இந்த Watch விலை ரூ.22 கோடி!



கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது ஒரு கைக்கடிகாரம். காரணம், அதன் விலையான 22 கோடி ரூபாய்!முன்னணி ஆடம்பர பிராண்டான ‘ரிச்சார்ட் மில்’லின் தயாரிப்பு இது. ‘ஆர்எம் 52-04 ஸ்கல் ப்ளூ சபையர்’ என்பது இந்த மாடலின் பெயர். இந்த மாடலில் மூன்றே மூன்று கைக்கடிகாரங்களை மட்டுமே தயாரித்திருக்கிறது ‘ரிச்சார்ட் மில்’. அதனால்தான் இதை அரிய வாட்ச் என்கின்றனர்.

ஒரு முழுமையான நீல மாணிக்கக் கல்லால் ஒவ்வொரு கைக்கடிகாரத்தையும் வடிவமைத்திருக்கின்றனர். அதனால்தான் இந்த விலை என்கின்றனர்.  இந்த மூன்று கைக்கடிகாரங்களையும் தங்களின் வசமாக்க பெரும் பணக்காரர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது.  

பொதுவாகவே ‘ரிச்சார்ட் மில்’ கைக்கடிகாரங்களின் விலை பல லட்சங்களில் ஆரம்பித்து, கோடிகளில் செல்கின்றது. இத்தனைக்கும் இந்த பிராண்டைஆரம்பித்து 24 வருடங்கள்தான் ஆகின்றன. மிகக்குறைந்த வருடங்களிலேயே ஒரு கைக்கடிகார பிராண்ட், இவ்வளவு பிரபலமாவது இதுவே முதல்முறை. இந்த பிராண்டை உருவாக்கிய ரிச்சார்ட் மில்லை, ‘‘தனி ஒரு மனிதராக கடிகாரத்துறையையே புரட்டிப்போட்டுவிட்டார்...’’ என்றுபாராட்டுகிறது ‘த நியூயார்க் டைம்ஸ்’.

சிறு வயதிலிருந்தே கார், வாட்ச், விமானங்களின் மீது ஆர்வத்துடன் இருந்தார் மில். குறிப்பாக வாட்ச்சில் இயங்கும் மெக்கானிக்கல் விஷயங்கள் மீது பெருங்காதல் கொண்டிருந்தார் ரிச்சார்ட்.

மார்க்கெட்டிங் துறையில் பட்டப்படிப்பை முடித்த ரிச்சார்ட், 1974ம் வருடம் ‘பின்ஹோர்’ எனும் வாட்ச் மேக்கிங் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.

அவருக்கு சந்தைப்பிரிவில்தான் வேலை என்றாலும் கூட, அதிக நேரம் தயாரிப்புப் பிரிவில்தான் இருப்பார். இங்கேதான் கைக்கடிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் மெக்கானிக்கல் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

எண்பதுகளில் ‘மத்ரா’ எனும் பெரு நிறுவனம் ‘பின்ஹோர்’ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. ‘மத்ரா’வின் வாட்ச் மேக்கிங் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு ரிச்சார்டுக்குக்
கிடைத்தது.

பிறகு ‘மத்ரா’வின் வாட்ச் மேக்கிங் துறையை ‘சீகோ’ எனும் பிரபல கைக்கடிகார நிறுவனம் கையகப்படுத்தியது. அங்கேயும் சிலகாலம் பணிபுரிந்தார். சுமார் 16 வருடங்கள் வாட்ச்மேக்கிங் துறையில் வேலை செய்ததால், கைக்கடிகாரத் தயாரிப்பு ரிச்சார்டுக்கு அத்துபடியாகிவிட்டது. சாதாரண பிராண்டிலிருந்து, உலகின் விலையுயர்ந்த பிராண்டுகள் வரை அனைத்து வகையான கைக்கடிகாரங்களையும் கவனித்திருக்கிறார் ரிச்சார்ட்.

