10 வருஷங்களுக்கு முன்னாடி பேட்மி ண்டன் விளையாட ஆரம்பிச்சேன்... இப்ப சர்வதேச சாம்பியன்... அர்ஜுனா விருதும் வாங்கிட்டேன்!
மன உறுதியுடன் சாதித்த மனிஷா ராமதாஸ்...
கடந்த ஆண்டு பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனும், மனிஷா ராமதாஸும், நித்யஸ்ரீ சிவனும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்தனர். சமீபத்தில் இவர்கள் மூவருக்கும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான அர்ஜுனா விருதினை வழங்கி சிறப்பித்தார் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
இதில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் எஸ்யு5 தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர் திருவள்ளூரைச் சேர்ந்த மனிஷா ராமதாஸ். கடந்த 2022ம் ஆண்டு உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்று சாதித்தவர் இவர்.அதுமட்டுமல்ல. சர்வதேச போட்டிகளில் தனிநபர் பிரிவில் தொடர்ந்து தங்கப் பதக்கங்களைக் குவித்து, 2022ம் ஆண்டின் சிறந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை விருதினையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பிடம் பெற்று அசத்தினார்.
இந்நிலையில் அடுத்தகட்ட சர்வதேச போட்டிகளுக்காக பெங்களூரில் உள்ள படுகோனே - டிராவிட் சென்டரில் தீவிர பயிற்சி எடுத்து வரும் மனிஷாவிடம் பேசினோம். ‘‘எனக்கு பாரா விளையாட்டு இருக்குனே 2019ம் ஆண்டுதான் தெரியும். அதுவரை சாதாரணமா விளையாடிட்டு இருந்த நான், பிறகே சீரியஸாக ஆட ஆரம்பிச்சேன்.
இப்ப பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம், அர்ஜுனா விருது எல்லாம் கிடைச்சது ரொம்ப சந்தோஷமாகவும் மனநிறைவாகவும் இருக்கு. இன்னும் நிறைய சாதிக்கணும்னு உத்வேகம் வந்திருக்கு...’’ என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் 20 வயதே நிரம்பிய மனிஷா ராமதாஸ். தற்போது தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ முதலாமாண்டு படித்துக்கொண்டே பேட்மிண்டன் பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘‘நான் பிறந்தது சென்னை. வளர்ந்தது, படிச்சதெல்லாம் திருவள்ளூர். அப்பா ராமதாஸ் சிவில் கான்டிராக்டராக இருக்கார். அம்மா சுனிதா. ஒரு தங்கச்சி பிளஸ் டூ படிக்கிறாங்க. நான் பிறக்கும்போதே எர்ப்ஸ் பால்ஸி என்கிற குறைபாடுஇருந்தது. எர்ப்ஸ் பால்ஸி என்பது கை மற்றும் தோள்பட்டையைப் பாதிக்கும் ஒருவித நரம்பு பிரச்னை. இதனால் தசை பலவீனமாகி செயல்படாது. எனக்கு வலது கையில் இந்தக் குறைபாடு இருக்கு. அதனால், இடது கையால் பேட்மிண்டன் விளையாடுறேன். இதில் ஸ்டேண்டிங் அப்பர்னு சொல்லப்படுற எஸ்யு 5 பிரிவில் பங்கேற்கிறேன். நான் பத்து வயசுலயே பேட்மிண்டன் விளையாட ஆரம்பிச்சிட்டேன். அந்த வயசுல விளையாட்டுல ரொம்ப ஆர்வமாக இருந்தேன். குறிப்பா, பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே சமயத்துல எல்லா விளையாட்டுகளிலும் கலந்துகிட்டு நிறைய பதக்கங்கள் வாங்கினேன்.
அதனால் ஆசிரியர்கள் எனக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டி சிறப்பாக இருக்கு, நல்லா வருவாள், ஊக்கப்படுத்துங்க’னு என் அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் சொன்னாங்க. அதனால், அப்பாவும் அம்மாவும் என்கரேஜ் செய்ய ஆரம்பிச்சாங்க. பிறகு, ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுனு சொன்னாங்க. எனக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் ரொம்பப் பிடிக்கும். அவங்க ஃபேன் நான். அந்த இன்ஸ்பிரேஷன்ல பேட்மிண்டனைத் தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பிச்சேன்.
ஆரம்பத்துல சிறிய அகடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். அப்ப பெரிய அளவில் போகணும்னு நான் நினைக்கல. அந்நேரம் பள்ளிக்காக விளையாடினேன். இதுல மாநில அளவில் வெண்கலப் பதக்கம் வாங்கியிருக்கேன்.
மாவட்ட அளவில் தங்கம், வெள்ளி ஜெயிச்சிருக்கேன். அண்டர் 16, அண்டர் 19 வரை விளையாடினேன்.அப்புறம், 2018ல் ஒரு பேட்மிண்டன் அகடமியில் ராம்குமார் என்கிற பயிற்சியாளரிடம் ப்ரொஃபஷனலாக தொடங்கினேன். 2019ம் ஆண்டுதான் முதல்முறையாக மாநில அளவில் விளையாடப் போனேன். அப்பதான் பாரா விளையாட்டு என் கவனத்திற்கு வந்தது.
