IMAX கேமராக்களுக்கு சவால் வைத்த கிறிஸ்டோஃபர் நோலன்!
தன் படத்துக்காக புதிய தொழில்நுட்ப கேமராவை உருவாக்க IMAXக்கு கட்டளையிட்டிருக்கிறார் இந்த இயக்குநர்
கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் என்பது சினிமா தொழிலுக்கு வெறும் அறிவிப்பு அல்ல, அது ஒரு புதிய கண்டுபிடிப்புகளின் கலவை. மேலும் உலகம் அடுத்த கட்ட சினிமா அனுபவத்துக்கு தன்னை தயார்படுத்தியாக வேண்டிய கட்டாயம் எனவும் அர்த்தம். இதோ ‘யுனிவர்சல் பிக்சர்ஸ்’ தனது எக்ஸ் பக்கத்தில் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் ‘‘த ஒடிஸி ’, கிளாசிக் கிரேக்க புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது. இப்படம் புதிய ஐமேக்ஸ் திரைப்பட தொழில்நுட்பத்துடன் படமாக்கப்படும்...’ என்று அறிவித்திருக்கிறது.
இதற்காக கடந்த சில வருடங்களாக ஐமேக்ஸ் புதிய கேமராக்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த கேமராவில்தான் இப்படம் எடுக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய கேமராக்கள் குறித்த விவரங்கள் கடந்த மார்ச் 2024ம் ஆண்டுதான் முதன் முதலில் NAB 2024 (National Association of Broadcasters) மாநாட்டில் வெளியிடப்பட்டன.
ஐமேக்ஸின் போஸ்ட் ப்ரொடக்ஷன் தலைவரான புரூஸ் மார்கோ, இதுகுறித்து கூறுகையில், ‘‘தற்போது நாம் பயன்படுத்தி வரும் எட்டு ஐமேக்ஸ் கேமராக்களும் 25 வருடங்கள் பழமையானவை. இவற்றை 21ம் நூற்றாண்டுக்கான புதுப்பித்தல் பணிகள் நடந்து வருகின்றன...’’ எனத் தெரிவிக்கிறார்.
தற்போது ‘த ஒடிசி’ படம் அடுத்த தலைமுறை ஐமேக்ஸ் கேமராக்கள் மூலம் படமாக்கப்படவிருக்கிறது என்பது யாருக்கு சந்தோஷமான செய்தியோ இல்லையோ ஹொய்டே வான் ஹொய்டேமாவுக்கு மிகப்பெரிய சந்தோஷமாகவே இருக்கும். இவர்தான் கடந்த பத்து வருடங்களாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் கனவுகளை மட்டுமல்ல, மிகப்பெரிய கேமராக்களையும் சேர்த்து தன் தோள்களில் சுமப்பவர்.
இவருடைய புகைப்படங்களை இப்போது தேடினாலும் மிகப்பெரிய கேமராக்களுடன்தான் நிற்பார். அதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் வரவிருக்கும் புதிய ஐமேக்ஸ் கேமரா என்கிறது ஐமேக்ஸ் குழு. அதாவது முந்தைய கேமராக்களைக் காட்டிலும் 30% கனம் குறைந்த... அதே சமயம் சப்தம் அதிகம் எழுப்பாத கேமராவாகவும் இருக்குமாம். இதற்கு கார்பன் ஃபைபர் கட்டுமானம் உதவியாக இருக்கும்.
கனம் குறைவான ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராக்கள் மூலம், இயக்குநர்கள் குறைந்த நேரத்தில் காட்சிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உதவும். சென்ற வருடம் கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த பிளாக்பஸ்டர் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தை 1.43:1 முழு - ஃபிரேம் ஐமேக்ஸ் வடிவமைப்பில் கொடுத்தார். அதாவது கேமராவின் மூன்று மணிநேர இயக்க நேரத்தில் சுமார் 75 நிமிடங்கள் வீடியோக்களை படம் பிடித்துக் கொடுக்க இயலும்.
இதைக் கொண்டு கணக்கிட்டால் ‘த ஒடிஸி’ இன்னும் கூடுதல் காட்சிகளை குறைந்த நேரத்தில் படம் பிடிக்கும் அதி நவீனகேமராவால் எடுக்கப்படும் என்பது தெரிகிறது.
கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படங்களில் சில காட்சிகளில் வசனங்கள் சரியாக காதில் விழவில்லை என சில புகார்கள் எழுந்தன. இதற்குக் காரணம் ஐமேக்ஸ் கேமராக்களின் சத்தம், நோலனின் ஆட்டோமேட்டிக் வசன மாற்று (Automatic Dialogue Replacement - ADR) தொழில்நுட்பத்துடன் ஒன்றாக இணைவதால் ஒரு சில இடங்களில் வசனங்கள் தெளிவாக காதில் விழாமல் போய் விடுகின்றன.
இதன் காரணமாகவே லைவ் வசனம் ரெக்கார்ட் செய்வதில் பல நேரங்களில், தான் தயக்கம் காட்டுவதாக நோலன் சில பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் புதிய கேமராக்களில் துல்லியமான காட்சிகளைக் காட்டும் ஐந்து இன்ச் டிஜிட்டல் மற்றும் ஆப்டிகல் வியூஃபைண்டர்கள் மற்றும் முதல் முறையாக டேப்லெட் சாதனங்களில் மட்டுமே இருக்கும் Wi-Fi யில் இயங்கும் திரை கொண்ட கேமராக்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கேமராக்கள் குறித்து புரூஸ் மார்கோ மேலும் கூறுகையில், ‘‘தற்சமயம் ஐமேக்ஸ் திரைகளில் காண்பிக்கப்படும் 1.43:1 ஐமேக்ஸ் ஃபிலிம் ஃபார்மட் மற்றும் ஐமேக்ஸ் 1.90:1 (அனைத்து ஐமேக்ஸ் டிஜிட்டல் திரைகளுக்கும் பயன்படுத்தப்படும் பொதுவான ஃபார்மட்) மற்றும் பொதுவான திரைகளுக்கான 2.40:1 ஆகியவற்றுக்கான ஃபிரேம் லைன்களையும் காண்பிக்கும்...’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விகிதத்தை முந்தைய கேமராக்களில் மாற்றியமைத்து காட்சிகள் படம் பிடிக்க முடியாது. ஆனால், புதிய கேமராக்களில் மாற்றும் வசதியும் இருக்குமாம்.ஐமேக்ஸ் கேமராக்களின் தேவை அதிகரிப்பதற்கு மற்றொரு சான்றாக சமீபத்திய ‘இன்டர்ஸ்டெல்லர்‘ படத்தின் ரீரிலீஸ் சம்பவத்தை சொல்லலாம்.
அதாவது உலக அளவில் 1.5% ஐமேக்ஸ் திரைகளில் மட்டுமே இப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், இது படத்தின் முந்தைய வருவாயில் 20% வருமானத்தை ஈட்டியிருக்கிறது. எனில் துல்லியமாக, பிரம்மாண்டமாக, பெரிதாக ஒரு படம் பார்க்கவும், அதற்கு செலவு செய்யவும் உலக அளவிலேயே மக்கள் தயாராக இருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இனி உலகமே விஷுவல்தான்.
கைகளில், வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவிகள் தாண்டி திரையில் நாம் என்ன பிரம்மாண்டம் கொடுக்க இருக்கிறோம் என்னும் தேடல் கலைஞர்களுக்கும்; அப்படியென்ன பிரம்மாண்டம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிமும் இருக்கும் என்கையில் இந்த கேமராக்களின் நவீனத்துவம் அவசியம். சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை நல்ல ஐமேக்ஸ் திரையில் காண உலக அளவில் மக்கள் விமானம் ஏறி பல ஊர்கள், நாடுகளுக்கு பயணித்து அதன் பிரம்மாண்டத்தைக் கண்டுகளித்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது. எனில் நிச்சயம் அதற்கான தொழில்நுட்பத்தை சினிமா மேக்கர்களும், ஐமேக்ஸ் தொழில்நுட்பமும் எப்போதும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
ஏனெனில் உலகளவில் 30 ஐமேக்ஸ் திரைகள் மட்டும் 1.43:1 என்கிற விகிதத்தில் துல்லியமாக படங்களைத் திரையிடுகின்றன. அதையும் கூட பொருட்படுத்தாமல் சினிமா விரும்பிகள் பணத்தை அள்ளி இறைக்கத் தயாராக இருக்கிறார்கள் எனில் ‘நாங்களும் எங்களை அதற்கு தயாராக்கி வருகிறோம்’ என்கிறது ஐமேக்ஸ் போஸ்ட் ப்ரொடக்ஷன் குழு.
