பாகிஸ்தானில் சிங்கம், புலி, சிறுத்தைகள்... உள்ளிட்டவைதான் செல்லப் பிராணிகள்..!
சமீபத்தில் பாகிஸ்தானின் லாகூரிலிருந்து வெளியான வீடியோ ஒன்று பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ஒரு வீட்டிலிருந்து வெளியேறும் சிங்கம் சாலைகளில் எங்கு செல்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடித் திரிவதுதான் அதிலிருந்த காட்சி. இதனால், அச்சமுற்ற மக்கள் அரண்டுபோய் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அங்குள்ள தனியார் ஹவுஸிங் சொசைட்டியின் ஆயுதமேந்திய பாதுகாவலர் ஒருவர் சிங்கத்தைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
உடனடியாக, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வனவிலங்கு எப்படி சாலைக்கு வந்தது என்பது குறித்து காவல்துறையினரும், வனவிலங்குத் துறை அதிகாரிகளும் விசாரணையில் குதித்தனர். அதில் ஹர்பன்ஸ்புரா பகுதியைச் சேர்ந்த அலி இம்ரான் என்பவரின் ‘வளர்ப்பு’ சிங்கமே அது எனத் தெரியவந்தது. இது சமீபத்தில் என்றல்ல, கடந்த ஆண்டு கராச்சியிலும் ஒரு ‘வளர்ப்பு’ சிங்கம் சாலைகளில் ஓடித் திரிந்து மக்களை அச்சுறுத்தியது. இதேபோல் கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்திலும் ஒரு ‘வளர்ப்பு’ சிறுத்தை தப்பியதும் சமூக ஊடகங்களில் வைரலாகியது. சரி, அதென்ன ‘வளர்ப்பு’ சிங்கம், புலி... என்று கேட்கலாம். நம்மூரில் வளர்ப்பு செல்லப்பிராணிகள் என்றால் பூனை, நாய், காளைகள், கிளி உள்ளிட்ட சில பிராணிகளை அடுக்குவோம். ஆனால், பாகிஸ்தானில் அப்படியல்ல. அங்கே வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கலாசாரம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
சிங்கம், புலி, சிறுத்தை, மலைப்பாம்புகள், மான்கள், கழுகு, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை உள்ளிட்ட பல வனவிலங்குகள் அவர்களின் பட்டியலில் செல்லப்பிராணிகளாக உள்ளன. இதனால், அவர்கள் இதனை வளர்ப்புப் பிராணிகள் என்றே குறிப்பிடுகின்றனர். குறிப்பாக கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் போன்ற நகரங்களில் இந்தக் கலாசாரம் அதிகம் உள்ளது.
கராச்சியில் ஹசன் ஹுசைன் என்கிற பிசினஸ்மேன் தன் காரில் சிங்கத்தை அழைத்துச் செல்லும் வீடியோ அங்கே வைரல். இதுபோல் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்திரி தன்னுடைய வீட்டில் வளர்ப்பு சிங்கம் வைத்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அந்தச் சிங்கத்தின் அருகே இருந்து அவர் எடுத்த புகைப்படங்கள் அப்போது பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டன. அத்துடன் குட்டி மான் ஒன்றுக்கு அவர் பாட்டிலில் உணவளிக்கும் காட்சியும் வைரலானது. எப்படி நாம் வெளிநாட்டு நாய்களை ஹாயாக காரில் அழைத்துச் செல்கிறோமோ அதேபோல் அவர்கள் இரவில் சிங்கத்தை காரில் பகட்டுக்காக சவாரி அழைத்துச் செல்வார்கள்.இப்படி அழைத்துச் சென்றதற்காக முன்பு கராச்சியில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். இதேபோல் பலர் வனவிலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் போக்கு பாகிஸ்தானில் உள்ளது.
இதற்கு முதல் காரணம் சமூக அந்தஸ்து. ஆம். வசதியுள்ளவர்கள் தங்கள் சமூக அந்தஸ்து மற்றும் அதிகாரத்தின் அடையாளத்தை வெளிக்காட்ட இதுபோன்று பெரிய வனவிலங்குகளை வளர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக சிலர் பொழுதுபோக்கிற்காகவும் மிருகக்காட்சிச்சாலை அமைப்பது உள்பட வேறு வழிகளின் மூலம் பணம் சம்பாதிக்கவும் வளர்த்து வருகின்றனர்.ஒருசில செய்திகளில் வந்த தகவல்களின்படி கராச்சி நகர எல்லைக்குள் மட்டும் 300 சிங்கங்கள் உள்ளதாகவும், இவை தோட்டங்களிலும், பண்ணை வீடுகளிலும் வளர்க்கப்படுவதாகவும் தெரிகிறது.