அடுத்து 2020ல் முதல்முறையாக தேசிய சாம்பியன்ஷிப் விளையாடினேன். இதன்பிறகு சர்வதேச அளவுக்கு விளையாட ஆயத்தமானேன். இதனால், பெங்களூர்ல படுகோனே-டிராவிட் சென்டர்ல சேர்ந்தேன். இப்ப அங்க உபேந்திர ரானா சார்கிட்ட மூன்று ஆண்டுகளாக பயிற்சி எடுத்திட்டு இருக்கேன்...’’ என்கிற மனிஷாவுக்கு 2022ம் ஆண்டு சிறந்த ஆண்டாக இருந்துள்ளது.
‘‘2022ல்தான் முதன்முதலாக சர்வதேச அளவில் ஸ்பெயின் இன்டர்நேஷனல் ரேங்கிங் போட்டியில் கலந்துகிட்டேன். அதில் தனிநபர், இரட்டையர் பிரிவு இரண்டிலும் தங்கம் வென்றேன். கலப்பு இரட்டையரில் வெண்கலப் பதக்கம் ஜெயிச்சேன். அது ரொம்ப ஊக்கம் கொடுத்தது.
இதே ஆண்டு பிரேசில், துபாய், கனடா இன்டர்நேஷனல் ரேங்கிங் போட்டிகள்ல தனிநபர், இரட்டையர் பிரிவுகளில் தங்கப் பதக்கங்கள் வென்றேன். இதே 2022ம் ஆண்டு ஜப்பான்ல உலக சாம்பியன்ஷிப் நடந்தது. அதிலும் தனிநபர் பிரிவில் தங்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலமும் ஜெயிச்சேன்.
இதுக்கிடையில் நடந்த ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டியில் தனிநபர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மூன்றிலும் வெண்கலப் பதக்கங்கள் வென்றேன். இதனால், 2022ம் ஆண்டு உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் சிறந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை விருதுக்குத் தேர்தெடுக்கப்பட்டேன். ப்ளேயர் ஆஃப் தி இயர் அவார்டு கிடைச்சது ரொம்ப உற்சாகம் தந்தது. பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. அப்புறம், 2023ம் ஆண்டும் இன்டர்நேஷனல் ரேங்கிங் போட்டிகளில் வெற்றிகளைக் குவிச்சேன். பிறகு 2024ம் ஆண்டு தாய்லாந்தின் பட்டாயா நகரில் உலக சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் தனிநபர் பிரிவில் வெள்ளியும், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலப் பதக்கங்களும் வென்றேன்.
இதனையடுத்து பாரா ஒலிம்பிக்கில் கலந்துகிட்டு தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வாங்கினேன். இதுக்காக என் அப்பா, அம்மா, பயிற்சியாளர்கள், ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், நண்பர்கள்னு நிறைய பேர்களுக்கு நன்றி சொல்லணும். ஏன்னா, ஆரம்ப நாட்கள்ல நான் நிறைய சவால்களைச் சந்திச்சேன்.
நார்மல் வீரர், வீராங்கனைகளுடன் ஒப்பிடும்போது பாரா வீரர், வீராங்கனைகளுக்குப் போராட்டங்கள் ரொம்ப அதிகம். எனக்கு பேலன்ஸ் பண்ணி விளையாடுவதே பிரச்னையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி எடுத்து எடுத்துதான் எல்லாவற்றையும் சமாளிச்சேன். இதைவிட முதல்ல மனஉறுதி வேணும். அதை வளர்த்துக்கணும். எல்லா நெகட்டிவ் எண்ணங்களையும் ஒதுக்கித் தள்ளிடணும். நான் நெகட்டிவ் விஷயங்களில் கவனம் செலுத்தவே இல்ல. பாசிட்டிவ் எண்ணங்களை மட்டுமே மனசுல நிறுத்திக்கிட்டு மேலேறினேன். இது அப்பா, அம்மா, பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்னு பலரின் சப்போர்ட்டால்தான் சாத்தியமானது’’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் மனிஷா, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தன் குறிக்கோள் என்கிறார்.
‘‘அடுத்த பாரா ஒலிம்பிக் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கு. இதுல தங்கம் வெல்வதுதான் என் லட்சியம். அதுக்காகவே தீவிரமா பயிற்சியெடுத்திட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி நிறைய இன்டர்நேஷனல் போட்டிகள் இருக்குது. அதில் தொடர்ந்து விளையாடி என்னுடைய பெஸ்ட்டை கொடுக்கணும். எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறணும்னு நினைக்கிறேன்...’’ என உறுதியான குரலில் நம்பிக்கையாகச் சொல்கிறார் மனிஷா ராமதாஸ்.
பேராச்சி கண்ணன்
|