உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!



சவுதி அரேபியா என்றாலே எல்லோருக்குமே முதலில் மெக்காதான் நினைவுக்கு வரும். இனிமேல் ‘அப்ரஜ் குடை’யும்  நினைவுக்கு வரப்போகிறது. ஆம்; அங்கே உலகிலேயே மிகப்பெரிய ஹோட்டலைத் திறக்கப் போகின்றனர். அந்த ஹோட்டலின் பெயர்தான், அப்ரஜ் குடை.  
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில்தான் இந்த ஹோட்டலை கட்டமைத்து வருகின்றனர். மலேசியாவில் உள்ள ‘ஃபர்ஸ்ட் வேர்ல்டு’ ஹோட்டலில்  7,500 அறைகள் உள்ளன; லாஸ் வேகாஸில் உள்ள ‘எம்ஜிஎம்’ ஹோட்டலில் 6198 அறைகள் உள்ளன. உலகிலேயே அதிக அறைகளைக் கொண்ட முதல் இரண்டு ஹோட்டல்கள் இவைதான்.

அப்ரஜ் குடை திறக்கப்பட்டால் முதலிடத்தைப் பிடிக்கும். ஆம்; இங்கே 10 ஆயிரம் அறைகள் உள்ளன. இதன் பரப்பளவு 14 லட்சம் சதுர மீட்டர்கள் என்பவை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் பல தேசங்களிலிருந்து மெக்காவை நோக்கி லட்சக்கணக்கானோர் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இப்படி வருபவர்களுக்குத் தங்குவதற்கான போதுமான விடுதிகள் மெக்காவில் இல்லை. ஆயிரக்கணக்கானோர் கிடைத்த இடங்களிலும், கூடாரம் அமைத்தும் தங்குவது வழக்கம்.

யாத்திரை மேற்கொள்பவர்களிடம் பணம் இருந்தும், தங்க இடம் இல்லாமல் இருப்பது சவுதி அரேபியா அரசுக்கு ஒருவகையில் கௌரவப் பிரச்னையாகவும் உள்ளது.

யாத்திரை வருபவர்களை மனதில் வைத்தே அப்ரஜ் குடையைக் கட்டி வருகிறது சவுதி அரேபியா அரசு. நிறைய பயணிகள் தங்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு அறைகள் என்று சொல்கின்றனர்.

சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த ஹோட்டலுக்கான முழுச் செலவையும் சவுதி அரேபியாவின் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. பெரிதாக ஸ்பான்சர்களை எதிர்பார்க்கவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பே இந்த ஹோட்டலைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர். 2017ம் வருடம் ஹோட்டலைத் திறந்துவிடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை சரிவால் சவுதி அரேபியா அரசால் ஹோட்டலுக்கான செலவைச் சமாளிக்க முடியவில்லை. அதனால் பாதியிலேயே கட்டுமான வேலை நின்றுபோனது. இப்போது ஹோட்டலின் கடைசி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

உலகின் முன்னணி கட்டுமான நிறுவனமான ‘தார் அல் ஹேண்டஸா’ என்ற நிறுவனம்தான் இந்த ஹோட்டலைக் கட்டி வருகிறது. லண்டனைச் சேர்ந்த ‘அரீன் ஹாஸ்பிட்டாலிட்டி’ என்ற நிறுவனம் இண்டீரியர் டிசைனைக் கவனித்துக் கொள்கிறது. 10 ஆயிரம் அறைகள் மட்டுமல்லாமல், 70 உணவகங்கள், 4 இடங்களில் ஹெலிபேட் வசதிகளும் உள்ளன. 12 டவர்களை உள்ளடக்கியது போல ஹோட்டலை வடிவமைத்துள்ளனர்.

இதில் 10 டவர்களில் 4 நட்சத்திர விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும். மற்ற இரண்டு டவர்களில் 5 நட்சத்திர வசதிகள் இருக்கும். 10 டவர்களும் 30 மாடிகளைக் கொண்டவை. மற்ற இரண்டு டவர்களும் 45 மாடிகளைக் கொண்டவை. இதுபோக ஐந்து மாடிகள் சவுதி அரேபியாவின் ராஜ குடும்பத்தினருக்கும், அவர்களது விருந்தினர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தவிர, ஹோட்டலின் அடித்தளத்தில் ஷாப்பிங் மால்கள், 2500 கார்களை நிறுத்துவதற்கான இடம் என பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மெக்காவின் பள்ளி வாசலுக்கும், ஹோட்டலுக்கும் இடையிலான தூரம்  இரண்டு கிலோ மீட்டர்தான்.

த.சக்திவேல்