பல ஆடம்பர பிராண்டுகளில் பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேகமான கைக்கடிகாரங்கள் இல்லை. இந்த வெற்றிடத்தை தனக்குரிய வாய்ப்பாகப் பார்த்தார் ரிச்சார்ட்.
இதுபோக சமகாலத்தில் இயங்கி வந்த பல கடிகார நிறுவனங்கள் நவீனமான, விலைஉயர்ந்த உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரங்களைப் போலவே டிசைன் செய்கின்றன அல்லது அரதப் பழசான டிசைன்களையே பிரதியெடுக்கின்றன என்பதையும் கண்டறிந்தார் ரிச்சார்ட்.

விளையாட்டு வீரர்களுக்கான நல்ல டிசைன் கொண்ட கைக்கடிகாரத்துக்கு நல்ல சந்தைஇருக்கிறது என்பது குறித்து நண்பர் டொமினிக்கிடம் பகிர்ந்தார் ரிச்சார்ட். கடிகார நிறுவனத்தை நடத்தி வந்த டொமினிக்கின் உதவியால் 2001ம் வருடம் ‘ரிச்சார்ட் மில்’ பிராண்டை உருவாக்கினார் ரிச்சார்ட். 

அப்போது அவருக்கு வயது 50. பல நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, 2001ம் வருடமே ‘ரிச்சார்ட் மில்’லின் முதல் மாடல் ‘ஆர்எம்001’ வெளியானது. இதை டைட்டானியம் மற்றும் கார்பன் நானோ ஃபைபரில் வடிவமைத்திருந்தார் ரிச்சார்ட்.

ஒரு பேரலைப் போல இந்தக் கைக்கடிகாரம் டிசைன் செய்யப்பட்டிருந்தது. பலர் இந்த டிசைனை கேலி செய்தனர். இந்தக் கடிகாரத்தை வாங்குவது ஊதாரித்தனம் என்று விமர்சித்தனர். ஆம்; அப்போதே இந்த கைக்கடிகாரத்தின் விலை ஒரு கோடி ரூபாய். ஆனால், இதன் டிசைனில் மயங்கி, சில பிரபலங்கள் வாங்கினார்கள். இதன் விலையும், டிசைனும் பில்லினியர்களுக்குத் தனித்த ஓர் அடையாளத்தைக் கொடுத்தது. 

இன்று அந்தஸ்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், பில்லினியர்களின் அடையாளமாகவே மாறிவிட்டது ‘ரிச்சார்ட் மில்’. ‘ஆர்எம்001’ மாடல் கடிகாரங்களின் விற்பனை ‘ரிச்சார்ட் மில்’லை ஓர் ஆடம்பர பிராண்டாக மாற்றியது. உலகின் முன்னணி கைக்கடிகார பிராண்டுகள் சந்தையில் ஓர் ஆடம்பர பிராண்டாக இடம்பிடிக்க குறைந்தபட்சம் இருபது வருடங்களாவது தேவைப்படும்.

ஆனால், ஒருவருடத்திலேயே அந்த இடத்தைப் பிடித்துவிட்டது ‘ரிச்சார்ட் மில்’லின் சாதனை. இதற்கு முக்கிய காரணமே, அதன் வித்தியாசமான டிசைன்தான்.
நீல மாணிக்கக் கல்லால் வடிவமைக்கப்பட்ட கைக்கடிகாரத்தின் டிசைனும் ரொம்பவே வித்தியாசமானதுதான். இருந்தாலும் இவ்வளவு விலை ஏன் என்ற கேள்வி எழாமல் இருக்காது . இதன் விலைக்கான காரணங்களைக் கைக்கடிகார நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் மத்தியில் ‘ரிச்சார்ட் மில்’ கைக்கடிகாரத்துக்கான தேவை அதிகம். ஆனால், குறைந்த அளவே உற்பத்தி நடக்கிறது. உற்பத்தியைவிட, தேவை பலமடங்கு அதிகமாக இருப்பது அதன் விலைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 

