எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால்..!



புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய்வதற்கு முன்பே அடுத்தடுத்து இரண்டு மருத்துவப் பரபரப்புகள், பதற்றங்கள்.ஒருபக்கம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்க்ரப் டைஃபஸ் நோய் (Scrub Typhus) வேகமாகப் பரவிவருகிறது என்றும், மற்றொரு பக்கம் ஹெச்எம்பி (HMPV) வைரஸ் நோய் தற்சமயம் சீனாவை உலுக்கி எடுக்கிறது என்பதுடன், பெங்களூருவில் ஒரு குழந்தைக்கு இது கண்டறியப்பட்டுள்ளது என்பதுடன், வெகுவிரைவில் கோவிட் தொற்றைப் போலவே இது உலகெங்கும் பரவக்கூடும் எனும் இரு இணையச் செய்திகள் நம் அனைவரையும் புத்தாண்டு முதல் பீதிக்கு உள்ளாக்கியுள்ளன.

ஏறக்குறைய அனைத்து மருத்துவர்களுக்கும், நேரடி அல்லது அலைபேசி அழைப்புகளாக, ‘இன்னொரு லாக்-டௌன் வருமா டாக்டர்?’, ‘தடுப்பூசி எதுவும் போடணுமா டாக்டர்..?’ என்பதாகத்தான் தற்போது இருக்கிறது..!

இதில் முதலாவது சொல்லப்பட்ட ஸ்க்ரப் டைஃபஸ் நோய்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) தகவல்படி, ஜப்பான் நாட்டின் காடுகளில் 1899ம் ஆண்டு, முதன்முதலாக  கண்டறியப்பட்ட இந்த ஸ்கரப் டைஃபஸ் நோய், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியா, இலங்கை, மியான்மர், இந்தோனீசியா, சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து என ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை மற்றும் மியான்மரில் பெருந்தொற்றாக, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த இந்த நோய், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கப் படையினரில் வினோதமான காய்ச்சலை ஏற்படுத்தி, அதனை ஆராய்ச்சி செய்யவும் தூண்டியது.

நமது நாட்டில் கொல்கத்தாவிலும், கர்நாடக மாநிலத்திலும் இந்த ஸ்க்ரப் டைஃபஸ் அதிகம் காணப்படுவதுடன், சில வருடகாலமாக தர்மபுரி, சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது என்கிறது புள்ளிவிவரங்கள். 

இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களிலும் இது பரவி வருவதாகவும், சமீபத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்களில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக Orientia tsutsugamushi எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படும் இந்த ஸ்க்ரப் டைஃபஸ், Trombiculid mite எனும் காட்டு உண்ணிகளின் Chiggars எனப்படும் இளம்உயிரிகள், காட்டு எலி, முயல் மற்றும் பிற பாலூட்டிகளைக் கடிப்பதால், விலங்குகளுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு நோய்தான் என்றாலும், எதேச்சையாக இந்த உண்ணிகள் மனிதனைக் கடிக்கும்போது மனிதனையும் இது பாதிக்கின்றது (Zoonotic disease).

டெங்கு வைரஸ்களை தம்மில் வைத்திருக்கும் கொசுக்களைப் போல, ஓரியன்சியா நுண்ணுயிர் கிருமிகளை தமது உடலுக்குள் தேக்கி வைத்திருக்கும் இந்த காட்டு உண்ணிகள் கடிப்பதால் ஸ்கரப் டைஃபஸ் நோய் ஏற்படுகிறது. பொதுவாக இந்த மிகச்சிறிய உண்ணி கடித்த இடத்தில், eschar என்ற கடித்தலுக்கான கருமையான காயமும் தோல் அழற்சியும் பலரில் காணப்படும் என்றாலும், இந்த அறிகுறிகளை ஒரு சாதாரண பூச்சிக்கடி என்று எளிதில் நாம் தவறவிடவும் வாய்ப்புண்டு.

ஆனால், அப்படி காயத்திலிருந்து உடலுக்குள் நுழையும் ஓரியன்சியா (Orientia tsutsugamushi) கிருமிகள் ஏறத்தாழ கடிபட்ட 40%த்தினரிடம் ஓரிரு வாரங்களில் உடலெங்கும் பரவி, சிலரில் தீவிர நோயையும் ஏற்படுத்துகிறது. 

டெங்கு காய்ச்சலைப் போலவே, இந்த நோயிலும் அதிகப்படியான காய்ச்சல், தீவிர தலைவலி, உடற்சோர்வு, தோல் தடிப்புகள், மூட்டுவலி, வயிற்றுவலி மற்றும் நீர்த்தன்மை குறைதல் ஆகிய அறிகுறிகள் காணப்படுவதுடன், தீவிர நோய்நிலையில் இது இரத்தத்தின் தட்டணுக்களை வேகமாகக் குறைத்து, நேரடியாக இருதயத் தசைகள், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் மற்றும் மூளையைத் தாக்குவதால் உடனடி மரணம் வரை ஏற்படவும் இதில் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கிறது ஐசிஐம்ஆர்.

என்றாலும் இது, கொரோனா போலவோ பன்றிக்காய்ச்சல் போலவோ அல்லது நாம் அடுத்துப் பேச இருக்கும் ஹெச்எம்பி வைரஸ் போலவோ, மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுவதில்லை என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.அப்படியென்றால் இதைத் தவிர்ப்பது எப்படி, குணப்படுத்துவது எப்படி என்ற கேள்விகள் எழுகிறதல்லவா..?