கடந்த 2020ம் ஆண்டு அங்கு ஒரு வீட்டிலிருந்து ஒட்டகச்சிவிங்கி தலைநீட்டி எட்டிப்பார்க்கும் காட்சியைப் பார்த்து பலர் பதறினர். அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர், விலங்குகளை இறக்குமதி செய்ய தன்னிடம் மினி மிருகக்காட்சிச்சாலை அனுமதி இருப்பதாகக் கூறினார். இருந்தும் மக்கள் இதனை எதிர்த்தனர்.
பாகிஸ்தானில் பலவீனமாக உள்ள வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை வசதியானவர்கள் தங்களுக்குச் சாதகமாகவும் தவறாகவும் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.
உண்மையில் பாகிஸ்தானிய சட்டங்கள் கவர்ச்சியான வனவிலங்குகளை இறக்குமதி செய்வதை எளிதாக்குகின்றன. பாகிஸ்தான் ரூபாயில் 10 ஆயிரம் இருந்தால் ஒருவர் கராச்சி நகரில் வனவிலங்கு உரிமத்தைப் பெறலாம் எனக் கூறுகிறது ஒரு செய்தி. இது வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பதை சட்டபூர்வமானதாக மாற்றுகிறது.
ஆனால், தற்போதைய இந்தச் சட்டங்கள் போதுமானதல்ல என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள். வனவிலங்குகளை இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகள் இருந்தாலும் அவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும், அவற்றின் உணவு மற்றும் நல்வாழ்வை நிர்வகிக்கும் வழிகள் என்ன உள்ளிட்ட விதிமுறைகளில் தெளிவுகள் இல்லை என்கின்றனர்.
இந்த விலங்குகள் பொதுவாக ஆப்ரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காகவே ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக வலைத் தளங்கள் உள்ளன. இதற்கு நிறைய டீலர்களும் இருக்கின்றனர்.
ஒரு வலைத்தள பக்கத்தில் மூன்று சிங்கக்குட்டிகள் ஏழரை லட்சம் ரூபாய்க்குக் கிடைப்பதாகவும், மற்றொரு பக்கத்தில் இரண்டு பழுப்பு நிற கிழக்கு ஆப்ரிக்க சிங்கக்குட்டிகள் நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் சொல்கிறது ஓர் இணையதளச் செய்தி.
இதில் கவலையளிக்கும் விஷயம், சிங்கத்தின் உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் வியாபாரிகளும் பாகிஸ்தானில் உள்ளனர் என்பதுதான். சிங்கத்தின் கொழுப்பு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தசை மற்றும் மூட்டுவலிக்கு அருமருந்து எனப்படுகிறது. தவிர, சில வர்த்தக வலைத்தளங்கள் சிங்க நகங்களை விற்பனையும் செய்கின்றன.
இதனால் சில பாகிஸ்தான் ஊடகங்கள், பாகிஸ்தானில் எருமை மாட்டைவிட சிங்கம் விலை மலியானது எனக் கிண்டலாகக் குறிப்பிடுகின்றன. காரணம், மிருகக்காட்சிச்சாலைகள் ஆப்ரிக்க சிங்கங்கள் சிலவற்றை ஒன்றரை லட்சம் ரூபாய் என சொற்ப விலைக்கு விற்றதாகக் கூறுகின்றன.
ஆனால், ஒரு எருமை மாட்டின் விலையோ மூன்றரை லட்சம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாய்வரை என ஒப்பீடு செய்கின்றன அங்குள்ள ஊடகங்கள். இந்நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்கள் இந்த வனவிலங்குகளை சிறைபிடிப்பவர்கள் அவற்றை சரியாக பராமரிப்பதில்லை எனக் கவலைப்பட்டாலும் உலகமயமாக்கப்பட்ட ஆன்லைன் உலகில் இதுபோன்ற வர்த்தகத்தைத் தடுப்பது கடினம் என்கின்றனர்.
அதனால், ஆன்லைன் உள்பட எல்லா வகையிலுமான சட்டத்தை கடுமையாக்கி அதனை தீவிரமாகச் செயல்படுத்தும்வரை ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் பாகிஸ்தானின் உயரடுக்கில் இருப்பவர்களிடம் இரையாகிக்கொண்டே இருக்கும் என வேதனை தெரிவிக்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.
பேராச்சி கண்ணன்
|