முதல் காட்சியே லிப் லாக்...ஷாக் ஆகிட்டேன்!
ஸ்மிருதியுடன் ஸ்வீட் சிட் சாட்!
கியூட் லுக், ஸ்வீட் தங்கச்சி, பக்கத்து வீட்டுப் பொண்ணு... என பாந்தமாக வளைய வந்தவர் ஸ்மிருதி வெங்கட். வெங்கட் பிரபுவின் 18+ வகையறா ‘மன்மத லீலை’ படத்தில் கூட நல்ல பொண்ணு, அப்பாவி மனைவி மோட்தான். இதோ இப்போது போல்ட், மாடர்ன், ரொமான்டிக் கேர்ள், கொஞ்சமா கிரே ஷேட் என தன் எப்போதுமான மோடில் இருந்து வெளியே வந்து ‘தருணம்’ படத்தில் கலக்கியிருக்கிறார்.
பொங்கல் விழாவுக்கு உங்க படம்..?
சந்தோஷமா இருக்கு. அதுவும் இந்த வருஷத்துக்கான முதல் பெரிய ஹாலிடேஸ்ல நான் நாயகியாக நடிச்ச படம். ஷூட்டிங் ஆரம்பிச்சு 37 நாட்கள்ல முடிச்ச படம். கொஞ்சம் ரிலீஸ்க்கு லேட் ஆச்சு. ஆனா, இப்ப அந்த லேட் காரணமாகத்தான் எங்களுக்கு இப்படி ஒரு திருவிழா ரிலீஸ் கிடைச்சிருக்கு.
முதன் முதலில் வந்த டீசரிலேயே ஷாக் கொடுத்தீங்களே?
அதை ஏன் கேட்கறீங்க... இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் ஏற்கனவே கதை இதுதான்... படத்தில் ஒன்னு ரெண்டு முத்தக் காட்சி எல்லாம் இருக்கும்னு சொல்லிதான் ஆரம்பிச்சார்.
எங்கேயும் எதையும் அவர் மறைக்கவே இல்லை. ஆனா, முதல் காட்சியே லிப் லாக்னு சொன்னவுடன் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலை.
ஒரு பக்கம் என் கோ - ஸ்டார் கிஷன் தாஸ் வீட்ல பேசிட்டு வரேன்னு போன் காதிலே வெச்சுட்டு போயிட்டார். நான் வீட்ல கேட்கக் கூட முடியாது. அடி வெளுத்திடுவாங்க. சரி ஒரு வழியா ஷூட்டிங் முடிச்சாச்சுனு நினைச்சா... அந்த சீன்தான் முதல் டீசராகவே ரிலீஸ் ஆகுது. நான் சென்னை அண்ணாநகர் விஆர் மாலுக்கு அடிக்கடி ஃபிரண்ட்ஸ் கூட விசிட் அடிப்பேன். இந்த டீசர் ரிலீஸ் அப்புறம் என்னால் எங்கயும் தலை காட்டவே முடியல. காரணம், எல்லா மல்டிபிளக்ஸ் ஸ்கிரீனிலும் இந்த டீசர்தான் படங்களுக்கு நடுவுல ஓடுது. கொஞ்சம் கூட கேப்பே இல்ல. படம் பார்க்கப் போன அத்தனை ஃபிரண்ட்ஸ், தெரிஞ்சவங்க எல்லாரும் எனக்கு போன் செய்யறாங்க. ஆனால், எல்லாமே பாசிட்டிவ் ரியாக்ஷன்தான்.
எனக்குதான் கொஞ்சம் தயக்கமாக இருந்துச்சு. ஆனால், முதல் முறையா என்னுடைய கம்ஃபோர்ட் சோனிலிருந்து ஒரு காட்சியில நடிச்சிருக்கிறதா அத்தனை பேரும் பாராட்டினாங்க.
‘தருணம்’..? இயக்குநர் அரவிந்த் இயக்கிய ‘தேஜாவு’ படத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே வருகிற ஒரு கேரக்டர்தான்.
அப்பவே ‘அடுத்த படத்தில் நீங்கதான் நாயகி... முழுப் படமும் நடிப்பீர்கள்’னு சொல்லி இருந்தார். சரி, பேச்சுக்கு இப்படி எல்லா டைரக்டரும் சொல்வாங்க, அதெல்லாம் கூப்பிட மாட்டாங்கனுதான் நினைச்சேன். ஆனால், அவர் சொன்னதை செய்தார். எங்கேயும் ஒளிவு மறைவு , பிரஷர் இப்படி எதுவுமே அவர்கிட்ட இருக்காது. இதுதான் தேவைனு தெளிவா கேட்டு பெர்ஃபாமன்ஸ் வாங்கிடுவார். ஹீரோ கிஷன் தாஸ், டெடிகேஷன் ஃபிரண்ட்லி. நிறைய காட்சிகளில் எங்களுக்குள்ள நாங்களே பேசி ஒரு வேவ் லெங்க்த் செட் செய்துக்கவும் அவர் வெளிப்படையா இருந்தார். ரொமான்டிக் படங்களைப் பொறுத்தவரை என்னதான் இயக்குநர் நமக்கு காட்சிகளை விளக்கிச் சொன்னாலும், தைரியம் கொடுத்தாலும், நம்ம கூட நடிக்கிற கோ - ஸ்டார் ஒத்துழைப்பு கொடுக்கலைன்னா சீன் சரியா வராது. அந்த வகையில் கிஷன் தாஸ் சூப்பர்.
அடுத்தடுத்து உங்க கதைகளை இனிமேல் எப்படி தேர்வு செய்யப் போறீங்க?
இனிமேல் எண்ணிக்கைக்கு படம் செய்யக்கூடாது. படம் முழுக்க என்னுடைய கேரக்டர் என்ன செய்யும்... கதையில் எனக்கு எவ்வளவு முக்கியத்துவம்... இதையெல்லாம் பார்த்துதான் கதைகள் தேர்வு செய்யணும். முக்கியமா எனக்கு நடிக்க வாய்ப்பு இருக்கற கேரக்டர்ஸ் தேர்வு செய்யணும். எல்லா படத்திலும் அழுது வடியற மாதிரியான ஒரு கேரக்டராகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் முழுமையா வேறு ஒரு கேரக்டர் செய்திருக்கேன்.
ட்ரீம் ரோல், ட்ரீம் டைரக்டர்கள் லிஸ்ட் இருக்கா?
அது நிறைய இருக்கு. ஆனா, இப்ப எல்லா நல்ல படங்களிலும் நான் இருக்கணும் என்கிற எண்ணம்தான் அதிகமா இருக்கு. இப்ப ‘தருணம்’ படத்தின் ரிலீஸ் தருணங்களை முழுமையா என்ஜாய் செய்துட்டு இருக்கேன். ஒரு சில ப்ராஜெக்ட் சைன் செய்திருக்கேன். இப்ப அதன் பெயர் விபரங்கள் சொல்ல முடியாது. கூடிய சீக்கிரம் படக்குழு அறிவிப்பாங்க.
ஷாலினி நியூட்டன்
|