கனடாவின் பிரதமராக அனிதா ஆனந்த்?
சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவராக கடந்த 2015ம் ஆண்டில் கனடாவின் பிரதமராகப் பதவியேற்றவர் அவர். அப்போதிலிருந்து தொடர்ந்து பத்து ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருகிறார். இந்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் உட்கட்சியிலேயே அவருக்கு செல்வாக்கு சரிந்த காரணத்தினாலும், நாடு முழுவதும் ஆதரவு குறைந்து வருவதாலும் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழ, இப்போது தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் முன்னணியில் அடிபட்டு வருகிறது. யார் இந்த அனிதா ஆனந்த் என்பதே இணையத்தில் லேட்டஸ்ட் வைரல்! தற்போது கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சராக இருப்பவர்தான் அனிதா ஆனந்த். இதற்குமுன்பாக தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பொது சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். அதனாலேயே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது.
கடந்த 1967ம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தின் கென்ட்வில் நகரில் பிறந்தவர் அனிதா ஆனந்த். தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர். பொதுநல மருத்துவர். தாய் சரோஜ் தௌலத் ராம், பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்டவர்.
மயக்க மருந்தியல் நிபுணர். அனிதா ஆனந்திற்கு ஓர் அக்காவும் ஒரு தங்கையும் உள்ளனர். அக்கா கீதா ஆனந்த் கனடாவில் தொழிலாளர் வழக்கறிஞராகவும், தங்கை சோனியா ஆனந்த் மருத்துவப் பேராசிரியராகவும் இருக்கின்றனர். அனிதா ஆனந்தின் குடும்பம் 1960களில்தான் கனடா சென்றுள்ளது. அதாவது, 1960களின் தொடக்கத்தில் அனிதாவின் அப்பா ஆனந்தும், அம்மா சரோஜ் தௌலத்ராமும் நைஜீரியாவில் வசித்து வந்தனர். அப்போது தந்தை ஆனந்த், கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதிக்கு பயணித்துள்ளார். அங்கே குடியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்குமா எனப் பார்த்துள்ளார். அப்போது அவரின் கண்ணில்பட்ட இடம்தான் கென்ட்வில் நகர். அன்று அங்கே சில தென்னிந்திய குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் மனைவி, மகள் கீதாவுடன் கென்ட்வில் நகரில் செட்டிலானார் ஆனந்த். அங்கே அனிதாவும், சோனியாவும் பிறந்தனர்.
அனிதா ஆனந்த் அங்கே பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் 1985ம் ஆண்டு ஆன்டோரியா நகருக்கு இடம்பெயர்ந்தார். அங்கே குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை படித்தார். 1989ம் ஆண்டு தங்கப்பதக்கத்துடன் வெளியில் வந்தவர், ஆக்ஸ்போர்டில் உள்ள வாதாம் கல்லூரியில் நீதித்துறை சம்பந்தமான படிப்பைப் பயின்றார். தொடர்ந்து கனடாவின் டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்தார்.
இங்கேதான் அனிதா தனது கணவர் ஜானைச் சந்தித்தார். 1995ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது நான்கு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்தார். தொடர்ந்து இதே பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராகப் பணியாற்றினார்.
ஆரம்பத்தில் கனடாவின் சர்வதேச கார்ப்பரேட் சட்ட நிறுவனமான டோரிஸில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் ஆன்டோரியாவில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார் அனிதா. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் வருகை தரும் பேராசிரியராகவும் விளங்கினார். 2006ம் ஆண்டு முதல் டொரொன்டோ பல்கலைக்கழகத்தின் முழுநேர சட்டப் பேராசிரியராக ஆனார். பின்னர் டீன், அகடமிக் இயக்குனர் எனப் பல்வேறு நிலைகளுக்கு உயர்ந்தார். தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் நிர்வாகத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்தார். இதற்காக 2019ம் ஆண்டு ராயல் சொசைட்டி ஆஃப் கனடாவின் யுவான் அல்லேர் பதக்கம் அவருக்கு அறிவிக்கப்பட்டது. இதே 2019ம் ஆண்டில்தான் அவரின் அரசியல் பிரவேசமும் நடந்தது.
ஆம். அது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நேரம். அப்போது லிபரல் கட்சியின் சார்பில் ஆன்டோரியா மாகாணத்தின் ஓக்வில் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து 2015ல் வெற்றி பெற்றிருந்த ஜான் ஆலிவர், 2019ம் ஆண்டு தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
இதனால், அனிதா ஆனந்திற்கு அந்த சான்ஸ் கிடைத்தது. லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியை ஈட்டி முதல்முறையாக கனடாவின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவரின் பின்புலத்தால் அவருக்கு பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அது கொரோனா தொற்றுநோயின் உச்சக்கட்ட நேரம். அப்போது கனேடியர்களுக்குத் தேவையான தடுப்பூசிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விரைவான சோதனைகள் செய்தல் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் அனிதா ஆனந்த். இவரின் முன்னெடுப்பால் தடுப்பூசி எண்ணிக்கை அதிகரித்தது. 2021ல் கனடா, உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதத்தை எட்டியது. இதனால், பலராலும் பாராட்டப் பெற்றார்.
இதனால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நம்பிக்கைக்கு உரியவராக ஆனார். பின்னர் 2021ல் மீண்டும் பொதுத்தேர்தல் நடக்க அதிலும் வெற்றி பெற்றார் அனிதா ஆனந்த். இப்போது அவருக்கு தேசிய பாதுகாப்புத் துறை அளிக்கப்பட்டது. அந்தத் துறையின் அமைச்சராக அவர் ராணுவ பாலியல் முறைகேடு வழக்குகளை விசாரிக்கச் செய்தார்.
அத்துடன் கனடா ஆயுதப் படைகளில் நீடித்த கலாசார மாற்றத்தை உருவாக்குதல், இராணுவ செலவினங்களை உயர்த்துவதன் மூலம் கனடாவின் இராணுவத்தை சிறந்த முறையில் ஆயத்தப்படுத்துதல், கனடா தனது இராணுவ நிலைப்பாடுகள் மூலம் உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதி செய்தல் என மூன்று முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்தார்.
இந்நேரத்தில் உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கியது. அப்போது ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு எதிராக உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், உக்ரைனுக்கு ஆதரவாக இராணுவ உதவிகள் செய்யவும் முன்நின்றார்.
இதன் பின்னர் கருவூல வாரியத்தின் தலைவராக அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் சிறு வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒழுங்குமுறை சுமைகளை குறைக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். டிசம்பர் மாதம் போக்குவரத்துத் துறையுடன் கூடுதலாக உள்நாட்டு வர்த்தகத் துறை பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டது.
எல்லா பொறுப்புகளையும் சிறப்பாக மேற்கொண்டார். கூடவே குடும்பத்தையும் பேலன்ஸாக கொண்டு சென்றார். எந்தச் சூழ்நிலையையும் சிறப்பாகக் கையாண்டு பணியாற்றியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
முக்கியமாக அரசாங்கப் பணிகளில் அவரின் அனுபவமும், அவற்றிலுள்ள சிக்கல்களை அணுகும் முறையும், அவரின் வலுவான சட்டப் பின்னணியும், தலைமைத்துவமும் இன்று பிரதமர் பதவிக்கான வலுவான வேட்பாளராக அவரை முன்னிறுத்தி இருக்கிறது. கனடாவின் அடுத்த பிரதமராக 57 வயதான அனிதா ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றன தகவல்கள்.
பேராச்சி கண்ணன்
|