சிறுகதை-காதலின் நிறம் சிகப்பு



சென்ற இதழ் தொடர்ச்சி...

“அப்ப நானும் இந்த நெசவுக்கு முழுக்கு போட்டுட்டு வேற வேலைக்கு மாறிட்றதுதான் புத்திசாலித்தனமா?”என்று கேட்டான் சாந்தாராம்.   “இப்ப நீ மாறலேன்னாலும் உன் மகன் மாறிட்டதை உன்னால தடுக்க முடியலதானே?” என்று பதிலுரைத்தான் சுந்தரம்.“என் மகன் மட்டுமா? நம்ப கோயில் பட்டர் பையனும் கூட மாறிட்டான். 
சாமிக்கு மணியாட்டி தட்டு நீட்டி, அதுல விழற காசுக்கான பொழைப்பு எனக்கு வேணவே வேண்டாம்னு வேற வேலைக்கு போய்ட்டான்...”‘‘இவ்வளவு சொல்ற நீ மாறாம அப்படியே இருக்கயேடா... அதை நினைக்கும்போது எனக்கு பிரமிப்பா இருக்குடா...” பேசிக் கொண்டே டீயைக் குடித்து முடித்தனர்.

சம்யுக்தா கல் உரலில் சட்னிக்கு அரைக்கும் மணம் மூக்கைத் தேடி வந்து முட்டிற்று. கியாஸ் அடுப்பில் இட்லி, குக்கரிடமும் விசில். இடையில் பக்கத்து வயல்காட்டு கிணறு சுந்தரத்துக்கு ஞாபகம் வந்தது.“சாந்தா... இங்க எல்லாம் ரெடியாகறதுக்குள்ற நாம நம்ம குஞ்சா கவுண்டன் காட்டு கிணத்துக்கு போய் ஒரு முங்கு போட்டுட்டு வந்துடுேவாமா?” என்று பழைய நினைப்போடு கேட்டான். சாந்தா ராம் உடனேயே கேலியாகச் சிரித்தான்.

“என்னடா சிரிக்கறே?”

“சிரிக்காம... அந்த வயல்காடு, கிணறு எல்லாம் இப்ப அபார்ட்மென்டாகி அங்க இப்ப ஆயிரம் வீடுங்க வந்துடுச்சி! வயல் காட்டை பாக்கணும்னா அயோத்யா பட்டணம் தாண்டி வாழப்பாடி கிட்ட போகணும்...”“ஓ... அங்கெல்லாமும் மாற்றமா?”

“எல்லாம் மாறிடிச்சிடா... நாம காலேஜ் படிக்கும்போது 65 தியேட்டர் இருந்திச்சு. இப்ப 20 கூட இல்ல. எப்படி முட்டி மோதி டிக்கெட் வாங்குவோம்! இப்ப ஒரு ஷோவுக்கு பத்து பேர் வந்தா பெருசு. அப்ப நாம பாத்த சினிமா அவ்வளவும் இப்ப இதோ இந்த செல்போனுக்குள்ள இருக்கு. நீ எத்தன தடவை வேணா பாத்துக்கலாம்.

இப்ப நான் இதை பாக்கறப்பல்லாம் நாம அன்னிக்கு லைன்ல நின்னும் டிக்கெட் கிடைக்காம திரும்பி வருவோமே... அதுதான் ஞாபகம் வரும். சுருக்கமா சொன்னா சினிமாகூட செத்துக்கிட்டு வருதுடா. டிவிகூட அலுத்துப் போச்சு. போட்ட படத்தையே போட்டு கொல்றாங்க. இதுல கக்கூஸ் கழுவற விளம்பரங்கதான் அதிகம்...” சாந்தாராம் சடைத்து முடித்தான்.

சுந்தரம் முகத்தில் அலமலப்பு. உதட்டைச் சுழித்து ஒரு உதறு உதறிக் கொண்டான். அதே வேகத்தில், “இவ்வளவுலயும் நீ மாறாம அப்படியே இருக்கியேடா..?” என்றும் நெகிழ்ந்தான்.
“மாறாத இன்னொண்ணும் இருக்கு... அதுக்குதான் நீ வந்துருக்கேன்னும் எனக்கு தெரியும்டா...” என்று பதிலுக்கு சாந்தாராம் சொல்லவும் சுந்தரத்துக்கு சற்று சுருக்
கென்றது.“என்னடா சொல்றே?”

