எங்களுக்கு இன்னொரு பெயர் இருக்கு!



மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு. அதுதான் அவர்களின் முதல் அடையாளம். அந்தப் பெயரை பெற்றோர் சூட்டுவர். ஆனால், கலைஞர்கள், குறிப்பாக திரைப்படக் கலைஞர்களுக்கு இரண்டாம் பெற்றோர் உண்டு. 
ஆம், ஒரு மனிதனை சினிமா கலைஞனாக மாற்றுகிறவரை இரண்டாம் பெற்றோர் எனலாம்.திரைப்படக்கலையைப் பொறுத்தவரை அது இயக்குநர்களின் ஊடகம். ஒரு படத்தின் இயக்குநர்தான் எல்லாம். ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் ‘கேப்டன் ஆஃப் த ஷிப்’.  

அப்படி அவர்கள் தங்கள் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பெயர்களை கவர்ச்சிகரமாக மாற்றுவதுண்டு. அப்படி பெயர் மாற்றத்துடன் நடித்து ஜெயித்தவர்களும் உண்டு தோற்றுப்போனவர்களும் உண்டு. சிலர் தங்கள் பெயரை ராசிக்காக மாற்றிக்கொள்வார்கள். சிலர் ஏற்கனவே அதே பெயரில் நடிகர், நடிகைகள் இருந்தால் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வார்கள்.
கர்நாடகாவிலிருந்து வந்த ஓர் இளைஞரை அடையாளம் கண்ட இயக்குநர் கே.பாலசந்தர் அவருக்குச் சூட்டிய பெயர்தான் ரஜினிகாந்த். அவருடைய இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட். தன் இயற்பெயரை மறக்குமளவுக்கு ரஜினி இன்றளவும் தன்னுடைய சினிமா தகப்பன் கே.பி. சூட்டிய பெயரிலேயே வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் முன்னோடியாக த் திகழும் இவருக்கு பத்ம விருதுகள், கலைஞானி, உலக நாயகன் உட்பட பல பட்டப் பெயர்கள் கிடைத்தன.  ஆனால், கமல்ஹாசன் தன்னை ‘உலக நாயகன்’ என்றும் ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்றும் அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார். அதில் ‘ரசிகர்கள், ஊடகவாசிகள், திரைத்துறையினர், கட்சித் தொண்டர்கள் அனைவரும் கமலஹாசன் என்றும் ‘கே எச்’ என்றும் கமல் என்றும் தனது பெயரைப் பயன்படுத்தினாலே போதுமானது என்று அறிக்கை வாயிலாகத் தெரிவித்ததோடு, சினிமா கலை என்பது தனிமனிதனைவிட பெரியது.

அந்தக் கலையை மேலும் மேலும் கற்று பல பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான்’ என்று பட்டப் பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர் விஜய். அவருடைய அதிகாரபூர்வ பெயர் ஜோசப் விஜய். திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கும்போது, ஜோசப் விஜய் வெறும் விஜய் ஆனார்.பொதுவெளியில் பேசுவதை தவிர்த்துவிட்டு தன் படங்கள் வழியாக பேசுவதை கிட்டத் தட்ட கொள்கையாகவே கடைப்பிடித்து வருபவர் அஜித்.

சினிமா, கார் பந்தயம் என்று பிசியாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவருடைய ரசிகர்கள் அஜித் மீது கொண்ட அன்பின் காரணமாக அவருடைய இயற்பெயரை மறக்கச் செய்யுமளவுக்கு ‘தல’ என்று அழைத்து மகிழ்ந்தார்கள். இந்த சூழ்நிலையில் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்றும், ‘ஏகே’ அல்லது ‘அஜித்’ என்று அழைத்தால் போதும் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

‘என்றும் மார்க்கண்டேயன்’ என்ற புகழைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் சிவகுமார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட அவர் தன் மூத்த மகனுக்கு சூட்டிய பெயர் சரவணன். சினிமாவுக்கு வரும்போது சூர்யா என்ற புதிய நாமகரணத்தை சூட்டிக் கொண்டார் சரவணன்.

சினிமாவுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்க தயாராக இருப்பதோடு அதை பல படங்களில் நிரூபித்தவர் விக்ரம். இவருடைய இயர்பெயர் கென்னடி ஜான் விக்டர். சினிமாவில் ஆகச் சிறந்த கலைஞராக வலம் வரும் அதேவேளையில் இவருடைய மகன் துருவ் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

இவரும் அப்பாவின் சினிமா பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு துருவ் விக்ரமாக மாறியுள்ளார்.  மண் சார்ந்த படங்கள் வழியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கஸ்தூரி ராஜா. இவருடைய இளைய மகன் பிரபுவை ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷ் என்ற புதிய பெயர் சூட்டி திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் கலை வாரிசாக சினிமாவுக்கு வந்தவர் ஜீவா. இவருடைய இயற்பெயர் அமர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேதிராகத். இவருக்கு ‘12 பி’ படத்தில் ஆர்யா என்று பெயர் சூட்டியவர் அதன் இயக்குநர் ஜீவா.நடிகர்களிலாவது சிலர் மட்டும்தான் வேறு பெயர்களில் வெளியே வருவார்கள். 

தமிழ்த் திரையுலகின் நாயகிகள் பெரும்பாலும் சொந்தப் பெயரைத் துறந்து விட்டு இன்னொரு பெயருடன்தான் ஒப்பனையைத் தொடங்குகிறார்கள்.இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய அனைத்து நடிகைகளுக்கும் ராதிகா, ராதா, ரஞ்சனி என ஆர் வரிசையில் பெயர் சூட்டினார்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் நயன் தாரா. இவருடைய இயற்பெயர் டயானா மரியம் குரியன்.‘புன்னகை அரசி’ பட்டத்துக்கு சிறப்பு சேர்க்கும்விதமாக தன் புன்னகையால் ரசிகர்களை கிறங்கடித்தவர் சினேகா. இவருடைய இயற்பெயர் சுகாசினி ராஜாராம். சினிமாவை விட்டு குடும்பம், பிசினஸ் என்று தனி டிராக்கில் பயணித்தாலும் ரசிகர்களுக்கு இவர் மீது அதே சினேகம் உண்டு என்பதை மறுக்க முடியாது.

அறிமுகமாகும்போதே பெயரை மாற்றிக்கொண்டு வருகிறவர்கள் ஒரு வகை என்றால், ஒரு பெயரால் புகழ் பெற்ற பின்பும் அந்தப் பெயரை முழுமையாக மாற்றுவது அல்லது அந்தப் பெயரில் முன்னொட்டு பின்னொட்டுகளைச் சேர்ப்பது என்பது இன்னொரு வகை.இவர்களுக்குப் பெயர் சூட்டுபவர்கள் பெரும்பாலும் இயக்குநர்கள் அல்ல. 

ஜோதிடர்கள்.தன் சொந்தத் திறமையால் பன்முகத் திறமையாளராக மிளிர்ந்தவர்; கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என எல்லாத் துறைகளிலும் அவற்றில் தனித்தனியாகக் கோலோச்சிக் கொண்டிருந்தவர்களுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாகப் பயணித்தவர்; எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமெனில் இளையராஜா இசை உலகின் உச்சத்தில் இருந்த நேரத்திலும் தன்னுடைய இசையை இண்டு இடுக்குகள் வரை கொண்டு சேர்த்த திறன் கொண்டவர் டி.ராஜேந்தர்.

அவர் நீண்ட புகழுக்குப் பிறகு விஜய டி.ராஜேந்தர் எனப் பெயர் சூட்டிக் கொண்டார். அது நிலைக்கவில்லை, நீடிக்கவில்லை என்பது வேறு கதை.‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் எனப் புகழ்பெற்ற அர்ஜுன், தன் பெயரை அர்ஜுன் சார்ஜா என மாற்றிக் கொண்டார்.தனக்கென ஒரு புதியபாதையை வகுத்துக் கொண்டு திரைத்துறையில் பயணித்து வெற்றிக் கொடி நாட்டிய பார்த்திபன் அண்மைக்காலமாக தன் பெயரை இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று அழைக்கச் சொல்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. இவர் சமீபகாலமாக தனது பெயரை ‘ஆத்மன் சிம்பு’ என்றே குறிப்பிட்டு வருகிறார்.ஒரு சில நடிகர்களுக்கு அவர்கள் நடித்த படப் பெயர் அல்லது கதாபாத்திரங்களின் பெயர் உடன் சேர்ந்து கொள்ளும். 

