எவ்வளவு நேரம் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்?!
போன மாதம் நாராயணமூர்த்தி... இந்த மாதம் எஸ்.என்.சுப்பிரமணியன். நாராயண மூர்த்தி, ‘70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்’ என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் எரியும் தீக்கு பெட்ரோல் ஊற்றியிருக்கிறார். இவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அதில், ‘எனக்கு உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று பெரிய வருத்தம் உள்ளது. உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைத்தால் மிகவும் சந்தோஷமடைவேன். நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்த்து வருகிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்... எவ்வளவு நேரம் உங்கள் மனைவியையே பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? மனைவிகளும் எவ்வளவு நேரம் கணவரைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? ஆபீஸுக்கு வாருங்கள்... வேலை செய்யத் தொடங்குங்கள்...’ என்று பேசியுள்ளார்.மேலை நாடுகள்ல ஒரு குறிப்பிட்ட சம்பளத்துக்குக் கீழ் என்றால் வாரம் 40 - 60 மணி நேரம் வேலையெனில், 1.5 X சம்பளமும்; 60 மணி நேரத்துக்கு மேல் என்றால் 2 X சம்பளமும் தரவேண்டுமென்பது சட்டம்.
இந்தியாவிலும் ஆண்டுக்கு ரூபாய் பத்து லட்சத்துக்கும் கீழ் ஊதியம் பெறுபவர்கள் இதே பாலிஸியை, தான் பணிபுரியும் நிறுவனம் கொண்டு வந்தால் விருப்பம் உள்ளவர்கள் 90 என்ன... 120 மணி நேரம் கூட வேலை பார்ப்பார்கள். இதை முதலில் இந்த முதலாளிகள் செய்வார்களா என்றும் -‘கணவர் முகத்தை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருக்க உங்களால் முடியும்..? ஹாய் ஆக உங்கள் நண்பர்களுடன் ஷாப்பிங் கிளம்புங்கள்...’, ‘என் கூட நேரம் ஸ்பெண்ட் பண்ண நேரமில்லையாம்...
ஆபீஸ் மட்டும் போக நேரம் இருக்குமாம்... அப்படி ஆபீஸ்ல போய் என்ன வெட்டி முறிக்கறேன்னு நானும் பார்க்க உன் கூட வரேன்... என கிளம்புங்கள் மனைவிகளே...’ என்றும் - சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தபடி இருக்கின்றன.வேறு சிலர், மெல்ல நூல் விட்டுப் பார்க்கிறார்கள்... விரைவில் அனைத்து நிறுவனங்களிலும் இது அமலுக்கு வரும்... அதற்காக நம்மைத் தயார்படுத்துகிறார்கள்... என்கிறார்கள்.என்னவோ போடா மாதவா!
த.சக்திவேல்
|