“உண்மைய சொல்... ரேணுகா வைப் பாக்கத்தானே வந்துருக்கே..?” சாந்தாராமின் கேள்வி சுந்தரத்தை நண்டுக்கால் போல் இறுக்கிவிட்டது. கண்கள் அகன்று முகமும் மாறிற்று. மெல்ல ஆமோதிப்பாய் தலையை அசைத்தான்.“எனக்கு தெரியும்டா, எதை மறந்தாலும் அவளை உன்னால மறக்க முடியாதுன்னு...”
‘‘...’’
“என்னடா..? அவளைப் பத்தி கேட்கவும் என்ன பேசணும்னே தோணலியா?”
“ஆமாம்டா. எப்படிடா இருக்கா?”

“உம்... இப்பவாவது கேட்டியே. நல்லா இருக்காடா..!”
“க...க... கல்யாணம்?”

“கல்யாணமாகி நாலு பசங்களே இருக்காங்கன்னா பாத்துக்கயேன்...” சாந்தாராமின் பதில் சுந்தரத்தை ஒரு நிம்மதிப் பெருமூச்சுக்கு ஆட்படுத்தி அவன் முகத்தையும் பிரகாசமாக்கிற்று. “நிஜமாவா?” என்று அழுத்தமாகக் கேட்டான்.“நீ பாட்டுக்கு விட்டுட்டு ஓடிட்டே. கொஞ்ச நாள் அவளும் நீ வருவேன்னு காத்திருந்தா! அப்புறம் காலம் எல்லாத்தையும் மாத்துற மாதிரி அவளையும் மாத்திடிச்சு...” என்ற சாந்தாராமை பரிதாபமாகப் பார்த்தான் சுந்தரம்.

“நான் விட்டுட்டெல்லாம் ஓடலடா. அவ உயரோட இருந்தா போதும்னுதான் ஓடினேன்...” என்றான் திக்கித் திணறி.“தெரியும். அவ அண்ணன் உன்னையும் அவளையும் கொன்னுடுவேன்னான். நீ பயந்துட்டே. அதானே?”“என்னைக் கொல்லுவேன்னா செத்துக் தொலைச்சிருப்பேன்டா...  அவளைக் கழுத்தை நெரிக்கவே போய்ட்டானே... அதுலயும் அவ சைக்கியாட்ரிக் பேஷன்ட் வேற. 

எனக்கும் அப்ப எந்த அந்தஸ்தும் கிடையாது. குறுக்க ஜாதி வேற...”“புரியுதுடா. ஆனா, சினிமால மட்டும் இந்த காதல் எப்படியோ ஜெயிச்சிடுது பார்த்தியா?”

“நிஜ வாழ்க்கைல நடக்காதத எல்லாம் கற்பனைல நடத்திக் காட்றதுதானே சினிமா? ஒருத்தன் பத்து பேரை அடிக்கறதும் மரத்தைச் சுத்தி வந்து டூயட்
பாட்றதும் நிஜத்துல சாத்யமா என்ன?”

“சரி... இத்தன வருஷம் கழிச்சு உனக்குன்னு யாருமில்லாத ஊருக்கு இப்ப நீ எதுக்காக வந்திருக்கே..?”
“ஏன் உன்னைப் பார்க்க வரக்கூடாதா?”

“நம்பிட்டேன்டா... நம்பிட்டேன். சும்மா சொல்லு. ரேணுகாவைப் பாக்கணுமா?”
சாந்தாராம் முன் தேக்கமாகி வெறித்தான் சுந்தரம். பின் மெ...ல்...ல... “அவ இப்ப எப்படிடா இருக்கா?”
“நல்லாதான்டா இருக்கா. அதிராதே. அவளுக்கு இந்த 2025லயும் நாலு பிள்ளைங்க...”
“நெ...நெஜமாவா?”

“ஏன்... நம்ப முடியலையா? இல்லை ஜீரணிக்க முடியலியா?” அப்படி அவன் கேட்ட மறுநொடி வாயை வேகமாகப் பொத்திய சுந்தரம், “நிஜமா சொல்றேன்டா... இப்பதான்டா எனக்கு நிம்மதியே பிறந்திருக்கு. எங்க காதல் பலருக்குத் தெரியும். அதனால அவ வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்குமோனு ஒரு பயம் இருந்துகிட்டே இருந்ததுடா...” என்ற சுந்தரத்தின் முகத்தில் புது ரத்தம் பாய்ந்த மாதிரி ஒரு பிரகாசம்.“ஆமா. உன் குடும்பத்த பத்தி நீ ஒண்ணும் சொல்லவே இல்லையே?”

