பாம்பு மனிதன்!
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பது என்றைக்கும் மாறாத பழமொழி. காரணம், பாம்பு கடித்தால் உயிர் போய்விடும் என்ற பயம். இப்படியான ஒரு சூழலில்தான் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உட்பட, பல பாம்புகளிடம் 172 முறை கடி வாங்கி, உயிர் பிழைத்து 100 வருடங்கள் வாழ்ந்தவர் பில் ஹாஸ்ட். மட்டுமல்ல, அவரது இரத்தம் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்ட பலரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. பில்லை ‘பாம்பு மனிதன்’ என்றே அழைக்கின்றனர்.
![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/12.jpg) யார் இந்த பில் ஹாஸ்ட்?
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் நகரில், 1910-ம் வருடம் பிறந்தவர் பில் ஹாஸ்ட். பள்ளியில் படிக்கும்போது சாரணர் இயக்கத்தில் இருந்தார். ஒரு கோடை காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாரணர் முகாமில் கலந்துகொண்டார் பில். அப்போது அவரது வயது 11. ![](http://kungumam.co.in/kungumam_images/2025/20250214/12a.jpg) அந்த முகாம் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்தது. அங்கே நிறைய பாம்புகளைக் காண்பதற்கான வாய்ப்புகள் பில்லுக்குக் கிடைத்தது. பொதுவாக பாம்புகள் பயத்தைத்தான் உண்டாக்கும். ஆனால், பில்லுக்கோ பாம்புகளின் மீது காதல் மலர்ந்தது. நாளுக்கு நாள் பாம்புகளின் மீதான காதல் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால், பாம்புகளை நேரடியாகப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. அடுத்த வருடமும் கோடை காலத்தில் நடந்த சாரணர் முகாமிற்கு ஆர்வத்துடன் சென்றார். அந்த முகாமின்போது டிம்பர் ரேட்டல்ஸ்னேக் என்ற வகை பாம்பைப் பிடிக்க முயற்சிக்கும்போது, அந்தப் பாம்பு பில்லைக் கடித்துவிட்டது.
இதுதான் பில் வாங்கிய முதல் பாம்புக்கடி. நான்கு மைல் தொலைவில் முகாம் நடந்த இடம் இருந்தது. பாம்பு கடித்த இடத்திலிருந்து விஷம் பரவாத மாதிரி கட்டு போட்டுக்கொண்டு, நடந்தே முகாமுக்குச் சென்றார் பில். அங்கே பாம்புக்கடிக்கான முதல் உதவி செய்யப்பட்டது. அவரது கைப்பகுதியில் வீக்கம் ஏற்பட, மருத்துவரிடம் விரைந்தார்.
ஆனால், சிகிச்சை பெறாமலேயே அந்த வீக்கம் குறைந்தது. பில்லுக்கு எதுவும் ஆகவில்லை. அதே வருடத்தில் நான்கு அடி நீளமுள்ள காப்பர்ஹெட் என்ற வகை பாம்பு பில்லைக் கடித்தது. ஆனால், இந்த முறை பாம்புக்கடிக்கான மருந்துகளைத் தன்னுடன் வைத்திருந்தார். அவரது நண்பர் விஷமுறிவு மருந்தை பில்லுக்குச் செலுத்தினார். இருந்தாலும் ஒரு வாரம் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றபிறகே முழுமையாக குணமடைந்தார். பில்லின் பெற்றோர்கள், நண்பர்கள் என அவருக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் பாம்புடனான விளையாட்டு வேண்டாம் என்று அறிவுரை செய்தனர். குறிப்பாக அவரது அம்மா பில்லுடன் சண்டையே போட்டார். ஆனால், பில் கேட்கவில்லை.
பாம்புக்கடி அவரை துன்பப்படுத்தினாலும், பாம்புகளின் மீது வெறுப்பை உண்டாக்கவில்லை. உண்மையில் அவருக்குப் பாம்புகளின் மீதான ஆர்வம் அதிகமானது. விதவிதமான பாம்புகளைச் சேகரிக்க ஆரம்பித்தார். அம்மாவின் அனுமதியின்றி அந்த பாம்புகளை வீட்டிலேயே வைத்து, பராமரித்தார். ஒவ்வொரு விதமான பாம்பையும், ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும் என்பதை சுயமாக கற்றுக்கொண்டார்.
பில்லை முதன்முதலாக கடித்த பாம்பான டிம்பர் ரேட்டல்ஸ்னேக் வகை பாம்பை தனது மடியில் வைத்துப் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு பாம்புகளுடன் நெருக்கமாகிவிட்டார்.
பிறகு பாம்புகளின் விஷத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க ஆரம்பித்தார்.
அப்போது அவரது வயது 15தான். பாம்புகளுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதற்காக, 16 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.சாலையில் பாம்புகளை வைத்து வித்தைகள் காட்டும் ஒருவருடன் இணைந்து, செயல்பட ஆரம்பித்தார். அந்த வித்தைக்காரருடன் ஃப்ளோரிடாவுக்குச் சென்றார். அப்போது பில்லின் வயது 19. வித்தைக்காரரிடமிருந்து பாம்புகளைப் பற்றிய சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, இருபது வயதுக்குள்ளேயே அனைத்து வகையான பாம்புகளையும் பிடிக்கின்ற திறமைசாலியானார் பில்.
