பத்திக்கிச்சு... எழுதியவர் இவர்தான்!



தமிழ் சினிமாவின் இளம் பாடலாசிரியர் விஷ்ணு எடவன். பாட்டெழுத ஆரம்பித்த சில வருடங்களிலேயே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியவர் இவராக மட்டுமே இருக்க முடியும்.‘மனசிலாயோ...’ (வேட்டையன்), ‘போர் கண்ட சிங்கம்...’ (விக்ரம்), ‘போனா போகட்டும்...’ (மாஸ்டர்), ‘படாஸ்...’, ‘அன்பெனும் ஆயுதம்...’ (லியோ) என மெகா பட்ஜெட் படங்களில் இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட்.

இப்போது அஜித்துக்காக எழுதிய ‘பத்திக்கிச்சு...’ (விடாமுயற்சி) பாடலும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த விஷ்ணு எடவன், தற்போது நயன்தாரா, கவின் நடிக்கும் படத்தின் வழியாக இயக்குநராகவும் தனது லட்சியத்தை அடைந்துள்ளார். அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான பரபரப்பில் இருந்தவரிடம் பேசினோம்.

‘விடாமுயற்சி’க்கு பாட்டெழுதிய அனுபவம் எப்படி?

அனிருத் சைட்ல இருந்து அழைப்பு வந்துச்சு. வழக்கமா ரஜினி சார், கமல் சார், விஜய் சார் படங்களுக்குதான் அனிருத்திடமிருந்து அழைப்பு வரும். முதன் முறையா அஜித் சாருக்கு பாட்டெழுதறீங்களான்னு கேட்டதும் உற்சாகத்துல துள்ளிக் குதிக்க ஆரம்பிச்சேன்.‘பத்திக்கிச்சு...’ பாட்டு ஹீரோவுடைய மாஸ் பில்டப்புக்காக எழுதாம கதைக்காக எழுதியது. ஏ.கே. சைட்ல இருந்து ‘தல, பழைய படங்களின் டைட்டில், பில்டப் வார்த்தைகள்’ இல்லாம எழுதும்படி கோரிக்கை வந்துச்சு.

அப்படி எழுதினா வெறுமையா இருக்கும் என்பதால் அவருடைய வாழ்க்கையையும் பாடலில் கலந்து எழுதினேன். அதுதான் இப்ப எல்லா இடங்களிலும் ‘பத்திக்கிச்சு’!

இது அவ்வளவு எளிதான வாய்ப்பு இல்லை. 

எல்லாத்துக்கும் காரணம் அனிருத். அவர் இல்லையென்றால் இது சாத்தியமில்லை.ரசிகர்களுக்கு பில்டப் பாடலாகவும், பொதுப் பார்வையில் மோட்டிவேஷன் பாடலாகவும் போய்ச் சேர்ந்தது மகிழ்ச்சி. தனிப்பட்ட விதத்துல மோட்டிவேஷன் பாடலா இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஐடியாவா இருந்துச்சு.

அஜித் சார் பேருக்கு எவ்வளவு வெயிட் வச்சாலும் தாங்கும். அப்படி பொருத்தமா எழுதியது ஒர்க் அவுட்டாச்சு. ‘விடாமுயற்சி’ன்னு டைட்டில் அறிவிச்சதும் பலதரப்பட்ட விமர்சனம் வந்துச்சு. பாடல் வந்தபிறகு பெரிய இம்பேக்ட் கொடுக்கும்னு நினைச்சேன். அது நல்லபடியா நடந்திருக்கு. எல்லோரும் பாடலைக் கொண்டாடுகிறார்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களுக்குப் பாடல் எழுதும்போது என்ன மாதிரியான அழுத்தம் இருக்கும்?

கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற ஆளுமைகளின் பாடல்களைத்தான் அதற்கு உதாரணமா சொல்வேன். யாருக்கு என்ன மாதிரி பாட்டெழுதணும் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கும். அந்தப் புரிதல் இருந்தாலே அழுத்தம் கரைய ஆரம்பிச்சுடும்.வாலி சார் ‘நான் ஆணையிட்டால்...’ பாடலை எழுதினார். அதை எம்ஜிஆர் சார் சொல்லும்போது வெயிட் இருந்துச்சு. ரஜினி சாருக்கு என்று ஒருவித செட்டப், விஜய் சாருக்கு என்று ஒருவித செட்டப் இருக்கு.

அடிப்படையில் நான் உதவி இயக்குநரா இருந்து சினிமாவுக்கு வந்தேன். ரஜினி சாருக்கு எழுதும் காட்சியில், கமல் சாரை பொருத்திப் பார்க்க முடியாது. கமல் சாருக்கு எழுதும் காட்சியில் ரஜினி சாரைப் பொருத்திப் பார்க்க முடியாது. 

இந்த ஐடியாலஜியைத்தான் பாடல் எழுதும்போதும் பயன்படுத்துவேன். இதுவரை பெரிய நடிகர்களுக்கு எழுதும்போது எனக்கான சுதந்திரம் கிடைத்துள்ளது.சில சமயங்களில் பெரிய ஹீரோக்களுக்கு எழுதும்போது நம்மையும் அறியாமல் அழுத்தம் வரத்தான் செய்யும்.

ஒரு பாடலில் ரசிகர்கள், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. முதலாவது கதைக்கு நெருக்கமா இருக்கும்படி எழுதணும். அடுத்ததாக, அந்தந்தப் பாடலுக்கான அடுக்குமொழியை சிச்சுவேஷனே தேர்ந்தெடுத்துக்கும்.

எனக்கு புது வார்த்தைகளை எழுதத் தெரியாது. என்னுடைய பாடல்களில் கண்ணதாசன் சார், வைரமுத்து சார் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இருக்கும். அப்படி எனக்குப் பிடிச்ச வார்த்தைகளைத் தெரிவு செய்து எழுதுகிறேன்.

அடுத்து, எந்த ஹீரோ, இசையமைப்பாளருக்கு எழுத ஆர்வமாக இருக்கிறீங்க?

நல்ல டியூனுக்கு எழுதணும். மற்றபடி எந்த வாய்ப்பாக இருந்தாலும் பாட்டெழுதுவேன்.இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை இளையராஜா சார் இசையில் எழுதணும். ஏனெனில், நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன்.

இயக்குநர் பாடலாசிரியராக இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

இயக்குநராக இருப்பதால்தான் பாடல் எழுதுகிறேன். இயக்குநராக ஒரு காட்சியை கற்பனை செய்து பார்க்கமுடியும். அப்போது பாடல் எழுதுவது ஈஸி. அதைப் பண்ணாம பாடல் மட்டுமே எழுதுவதா இருந்தால் அது எனக்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே!

எந்த ஜானர்ல எழுதப் பிடிக்கும்?

எனக்கு தெரிஞ்ச நல்ல ஜானர் பேமணட்! நல்ல பேமண்ட் கொடுத்தால் எந்த ஜானரிலும் எழுதலாம்.

சமீபத்தில் நீங்கள் ரசிச்ச பாடல் எது?

விவேக் சாரின் ‘பொய் வாழ்வா...’ (மனிதன்), கருணாகரன் எழுதிய ‘செத்துப்போச்சு...’, ‘உறவே...’ (லப்பர் பந்து) பாடல்கள் பிடிக்கும். ‘வா கண்ணம்மா...’ (ஒன்ஸ்மோர்) பாடலும் பிடிக்கும்.

இசை உலகத்தை உங்க பக்கமா திரும்பிப் பார்க்கவச்ச பாடல் எது?

முப்பத்தேழு பாடல்கள் எழுதியிருக்கிறேன். என்னுடைய ஃபேவரைட் பாடல் ‘போனா போகட்டும்...’ (மாஸ்டர்). அது கொடுத்த சந்தோஷம் அதிகம். அந்தப் பாடலுக்குதான் முதன் முதலா பேனா பிடிச்சேன். 