சாந்தாராமின் கேள்வி சுந்தரத்தை ஒரு முட்டுச்சந்தில் ஓட முடியாமல் தடுத்து நிறுத்தி விட்டதைப் போல திணறலோடு நிறுத்தியது. பேச்சே வரவில்லை.

“என்னடா முழிக்கறே?”“இல்ல... எனக்கும்... எனக்கும்... நாலு பசங்க...” என்றான் திணறலோடு.“என்ன ஒரு ஒத்துமைடா! எப்படியோ உனக்கும் ஒரு குடும்பம், பிள்ளைகள்னு செட்டிலாயிட்டே! நல்லவேளை இந்த காதல் உன்னையும் தேவதாஸ் ஆக்கல. இவளையும் பார்வதி ஆக்கிடலை. சந்தோஷம்டா...”

“ஆமாம்... சந்தோஷம்தான்! இருபது வருஷத்துக்குப் பிறகு வந்திருக்கற சந்தோஷம்...”“அப்ப நீ ரேணுகா எப்படி இருக்காளோன்னே வாழ்ந்திருக்கேன்னு சொல்லு...”“ஆமாம்டா. நான் இல்லைன்னா அவ வேற யாருக்கும் கழுத்த நீட்டமாட்டேன்னு சத்தியமே பண்ணியிருந்தா. 

அதுதான் என்னை ரொம்பவே கலவரப்படுத்திக்கிட்டிருந்தது...”“காதலிக்கும்போது இப்படி சத்தியம் பண்ணிக்கறது ஒரு சகஜமான விஷயம்தானேடா?”“இருந்தாலும் பண்ணது சத்தியமாச்சே..?’’“விடு. அதெல்லாம் உணர்ச்சி மிகுதியில் ஹார்மோன் பண்ற கூத்து. இப்ப நீ தெளிவடைஞ்சிட்டேல்ல..?”

“உம்... வந்து...”
“என்ன... ரேணுகாவைப்
பாக்கணுமா?”
“...”
“என்ன யோசனை...

பாக்கணுமா?”
“அ... ஆமா... ஆனா, நான் பாக்கறதே தெரியக் கூடாது...”
“புரியுது. இப்ப அவ இன்னொருத்தர் பொண்டாட்டி. உன்னை பாக்கறதால அவ சலனப்படக் கூடாதுன்னு நினைக்கறே! சரியா?”“ஆமாண்டா...”“அப்ப ஒண்ணு பண்றேன். என் பட்டுத்தறிக்கு அவதான் கொண்டை சுத்தித்தருவா. அதை எடுத்துகிட்டு இங்க வரச் சொல்றேன். நீ அதோ அந்த மரபீரோ பின்னால மறைஞ்சுக்கோ. அப்படி பாத்தாதான் உண்டு...’’“அது போதும்... அது போதும்...” சுந்தரம் படபடத்தான்.

அடுத்த பத்து நிமிடத்தில் ரேணுகாவும் நூல் கொண்டைகளுடன் வந்தாள். சாதாரண நூல் சேலை, ஒற்றைப் பின்னல் சடை, கழுத்தில் மஞ்சள் கயிற்றோடு கூடிய ஒரு கவரிங் சங்கிலி, மிக மிக ஒடிசல் தேகம் என்று ஒரு நெசவாளியின் வறுமையை அப்பட்டமாய் பிரதிபலித்தாள்.இளமையில் மின்னித் தெரிந்தவள். 

அதிலும் பாவாடை தாவணியில் பார்த்த விழிகளை மூட விட மாட்டாள். சுந்தரத்துக்குள் அவள் உருவம் கண்ணீரைச் சுரக்க விட்டது. சுந்தரம் அவளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ரேணுகாவிடம் ஏதேதோ பேசினான் சாந்தாராம்.

ஒரு கட்டத்தில் அவளும் ‘‘பெரியவ காலேஜ்ல இருந்து வர்ற நேரம்... பசியோடு வருவா. நான் கிளம்பறேன்...” என்று திரும்பிச் சென்றாள்.

சுந்தரமும் வெளியே வந்தான்.
“என்னடா... நல்லா பார்த்
தியா? திருப்தியா?”

