தைப் பொங்கலும் வந்தது... பாலும் பொங்குது... பாட்டுச் சொல்லடியோ...
இப்படித்தான் தமிழகத்தில் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்
‘‘யுஎஸ், யுகே, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், சீனா, தென் ஆப்ரிக்கா, மெக்ஸிகோ நாடுகளில் இருந்து சுற்றுலா வருகிற வெளிநாட்டுப் பயணிகளை ஒருங்கிணைத்து ரிக்ஷாவில் தொடங்குகிற பயணம் இது. டிசம்பர் 28ல் சென்னையின் நீண்ட அழகிய கிழக்கு கடற்கரை சாலை வழியாகத் தொடங்கிய பயணம்... பாண்டிச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் என சாலை மார்க்கமாகவே பயணித்து, ஜனவரி 4ல் தூத்துக்குடி மாவட்டத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் தைப் பொங்கல் நிகழ்ச்சி விமர்சையாக, சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது...’’ புன்னகையுடன் பேச ஆரம்பித்தவர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வழிநடத்தி, தைப்பொங்கல் நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைக்கிற ரிக்ஷா சேலன்ஜ் டாட் காம் தலைமைப் பொறுப்பாளரான பிரின்ஸ்லி ஜெயச்சந்திரன்.
‘‘வழக்கமான சுற்றுலா இடங்கள் தவிர்த்து, இந்தியாவின் கடைக்கோடி கிராமங்கள், அங்கிருக்கும் மக்களின் வாழ்க் கை, அவர்களது வாழ்விடங்கள், நமது கிராமத்து சாலைகள் கொடுக்கும் பயண அனுபவம், வேறுபடும் வானிலை மாற்றம் என நம் கிராமத்தின் இயல்பான வாழ்வியல் அனுபவங்களை வெளிநாட்டவர்களுக்கு பயணத்தின் வழியாக வழங்கி வருகிறோம்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிற எங்கள் நிறுவனம் ‘டிராவல் சயின்டிஸ்ட் டாட்.காம்’ கீழ் இயங்குகிற, ‘ரிக்ஷா சேலன்ஜ் டாட்.காம்’ டிராவல் வெப்சைட் டீம். இதன் அலுவலகம் சென்னையிலும் செயல்படுகிறது.
2006ல் தொடங்கிய டிராவல் நிகழ்ச்சி இது. தொடர்ச்சியாக செயல்பட்டு, தற்போது 18வது ஆண்டிற்குள் நுழைந்திருக்கிறது. எங்கள் டிராவல் வெப்சைட்டில் இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘க்ளாசிக் ரன்’.பொங்கல் விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் கொண்டாடுவோம். இந்த 2025ம் ஆண்டு பயணத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்த்,சுவிட்சர்லாந்த் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர் 21 பேர் பங்கேற்றனர்.
இதில் வெளிநாட்டுப் பெண்கள் சேலை, ரவிக்கை அணிந்து, தலையில் பூச்சூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவர்களோடு வந்திருக்கும் ஆண்கள், தமிழர் பாரம்பரிய முறையில் வேட்டி, துண்டு அணிந்து உடன் நிற்க, தூத்துக்குடியில் உள்ள எங்கள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் பண்ணை வீட்டில், சூரிய வழிபாட்டுடன் தைப் பொங்கல் நிகழ்ச்சி தொடங்கியது.
வாசலில் கோலமிட்டு, மஞ்சள் பூசணி பூ வைத்து, வாழை மரம், மாவிலைத் தோரணம் கட்டி, அடுப்பு மூட்டி, அரிசி, வெல்லம், தேங்காய், நெய், காய்கறிகள், கரும்பு, மஞ்சள் கொத்தோடு, ஒன்பது மண் பானைகளில் பொங்கல் வைத்து, பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ச்சியும், ஆர்வமும் பொங்க ‘குலவை போட்டு’ ஆர்ப்பரித்துக் கொண்டாடிய வெளிநாட்டினரைக் காண கண்கோடி வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வெளிநாட்டவரின் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுபவர்கள் லுங்கியை தொடைக்கு மேல் தூக்கிக்கட்டி இருப்பதுபோல, பெண்களில் சிலர், சேலையை தொடைக்கு மேல் மடித்துக் கட்டி பொங்கல் வைக்கும் காட்சியைப் பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கும்...’’ என தனது நினைவுகளைப் பகிர்ந்தவர், ‘‘மண்பானையில் பால் பொங்கி வரும்போது, வெளிநாட்டுப் பெண்களும், நமது கிராமத்துப் பெண்களோடு இணைந்து, குலவை போடுவது, கும்மி அடிப்பதென தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்து வெளிப்படுத்துவார்கள்’’ என்கிறார்.
‘‘இன்கிரடிபிள் இந்தியா இஸ் ஆல்வேஸ் என்றாலும், ‘நானே போனேன்... நானே பயணித்தேன்... நானே பார்த்தேன்...’ என்கிற பயண உணர்வை, அது தரும் அனுபவத்தை, வெளிநாட்டவருக்கு முழுமையாக வழங்குவதுதான் எங்கள் நோக்கம்.
அதனால்தான் ஆட்டோவை அவர்களே ஓட்டி, அவர்களாகவே பயணித்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, நமது தமிழக கிராமங்களின் அழகை, வாழ்வியல் அனுபவங்களை வழிநெடுக பார்த்து உணர்ந்து மகிழ்ச்சியாகப் பயணிக்கிறார்கள். இந்தப் பயணத்துக்கு இன்டர்நேஷனல் டிரைவிங் பெர்மிட் இருக்கிற வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதற்கான பயிற்சி முதல்நாள் வழங்கப்
படும். அவர்களாகவே விரும்பி மேற்கொள்ளும் பயணம் என்பதால், ஒரே நாளில் நமது ஆட்டோவுக்கு அடாப்டாகி, சுலபமாக நமது சாலைகளில் ஆட்டோவை ஓட்டி பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இது அவர்களுக்கு ஒரு அட்வென்ச்சர் பயணம்தான்...’’ என்றவர், ‘‘ஒரு ஆட்டோவுக்கு மூவர் மட்டுமே இதில் அனுமதி. மூவருமே மாறி மாறி ஆட்டோவை ஓட்டுவார்கள். அவர்களின் உடமைகள் அனைத்தும் அவர்களுக்குப் பின்னால் ஒரு டிரக்கில் உடன் பயணிக்கும்...’’ எனப் புன்னகைக்கிறார். ‘‘எங்களின் க்ளாசிக் ரன் பயண திட்டம் தவிர்த்து, தமிழ்நாடு ரன், மலபார் ரேம்பேஜ், டெக்கான் ஒடிசி, மும்பை எக்ஸ்பிரஸ் என ஐந்து பயணத் திட்டங்கள் ஆண்டு முழுவதும் இருக்கின்றன...’’ என வெளிநாட்டவருடன் தனக்கு ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்தவாறே விடைபெற்றார் பிரின்ஸ்லி ஜெயச்சந்திரன்.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: பரமகுமார்
|