பொதுவாக காட்டுப் பகுதிகளிலும், அடர்த்தியான புதர்களிலும் மட்டுமே காணப்படும் இந்த உண்ணிகளைத் தடுக்க, நம்மைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதுடன், தேவைப்படும்போது பைரீத்ரம் (pyrethrum) போன்ற பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதும், நோயின் reservoirராக இருக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துவதும், விவசாயிகள், காட்டுக்குள் பணிபுரிபவர்கள் மற்றும் பயணிப்பவர்கள், மலை ஏறுபவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் பாதுகாப்பான முழுக்கை ஆடைகளை அணிவதும், சந்தேகம் ஏற்படும்போது தக்க மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியமாகிறது.

இதற்கான பிரத்தியேக இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, டாக்சி-சைக்ளின், அசித்ரோ-மைசின் போன்ற எளிய மருந்துகளால் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த இயலும். அவ்வளவு எளிதாகப் பரவாத இந்த நோய்க்கு, தடுப்பூசி இல்லை என்றாலும், இது குறித்த விழிப்புணர்வு தான் நம் அனைவருக்கும் மிகமிக அவசியம் என்பது விளங்குகிறது.

அடுத்து, சீனாவிலிருந்து வரக்கூடிய ஹெச்எம்பி வைரஸ்:

ஐந்தாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்றிலிருந்தும், அதன் வலிகளிலிருந்தும் இன்னும் முற்றிலும் விடுபடாத நாம், இன்னுமோர் துயர நிகழ்வைச் சந்திக்க வேண்டியிருக்குமா என்ற அச்சம் நம்மில் இயல்பாக ஏற்படுகிறது.

உண்மையில் காலம்காலமாக நம்மைத் தாக்கும் நுரையீரல் நோய்க்கான வைரஸ்களில், ஃப்ளூ, பாரா-இன்ப்ளூயன்சா, ஆர்.எஸ்.வி, கொரோனா வைரஸ், ரைனோ வைரஸ் மற்றும் அடினோ வைரஸ்களுடன் சேர்ந்தே காணப்படுபவைதான் இந்த ஹெச்எம்பி வைரஸ் எனும் ஹ்யூமன் மெட்டா நியூமோ வைரஸ் (Human Meta Pneumo Virus).

மற்ற வைரஸ்கள் போலவே, இவற்றிலும் பறவைகளைத் தாக்கும் ஏவியன் வகைகளும் உண்டு. ஆக, எந்தவொரு வைரஸ் தொற்றைப் போலவே, சளி, இருமல், உமிழ்நீர் வழியாகப் பரவும் இந்நோய், குளிர் சீதோஷ்ண நிலையிலும் அதிகம் கூட்டம் கூடும் திருவிழா அல்லது விடுமுறை நாட்களிலும் வெகுவேகமாக பரவக்கூடிய தன்மை உடையது. 

சளி, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வயிற்று வலி, உடற்சோர்வு போன்ற பொது அறிகுறிகளைக் கொண்ட இந்நோயும், மற்ற ஆர்என்ஏ வைரஸ்கள் போல, தாமாகவே குணமடையும் தன்மை கொண்டது என்றாலும், கோவிட், ஃப்ளூ போலவே வயதானவர்கள், சிறு குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்கள் ஆகியோரில் ஹெச்எம்பி வைரஸும், நுரையீரலில் தொடங்கி பிற உள் உறுப்புகளைப் பாதித்து, சமயங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தலாம் என்பதால்தான் இது அதிக கவனம் பெறுகிறது.

சீனாவில் தற்சமயம் உள்ள குளிர்காலம் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்கள், கூட்டங்கள் அதிகம் கூடும் இடங்களில் ஹெச்எம்பி பரவலை ஏற்படுத்தியிருக்கலாம் என்றாலும், அங்கு வசிக்கும் சில நண்பர்கள் நமக்கு சாதகமான பதில்களைத்தான் தருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்தியாக உலவும் சீன மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்பதை அவர்கள் முற்றிலும் மறுக்கின்றனர்.ஆனாலும் இதன் காரணமாக, மீண்டும் ஒரு பெருந்தொற்று, லாக்-டௌன், பெரும் உயிரிழப்புகள் வருமா என்பது கேள்விக்குறிதான்!

எது எப்படியென்றாலும், இதற்கான தடுப்பூசி எதுவும் இல்லாத நிலையில், நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் மற்றும் கைகளைக் கழுவுதல் (SMS Soap, Mask, Social Distance) உள்ளிட்டவற்றை மீண்டும் பயன்படுத்துவதும், அதற்கும் மேலாக நமது தனி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் காப்பதும் இன்றைய சூழலின் கட்டாயத் தேவை எனலாம்.

ஆனால், இந்த இரு வெவ்வேறு நோய்கள்... ஒன்று பூச்சிக்கடியால் ஏற்படும் ஸ்கரப் டைஃபஸ், மற்றொன்று பறவைகள் வழியாக மனிதர்களைத் தாக்கும் ஹெச்எம்பி வைரஸ்... இவையிரண்டும் மீண்டும் நமக்கு ஒரு பேருண்மையை அழுத்தமாகச் சொல்கின்றன.

காட்டுப் பிரதேசங்களில் மனித ஆக்கிரமிப்பைக் குறைப்பதும், காட்டு உயிரினங்களை அழிப்பதை நிறுத்துவதும் காலத்தின் கட்டாயம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன.
ஆம். எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே என்பதைத்தான் இயற்கை இப்போதும் எப்போதும் வலியுறுத்துகிறது.
கற்றுக்கொள்வோமா நாம்..?!

டாக்டர் சசித்ரா தாமோதரன்