள் இந்தியர்களுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சட்ட விற்பன்னர்கள் சொல்கிறார்கள்.

இந்திய அரசியல் சாசனம் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டது. இந்த வார்த்தை - வாசகங்களில் இருக்கும் ‘செய்தி’களை பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல.
ஆனால், காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை என்பதால்தான் அதற்கும் வழிவகை செய்துகொடுத்திருக்கிறது சாசனம். உதாரணமாக சாசனத்தின் அடிப்படை உரிமைகளில் எல்லாம் கைவைக்கமுடியாது. ஆனால், வழிகாட்டு சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இந்த திருத்தங்களுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கவேண்டும். சட்டம் இயற்றும் அல்லது அதற்கு ஒப்புதல் அளிக்கும் இந்த இரண்டு மன்றங்களும் இரண்டு வகையான மாற்றங்களை அரசியல் சாசனத்தில் கொண்டுவருகின்றன. 

ஒன்று அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவது. மற்றது புதிதாக சட்டங்களை இயற்றுவது. சாசனத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம், அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் உச்சநீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால், புதிதாக சட்டம் இயற்றுவது கொஞ்சம் சுலபமான வேலை. அதற்கு சில விதிமுறைகள் உண்டு.

எடுத்துக்காட்டாக இரு அவைகளிலும் பெரும்பான்மை வகிக்கும் கட்சிகள் புதிதாக இயற்றும் சட்டங்களை எதேச்சதிகாரப்போக்கில் கொண்டுவரலாம்.  ஒரு புதிய சட்டத்துக்கு பாராளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரை அவசியம். 

இதில் எல்லாக் கட்சி உறுப்பினர்களுமே இடம்பெறுவதால் இதன் ஒப்புதல் மிக அவசியம். ஆனால், கடந்த பத்தாண்டு ஆட்சியில் அதிகமான புதிய சட்டங்கள் இந்த பாராளுமன்றக் குழுவின் பரிந்துரை இல்லாமலேயே இயற்றப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இதனால்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில்கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்துக்கு ஆபத்து என்று பிரசாரம் செய்தார். கடந்த தேர்தலில் ஆளும் பாஜக நினைத்த அளவில் சீட்டுக்களை பெறமுடியாததும் இந்த அரசியல் சாசன பாதுகாப்பு எனும் ராகுல் காந்தியின் பிரசாரத்தினால்தான் என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்தியாவை ஆட்சி செய்வது கட்சிகள் அல்ல, நமது அரசியல் சாசனம்தான். இதனால்தான் இந்தியாவில் மற்ற நாடுகளைப் போலில்லாமல் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்வார்கள்.
 
இந்த சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் ஒரு குடியரசின் நான்கு தூண்கள் அவசியமானது. ஒன்று அரசு அதிகாரிகள், இராணுவம், காவல்துறை உட்பட்ட அரசு இயந்திரம். இரண்டாவது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்ற சட்டமன்ற, அமைச்சரவை. மூன்றாவது நீதிமன்றம். 

நான்காவது ஊடகம், குடிமைச் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள். இவற்றில் ஒன்று சறுக்கினாலும் சட்டத்தின் ஆட்சி தள்ளாடும். இந்திய அரசியல் சாசனம் என்பது உரிமைகள் மட்டும் பேசும் ஆவணமல்ல. அது கடமைகள் பற்றியும் விலாவாரியாக விளக்குகிறது.

கடமைகளைச் செய்தால் உரிமைகள் தானாக வந்து சேரும் என்று சொல்வார்கள். மக்களாட்சியின் இந்த நான்கு தூண்களும் கடமை தவறாமல் இருக்கும்போதுதான் இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு இன்னும் ஆயிரம் ஆண்டானாலும் பெருமை இருக்கும்.

டி.ரஞ்சித்