பள்ளிக்குச் செல்வதே சவால்!
‘‘உங்களைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்...’’ என்று குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உத்தரகாண்டில் உள்ள முனிசியாரி கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் செல்வதே கடினமான விஷயமாக இருக்கிறது. ஆம்; பள்ளிக்குச் செல்லும் பாதையில் குறுக்கே ஒரு நதி ஓடுகிறது. ![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/21.jpg) அந்த நதியைக் கடந்து செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. அதனால் கரையில் இரு பக்கங்களிலும், அந்தரத்தில் ஒரு கயிறைக் கட்டி, டிராலியின் மூலமாக குழந்தைகள் நதியைக் கடந்து செல்கின்றனர்.
அந்த டிராலியைக் கைகளாலே இழுத்தால்தான் ஒரு கரையிலிருந்து, மறு கரைக்கு நகரும். அதையும் அந்தக் குழந்தைகளே செய்துகொள்ள வேண்டிய அவல நிலை. இப்போது முனிசியாரி கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவிகள் மட்டுமே இந்த டிராலியைப் பயன்படுத்தி, பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.
பத்திரிகையாளர் ஒருவர் அந்த மாணவிகள் ஆற்றைக் கடந்து செல்லும் காட்சியை வீடியோவாக்கி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருக்கும் நாட்டில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதே ஒரு சவாலாக இருப்பது முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
த.சக்திவேல்
|