உதாரணத்துக்கு, கடந்த வருடம் 5,300 கைக்கடிகாரங்களை மட்டுமே தயாரித்தது, ‘ரிச்சார்ட் மில்’. ஒரு கைக்கடிகாரத்தின் சராசரி விலை சுமார் 2 கோடி ரூபாய். ஆனால், ‘ரிச்சார்ட்மில்’ கைக்கடிகாரத்தை வாங்குவதற்காக காத்திருந்தவர்களின் எண்ணிக்கையோ 25 ஆயிரத்தைத் தாண்டும்.

இதுவரைக்கும் கைக்கடிகாரத்தில் பயன்படுத்தாத அரியவகை மெட்டீரியல்களை பயன்படுத்தி ‘ரிச்சார்ட் மில்’ கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

குறிப்பாக இதன் அடிப்பாகங்களுக்காக மிகவும் சிக்கலான மெட்டீரியலான கார்பன் நானோ ஃபைபரை பயன்படுத்துகின்றனர். இந்த மெட்டீரியலை பயன்படுத்தும் முதல் கைக்கடிகார பிராண்டும் ‘ரிச்சார்ட் மில்’தான். மட்டுமல்ல, ஃபார்முலா ஒன் மற்றும் விமானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களான சிலிக்கான் நைட்ரைட், கோல்டு ஃப்யூஸ்ட் வித் கார்பன், லித்தல், கிராபேன், கிரேடு 5 டைட்டானியம் போன்றவற்றையும் பயன்படுத்தும் ஒரே பிராண்டும் இதுவே. இப்படியான அரிய வகை மெட்டீரியல்களும் விலை அதிகமாக இருக்க ஒரு காரணம்.
எவ்வளவு பெரிய அதிர்ச்சியையும் தாங்கும் திறன் கொண்டது ‘ரிச்சார்ட் மில்’. அதனால் ஃபார்முலா ஒன் கார்பந்தய வீரர்கள், மோட்டார் ரேஸிங் வீரர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது இந்தக் கைக்கடிகாரம்.

அத்துடன் இதன் எடை மிகவும் குறைவு. டென்னிஸ் விளையாட்டு வீரர் ரபேல்நடால் விளையாடும்போது அணிந்திருக்கும் ‘ரிச்சார்ட் மில்’லின் எடை 20 கிராம்தான். நுணுக்கமான வேலைப்பாடுகள், பிரமாதமான டிசைன் போன்றவையும் இதன் விலைக்குக் காரணங்கள். முக்கியமாக ‘ரிச்சார்ட் மில்’லை வாங்குவது என்பது ஒரு முதலீடு. 

ஆம்; இதன் விலை சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ‘ரிச்சார்ட் மில்’லின் கைக்கடிகாரம், இப்பொழுது குறைந்தபட்சம் ஐந்து கோடிக்காவது ஏலம் போகும் என்கின்றனர்.

மட்டுமல்ல, 100 சதவீதம் முழுமையாக இல்லையென்றால் குப்பைக்குப் போய்விடும். ஆம்; ‘ரிச்சார்ட் மில்’ தொழிற்சாலையில் தயாராகும் 100 கைக்கடிகாரங்களில், 60 கைக்
கடிகாரங்களே தரக்கட்டுப்பாடு சோதனையில் வெற்றிபெற்று சந்தைக்கு வருகின்றன. மீதி 40 கைக்கடிகாரங்கள் நிராகரிக்கப்பட்டு, குப்பைத்தொட்டிக்குச் செல்கின்றன.
இந்தத் தரமும் அதன் விலைக்கு ஒரு காரணம். மொத்தத்தில் இது வாட்ச் அல்ல... சொத்து.

த.சக்திவேல்