எனக்கு மட்டும் தமிங்கிலீஷ்ல ஸ்கிரிப்ட் கொடுத்தாங்க!



இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம்’ பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர் வின்சு ரேச்சல். பிரபல மாடலான இவர், பா.இரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் வழியாக சினிமா நட்சத்திரமாக மாறியவர். 
இப்போது ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பாக அதியன் ஆதிரை இயக்கியுள்ள ‘தண்டகாரண்யம்’ செய்துள்ளார். மலையாளக் கரையோரத்திலிருந்து வந்துள்ள இவர் தன்னுடைய சினிமா அனுபவத்தை மழலைத் தமிழில் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

யார் இந்த வின்சு ரேச்சல்?

பில்டப் கொடுக்குமளவுக்கு நான் பெரிய ஸ்டாரெல்லாம் கிடையாது. டென்ஷன் இல்லாம வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து பார்க்கணும்னு நினைக்கிற கேரக்டர். சான்ஸ் கிடைச்சா ஜோக்கும் அடிப்பேன். 
குறும்பு சேட்டையும் பண்ணுவேன்.உங்களுக்கு ஃபேமஸ் டைரக்டர் அடூர் கோபாலகிருஷ்ணனைத் தெரியும்னு நினைக்கிறேன். அவர் பெயர்ல இருக்கே ஊர்... அதுதான் எனக்கும் சொந்த ஊர். அப்பாவுக்கு துபாயில் வேலை என்பதால் சின்ன வயசுலேயே ஃப்ளைட்ல பறக்க ஆரம்பிச்சுட்டேன்.

கல்லூரிகளின் மாநகரமான சென்னையில் படிக்கணும்னு ஆசைப்பட்டு 2008ல் இங்க வந்தேன். எனக்கு இங்கிலீஷ்னா ரொம்ப இஷ்டம். சொல்லப் போனால் நடிக்க வராம இருந்திருந்தா இந்நேரம் எதாவது ஒரு காலேஜ்ல பாடம் நடத்திட்டு இருந்திருப்பேன்.சினிமாவுக்கு எப்படி வந்தேன்னு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறீங்க. சொல்றேன்... காலேஜ் டைம்லயே மாடலிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அது என்னமோ தெரியல... புக்ஸை திறந்தாலே ஹாலிவுட் படங்கள்தான் என் மனசுல ஓட ஆரம்பிக்கும்.

மிஸ் இந்தியா, உலக அழகிப் போட்டிகளை டிவியில் பார்த்துப் பார்த்து நானும் அது போல வரணும்னு ஆசைப்பட ஆரம்பிச்சேன். அதிலிருந்து என்னுடைய ஃபோக்கஸ் மாடலிங், சினிமான்னு மாறிடுச்சு.வீட்டுல என் மேல நம்பிக்கை அதிகம் என்பதால் அப்பா, அம்மாவும் பச்சைக்கொடியை ரெடியா வெச்சிருந்தாங்க. மாடலிங் ஃபீல்டுல எனக்கு நல்ல பேர். ஏராளமான ஷோ பண்ணியிருக்கிறேன். விளம்பரங்கள் எவ்வளவு பண்ணியிருப்பேன்னு தெரியல.

ஏனெனில், கடந்த பத்து வருஷங்களாக விளம்பரங்களில் பிசியாக இருந்து வருகிறேன். சமீபத்துலதான் குளியல் சோப் விளம்பரத்துக்காக தாய்லாந்து சென்று வந்தேன்.
மாடலிங் - சினிமா இவ்விரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

பத்து வருஷமா மாடலிங் ஃபீல்டில் இருக்கிறேன். என்னுடைய முதல் படம் ‘நித்தம் ஒரு வானம்’. பா.இரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ முதலில் வெளியானது. இப்போது
‘தண்டகாரண்யம்’.மாடலிங், சினிமா இவ்விரண்டும் வெவ்வேறு உலகங்கள். 

சினிமாவில் யாருடன் வேலை செய்கிறோம் என்பது முக்கியம். ‘நட்சத்திரம் நகர்கிறது’ டீம் நான் சினிமாவில் காலூன்ற பெரிய உதவியாக இருந்தார்கள். சொல்லப்போனால் அந்தப் படம்தான் எனக்கு அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு.

நடிப்பைப் பொறுத்தவரை விளம்பரங்களுக்கு மிகைப்படுத்தி நடிக்கணும். சினிமாவுக்கு கொஞ்சம் அடக்கி வாசிச்சாலே போதும். அதுவும் நமக்கு அமையும் கேரக்டரைப் பொறுத்து மாறும்.

பா.இரஞ்சித்...?சினிமாவுக்கு வரும்போது எனக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ லைவ் சவுண்ட் என்பதால் மனசுக்குள் டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.
ஏனெனில், அந்தப் படத்துல நடிச்ச எல்லோருமே சினிமா  அனுபவம் உள்ளவர்கள். 

நான் அப்படி கிடையாது. என்னால் டைம் வேஸ்ட் ஏற்படக்கூடாதுன்னு மனசு துடியா துடிக்கும்.
நான் படுற அவஸ்தையைப் பார்த்துட்டு மொத்த டீமும் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. பா.இரஞ்சித் காட்சிகளை அழகாக விவரித்து, ஆர்ட்டிஸ்டுக்கு ஃப்ரீடம் கொடுத்ததால் என் வேலையை சிறப்பா செய்ய முடிஞ்சது.

‘தண்டகாரண்யம்’ல உங்களுக்கு என்ன கேரக்டர்?

‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் பார்த்துட்டு இயக்குநர் அதியன் ஆதிரை இந்த வாய்ப்பு கொடுத்தார். இதுதான் என்னுடைய முதல் படம் எனுமளவுக்கு படத்தில் பெரிய அனுபவம்
கிடைச்சது.படத்துல கலையரசன் ஜோடியா வர்றேன். என்னுடைய போர்ஷனை முப்பது நாட்களுக்கு மேல் எடுத்திருப்பார்கள். வனப் பகுதியையொட்டிய மலைக் கிராமத்தில் ஷூட்டிங் நடந்துச்சு.

கலையரசன், தினேஷ் ஆகிய இருவருடன் நடிச்சது நல்ல அனுபவமா இருந்துச்சு. சீனியர்ஸ் என்றாலும் எனக்கு ப்ரஷர் தராம என் வேலையை ஹேப்பியா பண்ணுமளவுக்கு சப்போர்ட் பண்ணினார்கள்.‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திலும் கலையரசன் ஜோடியாக வந்திருப்பேன். பழகிய நண்பர்கள் என்பதால் டென்ஷன் இல்லாமல் நடிக்க முடிஞ்சது.

தினேஷ் பழகுவதற்கு இனிமையானவர். எப்போதும் ஜாலியா இருப்பார். வனப் பகுதியில் ஷூட்டிங் என்பதால் ஸ்பெஷல் சாப்பாடு எதுவும் கிடைக்காது. சில சமயங்களில் தினேஷ் சிட்டியிலிருந்து டீமுக்கு உணவு வரவழைத்துக் கொடுப்பார்.

இயக்குநர் அதியன் சாரை இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய சிறந்த நண்பராக பார்க்கிறேன். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் ஸ்கிரிப்ட் ரீடிங், ரிகர்சல் என ஒன்றரை மாதம் பயிற்சி எடுத்திருப்பேன். இப்போது நான் பேசுற தமிழ் நல்லாயிருக்குன்னு நீங்க கூட சொன்னீங்க. அதற்கு காரணம் அதியன் சார். 

ஏனெனில், ‘தண்டகாரண்யம்’ படத்தில் தமிழை தெளிவாகப் பேசணும். லேங்வேஜ் விஷயத்துல கல்பனா தோழி உதவியா இருந்தார். அதியன் சார் எனக்கு மட்டும் ஸ்பெஷலா தமிங்கிலீஷ்ல பவுண்ட் ஸ்கிரிப்ட் கொடுத்தார். அதுவும் கேரக்டரை புரிஞ்சுக்க யூஸாச்சு.

படத்துல என்ன மாதிரி சவால் இருந்துச்சு?

டயலாக் போர்ஷனை ரிகர்சல் பண்ணியதால அந்த ஏரியாவுல எந்தப் பிரச்னையும் வரலை. காஸ்டியூம்தான் என்ன பண்ணப்போறேனோன்னு டென்ஷனா இருந்தேன். நிஜத்துல நான் அல்ட்ரா மாடர்ன் டிரஸ் போடுவேன். 

கேரக்டருக்காக பாவாடை, தாவணி போடணும். எனக்கு துளியும் சம்பந்தம் இல்லாத டிரஸ்.அந்த விஷயத்துல இயக்குநர் அதியன் என்னை எப்படி தேர்வு செய்தார்னு ஆச்சர்யமா இருக்கும். அது என்ன மாயமோ பாவாடை, தாவணி போட்டதும் கிராமத்துப் பெண்ணா என்னை நினைச்சுக்க முடிஞ்சது.

மாடலிங், சினிமா, ஓடிடி என தொடரும் உங்க சினிமா வாழ்க்கையில் என்ன மாதிரியான போராட்டங்களைப் பார்த்தீங்க?

ஓடிடியில் கவின், ரெபா நடிச்ச ‘ஆகாஷவாணி’யில் நானும் நடிச்சிருக்கிறேன். சினிமா அவ்வளவு ஈசி கிடையாதுன்னு தெரியும். ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் என என்னைச் சுற்றிலும் பாசிடிவ் வைப் இருந்ததால நிம்மதியா வேலை பார்க்க முடிஞ்சது.இதுவரை நான் வேலை பார்த்த இடங்களில் எல்லோரும் நல்லா சப்போர்ட் பண்ணியிருக்கிறார்கள். 

சினிமா மட்டுமல்ல, வாழ்க்கையில் ஜெயிக்கணும் என்றாலும் போராட்டம் இல்லாமல் எதுவுமில்லை. எனக்கு சப்போர்ட் சிஸ்டம் இருந்ததால் இன்னும் நான் போராட்ட எல்லைக்குள் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

யாருடைய டைரக்‌ஷன்ல நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க?

மணிரத்னம். அவருடைய படங்களில் பெண்களை சக்தி வாய்ந்த வகையில் சித்தரித்திருப்பார்; சித்தரிப்பார்.நடிக்க விரும்பும் கேரக்டர்?

பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில்... சூப்பர் ஹீரோயின் மாதிரி சும்மா ஆக்‌ஷன்ல தூள் கிளப்பணும்.

சினிமாவுல ரோல் மாடல் யார்?

நயன்தாரா. அவருடைய பயணம் எப்போது நினைச்சாலும் ஆச்சர்யத்தைத் தரும். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு எப்போதும் தன் கதாபாத்திரங்கள் வழியாக நேர்மை செய்யும் அற்புதமான நடிகை.

எஸ்.ராஜா