எடுத்துக்காட்டாக ரவி ‘நிழல்கள்’ படத்தில் நடித்ததால் ‘நிழல்கள்‘ ரவி ஆனார்.‘டேனியல்’ என்கிற கதாபாத்திரப் பெயர் புகழ் பெற்றதால் பாலாஜி, டேனியல் பாலாஜி ஆக மாறினார்.இப்படி ஏதேனும் ஒரு காரணத்துக்காக தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது சினிமா கலைஞர்களிடையே தொடர்கிறது.

சமீபத்தில் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டதுதான் இப்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.எடிட்டர் மோகனின் மகன் ரவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்தின் பெயர் ‘ஜெயம்’. 

அந்தப் படம் வெளியான ஆண்டு 2003.அப்போது முதல் ‘ஜெயம்’ ரவி என்றே பெயர் போட்டுக் கொண்டிருந்த அவர் 22 ஆண்டுகளுக்குப் பின் ‘என் பெயரை மாற்றிக் கொண்டேன், இனி அந்தப் பெயரிலேயே என்னை அழைக்க வேண்டும்’ என்று தனது ரசிகர்களிடமும், மீடியாக்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இனிமேல், நான் ரவி / ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். ‘ஜெயம் ரவி’ என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து பெயரை திடீரென மாற்றிக் கொள்வது ஏன் என்கிற காரணத்தை அவர் கூறவில்லை.ஆனால், ‘இந்தப் பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை, திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும். என் கனவு, மதிப்புகளுடன் புதிய பயணத்தைத் தொடங்கும்’ என்று மட்டும் கூறியிருக்கிறார்.

அண்மையில் அவர் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மனைவியை விவாகரத்து செய்கிறேன் என்று அறிவித்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதேபோல அவருடைய திரைப்பயணத்தில் அவருடைய மாமியார் தயாரிப்பில் சில படங்கள் நடித்தார். 

அவற்றில் கடைசியாக வெளியான படம் ‘சைரன்’. அந்தப் பட வெளியீட்டின்போது பெரும் தொகை தேவைப்பட்டது என்பதால் அத்தொகைக்குப் பொறுப்பேற்று ரவி கையெழுத்துப் போட்டதால்தான் படம் வெளியானது. இதனால் கசப்பில் இருந்தார் என்று சொல்லப்
பட்டது.

இவ்விரு நிகழ்வுகளுக்குப் பிறகு பெயர் மாற்றம், அதில் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல என்கிற காரணங்கள்,அதோடு தனியாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஆகியன சில செய்திகளை உணர்த்துகிறது.இதன்மூலம் வெறுமனே ஜோதிடம் பார்த்து பெயர் மாற்றம் செய்யவில்லை... இதற்குப் பின்னே ஒரு பெரும் வலி இருக்கிறது என்பதும் புரிகிறது.

பெயர் மாற்றங்களில் இதுவரை சொல்லப்பட்ட காரணங்களில் இது புதிது என்பதால் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.அப்படி ரவி மோகன் என்ற புதிய பெயரில் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ பெரும் வெற்றி அடைந்தது. அத்துடன் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’, ‘பராசக்தி’ போன்ற படங்களின் அறிவிப்பு வெளியானது. 

இதில் ‘பராசக்தி’யில் முதன் முறையாக வில்லனாக தோன்றவுள்ளதாக சொல்லப்படுகிறது.பெயர் மாற்றம் சிலருக்கு சாதகமாகவும், வெற்றியையும் தரலாம். பெயர் மாற்றுவது அவரவர் உரிமை. அந்த வகையில் பெயர்கள் மாறலாம். மாறியவர்களின் முடிவுக்கு மரியாதைகொடுத்து அந்த மாற்றங்களின் பெயரிலேயே இனி அவர்களை அழைப்போம்!

எஸ்.ராஜா