வீட்டுப் பொருட்களை அடுக்கித் தருவதுதான் எங்கள் வேலை!
எவ்வளவு பெரிய கப்போர்ட் இருந்தாலும் துணி வைக்க இடமே இல்லை... இந்த பீங்கான் பாத்திரங்களை எங்க அடுக்குவது? ஃப்ரிட்ஜை சமையல் அறையில் வைக்கலாமா அல்லது டைனிங் டேபிள் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்குமா? எப்படி வீட்டை அழகாக ஒழுங்குபடுத்துவது..?
இதுபோன்ற பல கேள்விகளுக்கான விடையினை அளித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஆன்சல். இவர் சான்றிதழ் பெற்ற ஆர்கனைசர். அதாவது, நம் வீட்டை அழகாக அமைத்துத் தருபவர். அதேசமயம் இவர் இன்டீரியர் டிசைனர் கிடையாது. பிறகு இவர் எப்படி வீட்டை அழகாக மாற்றி அமைத்துத் தருவார்? அவரே பதில் அளிக்கிறார். “ஒருவருடைய வீடு பார்க்க அழகாக இருக்குன்னு சொன்னா அவங்க தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பவர் என்று அர்த்தம். எனக்கு சின்ன வயசில் இருந்தே இந்தப் பழக்கம் உண்டு. நான் அன்றாடம் அணியும் துணியினைக்கூட என்னுடைய கப்போர்டில் அடுக்கிதான் வைப்பேன். எனக்கு எல்லா பொருட்களும் அந்தந்த இடங்களில் இருக்கணும். என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் என்னிடம் சொல்வது, ‘உன்னுடைய கப்போர்ட் மட்டும் ரொம்ப அழகா இருக்கு’ என்பதுதான். ஆனால், அப்போது எனக்குத் தெரியாது, இதுதான் என்னுடைய வேலையாக மாறும்னு.நான் என் வீட்டை எப்போதும் அழகா வச்சுக்கணும்னு நினைப்பேன். குறிப்பா இருக்கும் இடத்தைக் கொண்டு அதில் பொருட்களை அழகாக மாற்றி அமைப்பேன். அதற்கு காரணம் நான் வசித்த வீடுகள்.
என் கணவரின் வேலை காரணமாக நான் கொல்கத்தா, மும்பைன்னு மாறிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு வீடாக மாறும்போதும் அந்த வீட்டிற்கு ஏற்ப பொருட்களை வைப்பேன். கொல்கத்தாவில் நாங்க தங்கி இருந்தது பெரிய வீடு. அதற்கு ஏற்ப நாங்க வீட்டில் பொருட்களை வைத்திருந்தோம். மும்பையில், குருவிக்கூடு போலதான் வீடுகள் இருக்கும். அந்தச் சின்ன இடத்தில் நான் பொருட்களை வைக்கப் பழகினேன்.
இந்த அனுபவம்தான் எனக்கு ஒரு வீட்டை எவ்வாறு அழகாக, ஒழுங்காக அமைக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள உதவியது. இப்போது, எந்த ஒரு பொருளும் இல்லாத வீட்டைப் பார்த்தவுடனே, அந்த வீட்டில் எந்தப் பொருட்களை எங்கு வைக்கலாம் என்று என் மனத்திரையில் ஓடும்...” புன்னகைக்கும் ஆன்சல், தொடர்ந்தார்.‘‘நான் பிசினஸ் ஆரம்பித்த சில மாசங்களிலேயே கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. கோவிட் நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை.
அந்த சமயத்தில் வீட்டில் இருந்தபோது பலர் என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க. நிறைய பேர் தங்களின் வீட்டில் அன்று சமைத்த உணவுகளை வீடியோ எடுத்து போட ஆரம்பிச்சாங்க. சிலர் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டாங்க. ஒருசிலர் பேக்கிங் என அவர்களுக்கு மனசுக்கு பிடிச்சதை செய்தாங்க. குழந்தைகளும் வீட்டில் இருந்ததால், வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு, அலுவலக வேலையும் பார்த்தார்கள். எல்லாரும் வீட்டில் இருந்ததால், அவர்களுக்கான இடம் வீட்டில் இல்லாததைப்போல் உணர்ந்தார்கள். வீட்டில் இடம் குறைவாக இருப்பதாக நினைத்தார்கள். அந்த சமயத்தில் என் நண்பர்கள் பலர் என்னிடம் வீட்டை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்று ஆலோசனை கேட்டார்கள். ‘வீடே குப்பையா இருக்கு’ என்று சலித்துக் கொண்டார்கள். வீட்டில் உள்ள பொருட்களை சரியாக அமைக்கவும் ஆலோசனை கேட்டார்கள்.