பிறகு சொந்த ஊருக்கே திரும்பி, அம்மாவுடன் வசிக்க ஆரம்பித்தார். பாம்புகளைக் கண்காட்சியாக வைத்து, அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
அப்போது ஆன் என்ற பெண் அறிமுகமாக, அவரைத் திருமணம் செய்தார். பில்லுக்கு பாம்புப் பண்ணையைத் திறக்க வேண்டும் என்பது பெருங்கனவு. அதனால் திரும்பவும் ஃப்ளோரிடாவுக்குச் சென்று பாம்புப் பண்ணையைத் திறக்கும் முயற்சியில் இறங்கினார். குடும்பத்தை நடத்துவதற்காக ஒரு வேலையையும் பார்த்துவந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி கர்ப்பமடைய, வேலையும் பறிபோக, சொந்த ஊருக்கே மீண்டும் திரும்பினார். அடுத்த நான்கு வருடங்களில் கிடைத்த வேலைகளைப் பார்த்துக்கொண்டே, விமான மெக்கானிக் சம்பந்தமான படிப்பை முடித்தார்.
பில்லுக்கு மியாமியில் உள்ள ‘பான் அமெரிக்கன் வேர்ல்டு ஏர்வேஸி’ல் வேலை கிடைத்தது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா கலந்துகொண்ட போது, விமானப் பொறியாளராகப் பணியாற்றினார் பில். தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா என பல நாடுகளுக்குப் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் பயணங்களின் போதுதான் தனது வாழ்க்கையில் முதல்முறையாக நாகப்பாம்பைப் பார்த்தார். நாகப்பாம்பு உட்பட அரிதான பலவகை பாம்புகளை அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தார் பில். விமானத்தில் பாம்புகளைக் கொண்டு வருவதற்கு அப்போது தடையில்லை.
ஆனால், அவருடன் வேலை செய்தவர்களுக்கு இது பிடிக்கவில்லை. எதிர்ப்புகளை மீறித்தான் பாம்புகளை அமெரிக்காவுக்குள் கொண்டு வந்தார் பில். ஓரளவுக்குப் பணம் சேர்ந்த பிறகு, 1946ம் வருடம் மியாமியின் தெற்குப்பகுதியில் ஓர் இடத்தை வாங்கி, பாம்புகளைப் பாதுகாக்கும் செர்பன்டேரியத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.
இதற்கான நிலம் வாங்கவும், கட்டடம் கட்டவும் தனது வீட்டை விற்றுவிட்டார். இந்தச் சம்பவம் அவரது மனைவிக்குப் பிடிக்காமல், பில்லின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. மகன் பில் ஜூனியர் அப்பாவிடமே வளர்ந்தார்.
விமானப் பொறியாளர் பணியைச் செய்துகொண்டே, பாம்புப் பண்ணையை நிர்வகிக்கத் தொடங்கினார். கிளாரிட்டா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, 1947ல் செர்பன்டேரியத்தைத் திறந்தார். முதல் ஐந்து வருடங்கள் பில், கிளாரிட்டா, பில் ஜூனியர் ஆகிய மூவரும் சேர்ந்து செர்பன்டேரியத்தைக் கவனித்துக்கொண்டனர்.
பில் ஜூனியருக்குப் பாம்புகளின் மீது ஆர்வம் இல்லை. அதனால் செர்பன்டேரியத்திலிருந்து விலகிக் கொண்டார். அடுத்த 10 வருடங்களில் 500 பாம்புகளைக் கொண்ட ஓர் இடமாக செர்பன்டேரியம் மாறியது. தினமும் 60 வகையான விஷப்பாம்புகளிடமிருந்து 70 முதல் 100 தடவை விஷத்தைப் பிரித்தெடுத்தார் பில்.
தனக்கு முன்பு உள்ள ஒரு டேபிளின் மீது விஷப்பாம்பை எடுத்து வைப்பார். எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் கையாலேயே விஷத்தைப் பிரித்தெடுத்து, ஒரு கண்ணாடிக் குடுவையில் இடுவார். பிறகு அந்தக் குடுவையை இறுக்கமாக மூடிவிடுவார். இந்தக் காட்சியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
அடுத்து புதுவிதமான பரிசோதனையில் இறங்கினார் பில். ஆம்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக விதவிதமான பாம்பு விஷங்களை ஊசி மூலம் தனது உடலில் ஏற்றிக்கொண்டார்.
இச்சூழலில் அதிக விஷத்தன்மை கொண்ட ப்ளூ கிரைட் வகை பாம்பு அவரைக் கடித்தது. பல நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அவருக்கான விஷமுறிவு மருந்து இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. அந்த மருந்து விமானத்தில் வந்து சேர இரண்டு நாட்கள் ஆகும். அதனால் மருந்து எடுக்க பில் மறுத்துவிட்டார். அடுத்த சில நாட்களில் நலமுடன் தனது பாம்புப் பண்ணைக்குத் திரும்பினார்.
அதற்குப் பிறகு ராஜ நாகம், நாகப் பாம்பு, கீரீன் மாம்பா உட்பட கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள் பில்லைக் கடித்தன. ஆனால், பில்லுக்கு எதுவும் ஆகவில்லை. பாம்புக்கடியால் பாதித்தவர்களுக்குத் தனது இரத்தத்தை இலவசமாகக் கொடுக்க ஆரம்பித்தார். விஷமுறிவு மருந்து இல்லாதபோது, பில்லின் இரத்தம் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. தனது 100வது வயதில் மரணமடைந்தார் இந்த பாம்பு மனிதர்.
த.சக்திவேல்
|