யானை வரும் பின்னே...மணியோசை வரும் முன்னே..!
டிரம்ப்பின் அதிரடிகளும் அலறும் உலகமும்
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் 20ம் தேதி பதவியேற்கிறார். அன்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்த நாளை நினைவுகூரும் நாள் என்பதால் இந்தப் பதவியேற்பு விழா கூடுதல் சிறப்பைப் பெறுவதாக அவரின் ஆதரவாளர்கள் உற்சாகம் பொங்க மெச்சுகின்றனர். அதேவேளையில் அவரின் சமீபத்திய பேச்சுக்கள் உலக அளவிலான அரசியல் களத்தில் கடும் விமர்சனங்களையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர் டிரம்ப் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த 2016ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது அனுபவமே இல்லாமல் இருந்தார். என்றாலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செய்தார். இதனால் ஒருகட்டத்தில் அவரின் ஆதரவாளர்களே அவருக்கு எதிராக மாறினர். இந்நிலையில் 2024ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை ஈட்டினார். ஆனால், இப்போதும் அவரின் பேச்சுக்களில் அதிரடி குறையவில்லை. குறிப்பாக அவர் நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய ஆசையுடன் பேசிய பேச்சுக்கள்தான் இப்போது வைரலாகி இருக்கிறது. இது ரியல் எஸ்டேட்காரர்களின் பேச்சுபோல் ஒலிப்பதாகக் குறிப்பிடுகின்றன பத்திரிகைகள். என்ன பேசினார்?
அவர் வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பனாமா கால்வாயையும், கிரீன்லாந்தையும் கையகப்படுத்த வேண்டும் என்றும், கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சமீபமாகவே இது தொடர்பாக அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இத்துடன் நிற்கவில்லை டிரம்ப். மெக்ஸிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்ற வேண்டும் என்றும் கூறினார். இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் பர்டோ, ‘என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் வடஅமெரிக்கா என்பதை மெக்ஸிகோ அமெரிக்கா எனப் பெயர் மாற்றலாம்’ எனப் பதிலடி கொடுத்து டிரம்ப்பின் வாயை மூடினார். ஏன் கனடா...?
டிரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து 51வது மாநிலமாக மாற்றவோம்... இல்லையெனில் கனடாவிற்கு பொருளாதார அழுத்தம் தருவேன் என்கிறார். கனடா பிரதமர் ட்ரூடோவை கனடாவின் கவர்னர் எனக் கேலி செய்தும் வருகிறார்.
‘அமெரிக்காவின் தயவில்தான் கனடா இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம். ராணுவ ஒத்துழைப்பு வழங்குகிறோம். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும். மேலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து கனடா முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்...’ எனக் குறிப்பிட்டுள்ளார்.இது பல காலமாக இருந்து வரும் பிரச்னை. என்றாலும் கனடா நாட்டு மக்களும் அரசும் அமெரிக்காவுடன் இணைவதை என்றுமே விரும்பியதில்லை. தற்போது கனடா அமைச்சர்கள் டிரம்ப்பின் பேச்சுக்களைக் கண்டித்துள்ளனர். பதவியேற்கும் முன்பே இப்படியென்றால்... பதவியேற்று அதிபரானபின் இன்னும் என்னென்ன அதிரடிகள் இருக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏன் பனாமா கால்வாய்?
தற்போது அமெரிக்காவின் 40 சதவீத கன்டெய்னர் கப்பல்கள் பனாமா கால்வாய் வழியே பயணிப்பதாகச் சொல்லப்படுகிறது. பசிபிக் கடலுக்கும், கரீபியன் கடலுக்கும் ஷார்ட்கட் ரூட்டாக இந்தக் கால்வாய் உள்ளது. இதனை சீனா இயக்குவதாக குற்றம் சாட்டுகிறார் டிரம்ப். பொருளாதார பாதுகாப்பிற்காக பனாமா கால்வாய் அமெரிக்காவிற்கு தேவை என்கிறார். ஆனால், பனாமா நாட்டின் அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ இதை மறுத்து சீனாவின் குறுக்கீடு இல்லவே இல்லை என்கிறார். சீனாவும் டிரம்ப்பின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
பனாமா கால்வாய் என்பது 1904 - 1914ம் ஆண்டிற்கு இடையில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது. பல தசாப்தங்களாக அமெரிக்காதான் இதனை நிர்வகித்து வந்தது. பின்னர் பனாமாவுடன் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 1970களில் நடுநிலைமையை ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனைத்தொடர்ந்து கால்வாயின் கட்டுப்பாட்டை அமெரிக்கா முழுமையாகக் கைவிட்டது. இப்போது பனாமா கால்வாய் ஆணையத்தால் இந்தக் கால்வாய் இயக்கப்படுகிறது.
ஏன் கிரீன்லாந்து..?
கிரீன்லாந்து, கனடாவின் வடகிழக்கில் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய தீவு. இதில், 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இது டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பெற்ற பிரதேசமாக விளங்குகிறது.
இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் இருக்கிறது.ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா இடையே கிரீன்லாந்து உள்ளதால் பொருளாதார மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதை ஒரு முக்கிய இடமாக அமெரிக்கா கருதுகிறது. குறிப்பாக ஆர்க்டிக் கடல் பனி உருகுவதால் புதிய கப்பல் பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.
கிரீன்லாந்தின் வடக்குப் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ தளமும் உள்ளது. இந்நிலையில், ‘தேசிய பாதுகாப்பிற்காக கிரீன்லாந்து எங்களுக்குத் தேவை. ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்கள் உலகம் முழுவதும் உள்ளன.
இனி நாங்கள் அதை நடக்கவிடமாட்டோம்’ என்கிறார் டிரம்ப். ஏனெனில், கிரீன்லாந்தின் மின்தேவையை சீனா பூர்த்தி செய்கிறது. தவிர ரஷ்யா, கிரீன்லாந்து இடையேயான வடக்கு கடல்வழியை ரஷ்யா வணிகக் கப்பல் மூலம் கடந்துவிட்டது. ரஷ்யாவும், சீனாவும் இதைப் பயன்படுத்துவது மேற்கத்திய நாடுகளுக்குக் கவலை அளித்தன. ஐரோப்பிய யூனியனும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கிரீன்லாந்திடம் சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்படி சொன்னது. கிரீன்லாந்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் அரிய கனிம வளங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக லித்தியம் மற்றும் கிராஃபைட் உள்ளிட்ட 31 தாதுக்கள் கணிசமான இருப்புகளைக் கொண்டிருக்கலாம் என்கின்றன அறிக்கைகள். தற்போது அரிய தாதுக்களில் 70 சதவீதம் சீனா உற்பத்தி செய்கிறது. இதில் அமெரிக்கா வளர்ச்சியை எட்டுவதற்கு கிரீன்லாந்தை தனதாக்கிக் கொள்ள நினைக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இதில் லித்தியமும், கிராஃபைட்டும் மின்சார வாகன பேட்டரிகளை உற்பத்தி செய்யத் தேவைப்படுகின்றன. இவை டிரம்ப்பின் நெருங்கிய ஆலோசகரான எலான் மஸ்க்கின் ஆர்வத்தை ஈர்க்கும் என்பதாலும் கிரீன்லாந்தை இணைக்க டிரம்ப் ஆர்வம் கொள்வதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.
பேராச்சி கண்ணன்
|