‘‘கேமராக்களை விட இந்தப் புதிய தொழில்நுட்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். விளக்கக்காட்சியில், 2025ம் ஆண்டில் கோடாக் சில புதிய வகை திரைப்படப் பங்குகளை அறிமுகப்படுத்தலாம் என்று குறிப்புகள் உள்ளன. பெரிய வடிவத் திரைப்படப் புகைப்படக் கலைஞர் டைலர் ஷீல்ட்ஸ் கூறுவது போல், ‘சினிமாவின் எதிர்காலம் ‘தைரியமாகவும், சுவாரஸ்யமாகவும்’ இருக்க வேண்டும். ‘ஓப்பன்ஹெய்ம’ரில் நோலன், கோடாக் கறுப்பு வெள்ளை ஐமேக்ஸ் திரைப்படத்தை முதன்முறையாக உருவாக்கி பழைய தளத்தை உடைத்து புதிய தளத்தைப் படைத்தார். இது இதுவரை செய்யப்படாதது.
எனவே ‘த ஒடிஸி’யுடன், அவர் மீண்டும் ஒருமுறை தொழில்நுட்ப எல்லைகளைக் கடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் கிறிஸ்டோபர் நோலன் சமீபத்திய பிளாக் & ஒயிட் காட்சிகளால் ஐமேக்ஸ் கேமராக்களுக்கே சவால் வைத்துவிட்டார்.‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் வரும் வழக்கு மற்றும் நீதிமன்ற காட்சிகளுக்காகவே பிளாக் & ஒயிட் கேமராக்களை உருவாக்கும் சவால் இருந்து. அதை பூர்த்தி செய்தோம்.
எனவே அடுத்து உருவாக்கும் கேமராக்கள் இயக்குநர்கள் என்ன விரும்பினாலும் கொடுக்கும் அளவுக்கு தயாராகும். அப்படித்தான் தயாராகியும் வருகிறோம்...’’ என்கிறது ஐமேக்ஸ் குழு. கிறிஸ்டோபர் நோலனின் சில தேவைகள் காரணமாகவே ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில் ஐமேக்ஸ் 65 எம்எம் மற்றும் 65 எம்எம் பெரிய வடிவ ஃபிலிம் கேமராக்கள் பயன்படுத்தப் பட்டன.
கருப்பு மற்றும் வெள்ளையில் உள்ள பகுதிகள் உட்பட ஐமேக்ஸ் 65 எம்எம் காட்சிப்படுத்தியது. மேலும் நடிகர்களின் முக பாவங்கள், உணர்ச்சிகளை படம் பிடிக்க ஐமேக்ஸ் MKIV மற்றும் ஐமேக்ஸ் MSM 9802 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் பானாவிஷன் கேமராக்கள்(Panavision Panaflex System 65 Studio Camera - 65SPFX) பயன்படுத்தப்பட்டன. இவைகள் தவிர ARRIFLEX 435 கேமரா பயன்படுத்தப்பட்டது. Hasselblad லென்ஸ்கள், Panavision லென்ஸ்கள், Panavision Sphero 65 சீரிஸ் லென்ஸ்கள் மற்றும் Panavision System 65 லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளைப் படமாக்குவதற்காக புதிய அகல லென்ஸ்கள் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டன. எனவே இதைக் காட்டிலும் கூடுதல் நவீனத்துவத்தை ‘த ஒடிசி’ படத்தில் எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி.லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... நம் மைண்ட் வாய்ஸ்: இருங்க பாஸ்! நாங்க இன்னும் சாதா ஐமேக்ஸ் கூட பார்த்ததில்ல!
ஷாலினி நியூட்டன்
|