அந்தப் பாடல்தான் பாட்டெழுதும் தைரியத்தைக் கொடுத்துச்சு. அனிருத், லோகேஷ் கனகராஜ், விஜய் சார் இல்லை என்றால் அது நடந்திருக்காது.

திரும்பிப் பார்க்க வெச்ச பாடல் மூணு இருக்கு. ‘போர்கண்ட சிங்கம்...’, ‘நாயகன் மீண்டும் வரவேண்டும்...’ (விக்ரம்), ‘தாயாக...’ (டாடா), ‘நான் ரெடி...’ (லியோ) போன்ற பாடல்களில்தான் என் பேர் வெளியே தெரிய ஆரம்பிச்சது.

பாடல் எழுதும்போது உங்கள் கிரியேட்டிவ் பிராசஸ் எப்படியிருக்கும்?

இயக்குநர் சொல்லும் கதை, டயலாக்கை மாத்தாம அப்படியே பாடலா எழுத முயற்சி செய்வேன். அவர்கள் சொல்லும் லீட் கேரக்டர் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்போது பெட்டராக எழுத முடியும். கதைக்கு வெளியேபோய் எழுத ஆரம்பிச்சுட்டா பாட்டு நல்லா வராது.சமீபத்துல ஜூனியர் என்டிஆர் நடிச்ச ‘தேவரா’ தமிழ் வெர்ஷனுக்காக ‘மிருகமா கடவுளா...’ என்ற பாடல் எழுதினேன். மாஸ் சிச்சுவேஷன் என்பதால் ஈசியா எழுத முடிஞ்சது. ஏனெனில் அது எனக்கு பழக்கப்பட்ட சிச்சுவேஷன்.

பொதுவா, டப்பிங் படங்களுக்கு அதே பாடலை மொழி மாற்றம் செய்து எழுதச் சொல்லுவாங்க. ‘தேவரா’வுக்கும் அப்படி கேட்டார்கள். நான் அப்படி பண்ணமாட்டேன்னு சொல்லி புதுசா எழுதினேன். வைரமுத்து சார் அப்படி ‘உயிரே’, ‘குரு’ படங்களுக்கு எழுதியுள்ளார். அந்தப் பாடல்களில் இந்தியைத் தாண்டி சொந்தமா எழுதியிருந்தார். அதைத்தான் நான் ஃபாலோ பண்ணினேன்.

பாடல்களில் உங்கள் தனிப்பட்ட உணர்வுகளை கனெக்ட்  பண்ணி எழுதுவீங்களா?

கண்டிப்பாக. வெளிப்பொருளாக இருந்தாலும் நமக்குள் ஏதாச்சும் ஊற்று இருந்தால்தான் வேலை நடக்கும். ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களுக்கு எழுதும்போது அவர்களுடைய டிராவல் நம் கண் முன் வந்துபோகும். அதை நினைக்கும்போது நம்மையும் அறியாமல் உணர்வுகள் வரும். புதுமுகங்களுக்கு எழுதும்போது அந்த கதையில் வரும் ஏதோ ஒரு சமபவம் நம் லைஃபைத் தொட்டிருக்கும்.

இந்த ஜானர்லதான் எழுதுவேன்னு உங்களை வகைப்படுத்திக் கொள்வீர்களா?

அது மியூசிக் டைரக்டர் சாய்ஸ். பெரிய ஹீரோ படங்களில் மாஸ் பாட்டு எழுத கூப்பிடறாங்க. ரைட்டர்ஸைப் பொறுத்தவரை இந்தப் பாட்டுக்குதான் எழுதுவார்ன்னு வாலி சாரையோ, முத்துக்குமார் சாரையோ நாம் சொன்னது இல்லை. என்னை எந்த இடத்துல வெச்சிருக்காங்கன்னு தெரியாது. நல்லா எழுதறார்ன்னு கூப்பிட்டாலே போதும்.

நயன்தாரா, கவின் படம் எந்தளவுக்கு வந்திருக்கு?

ரொமான்ஸ் படம். ‘மாஸ்டர்’ லலித் சார் தயாரிக்கிறார். இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம்.

எஸ்.ராஜா