“ரொம்பவே கறுத்து இளைச்சிட்டாடா... எப்படி இருப்பா?”“நீ கூடதான் மாறிட்டே. மாற்றம்தான் மாறாததுன்னு நீதானே சொன்னே?”“ரொம்ப தேங்க்ஸ்டா. உன்னோட இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன்...”“பாத்தியா... உடனேயே என்னை மூணாம் மனுஷனாக்கிட்டே...” அன்று அந்தப் பேச்சு அதோடு முடிந்து போனது.சேலம் விமானநிலையம்.

போகவர டாக்சி புக் செய்து அதில் விமான நிலையம் வந்திருந்தான் சுந்தரம். உடன் வழியனுப்ப வந்தவனாய் சாந்தாராம்.“போய் லெட்டர் போடு. சாரி... இப்பல்லாம் யார் லெட்டர் போட்றா? எனக்கும் பழைய நினைப்பு. போன் பண்ணு...”

“நிச்சயம். நீயும் ஒரு தடவை சிங்கப்பூர் வாடா...”“நான்... சிங்கப்பூருக்கு... ஓவந்துட்டா போச்சு...”“நான் பேச்சுக்கு சொல்லல. நிஜமா சொல்றேன். விசா, டிக்கெட் எல்லாம் என் பொறுப்பு. அங்க வந்து ஒரு 10 நாள் நல்லா ஊரைச் சுத்துங்க. எனக்கும் சம்யுக்தா சமையலைச் சாப்பிட்ட மாதிரி இருக்கும்...’’“ஏன்... உன் பொண்டாட்டி சரியா சமைக்க மாட்டாளா?” சாந்தாராமின் கேள்வி முன் சற்று திணறினான் சுந்தரம்.

“சரிடா... நேரமாச்சு. கிளம்பறேன். பெரிய பாரத்தோட வந்தேன். இப்ப ரொம்ப லேசான மனசோட போறேன். எல்லாம் உன்னாலதான். வரட்டுமா?”

“போய்ட்டு வா. ரேணுகாவை இனி மனசுல சுமக்காதே. உன் வாழ்க்கைய பாரு...” விடை கொடுத்தான் சாந்தாராம். அப்படியே கட்டித் தழுவி விட்டு பிரிந்து வெளியே வந்தான். அவன் கைபேசியில் அழைப்பொலி. திரையில் ரேணுகா பெயர்!
“சாந்தா...”“சொல்லு ரேணு...”“போய்ட்டாரா..?”

“உம்... இப்பதான் அனுப்பிட்டு வெளிய வரேன்...”
“என்னப் பத்தின எந்த உண்மையையும் சொல்லலதானே?”“நீதான் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டியே... அப்புறம் எப்படி சொல்வேன்? ஆனா, உனக்கு கல்யாணமாகி நாலு பிள்ளைங்க இருக்குங்கற அந்த பொய் அவனுக்கு பெரிய நிம்மதியைத் தந்ததை என்னால நல்லா உணர முடிஞ்சது...’’“எனக்கும் அதுதான் வேணும். 

அவருக்கும் நாலு குழந்தைங்கன்னு நீ சொல்லவும் ஒரே ஆச்சரியம், சந்தோஷம்...”“அது ஒரு பொய் ரேணு. நீதான் அவன் குடும்பம் குட்டியோடு சந்தோஷமா இருக்கான்னு நினைக்கணுமா? அவன் நினைக்கக் கூடாதா என்ன?”

“என்ன சொல்றே சாந்தா?”
“நீ அவனுக்காக பொய் சொன்ன மாதிரியே, அவனும் உனக்காக பொய் சொல்லியிருக்கான். அதை இப்பதான் கண்டு பிடிச்சேன். 

அங்க நானும் சம்யுகதாவும் வரணுமாம்... சம்யுக்தா சமையலை அவன் விரும்பிச் சாப்பிடணுமாம்... புரியலை? அவன் இப்பவும் பிரம்மச்சாரிதான்!”“நெ... நெஜமாவா?”“உங்க காதலுக்கு அன்னிக்கு உன் அண்ணன் எதிரின்னா இன்னிக்கு உங்க எண்ணங்களே எதிரியா மாறிடிச்சு. விதி இப்படிக்கூடவா விளையாடும்?” யதார்த்தமாகத்தான் கேட்டான் சாந்தாராம். மறுமுனையில் ரேணுகாவிடம் விசும்பி அழும் சப்தம் மட்டுமே.

இந்திரா சௌந்தர்ராஜன்