அந்த சமயத்தில்தான் வீட்டில் உள்ள ஒவ்வொரு இடமும் எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. ஒவ்வொரு இடத்தையும் எவ்வாறு அழகாகவும், அதே சமயம் கலை நயத்துடனும் அமைக்கலாம் என்று யோசித்தேன். என் வீடு மட்டுமில்லாமல், என்உறவினர் மற்றும் தெரிந்தவர்களின் வீட்டை எல்லாம் மாற்றி அமைக்க ஆரம்பித்தேன். தெரிந்தவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது.
அப்படித்தான் ‘அரேஞ்ஜ் இட்ஆல்’ உருவானது...’’ என்று சொல்லும் ஆன்சல், இதில் இறங்குவதற்கு முன் ஏராளமான ஆய்வில் ஈடுபட்டாராம். ‘‘ஒரு தொழில் துவங்கப் போகிறோம் என்று திட்டமிட்டவுடன், அந்தத் தொழிலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த ஆய்வில் ஈடுபடுவதே சரி. அப்படி நானும் ஆராய்ச்சியில் இறங்கினேன்.
முதலில் சின்னச் சின்ன பிராஜக்ட்களை எடுத்து செய்தேன். மக்களுக்கு என்வேலை பிடிச்சிருந்தது. ஓரளவிற்கு என் வேலைபற்றி அடையாளம் கிடைத்த சமயத்தில்தான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லாரும் வீட்டில் முடங்க வேண்டிய சூழல்.
எங்களின் வேலையே வீட்டிற்குள் செய்வதுதான். இந்தச் சமயத்தில் யாரும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டாங்க. அதனால் என் வேலையிலும் முடக்கம் ஏற்பட்டது. கோவிட்டின் தாக்கம் கொஞ்சம் குறைந்தபோது நாங்க சென்னையில் செட்டிலாயிட்டோம். இங்கு மீண்டும் என் தொழிலுக்கான ஆய்வில் ஈடுபட்டு வீடுகளை அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமில்லாமல் முழு வீட்டின் அமைப்பையும் அழகாக மாற்றி அமைத்துத் தருகிறோம்...” என்றவர் தங்களின் வேலை குறித்து விவரித்தார்.“வாடிக்கையாளர் எங்களை அழைக்கும்போது, முதலில் அவர்களின் வீட்டிற்குச் சென்று அதன் அமைப்பை பார்ப்போம். அதன்பிறகு எந்தப் பொருளை எங்கு வைத்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிடுவோம். அடுத்து அவர்களின் உடை மற்றும் கிச்சன் கப்போர்ட்கள். பொதுவாக ஒருவரின் வீட்டின் அமைப்பை மாற்றுவது என்பது அவர்களின் தனிப்பட்ட இடத்திற்குள் நுழைவதற்கு சமம். அவர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்பதான் செயல்பட முடியும். உதாரணத்திற்கு, வேலைக்குப் போகும் பெண்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள்... இவர்கள் இருவரது உடைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கப்போர்ட்கள் ஒரே மாதிரியா இருக்காது.
அன்றாடம் அலுவலகத்திற்கு உடுத்தும் துணிகளை தனியாக ரகப்படுத்த வேண்டும். அதேபோல் பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கான உடைகளையும் தனியாக அடுக்க வேண்டும். சிலருக்கு காபி பிடிக்கும், ஒரு சிலர் டீ விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கிச்சனில் உள்ள பொருட்களை கைக்கு எட்டும் அளவில் வைக்க வேண்டும். அடுத்து மளிகைப்பொருட்கள் மற்றும் அரிசி போட்டு வைக்க ஒரே மாதிரியான ஜார்களை பயன்படுத்தினால், பார்க்க அழகாக இருக்கும்.
என்னதான் கப்போர்ட்கள் இருந்தாலும், எல்லாப்பொருட்களையும் அதில் திணிக்க முடியாது. எனவே, பொருட்களுக்கு ஏற்ப தனிப்பட்ட கப்போர்ட்களை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்குகிறோம். புடவைகளை பொதுவாக அடுக்கி வைக்காமல் ஹேங்கரில் மாட்டி வைக்கலாம். அவ்வாறு மாட்டும்போது கப்போர்டில் கீழே உள்ள பகுதி காலியாக இருக்கும். அங்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உடைகளை வைக்கலாம். அதையும் சின்ன பாக்சில் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.
சிலர் கலர் கலராக லெக்கின்ஸ் வைத்திருப்பார்கள். அதையும் நன்றாக மடித்து இந்த பாக்சில்அடுக்கி வைக்கலாம். தேர்வு செய்து அணிய வசதியாக இருக்கும். பொதுவாக கப்போர்ட்களில் வைக்கப்படும் உடைகளை நன்றாக மடித்து வைத்தாலே நமக்கு அதிக இடம் கிடைக்கும். எல்லாவற்றையும்விட சில உடைகளை நாம் பயன்படுத்தவே மாட்டோம். அதை யாருக்காவது கொடுத்து விடலாம். சேர்த்து வைப்பதால், கப்போர்டில் மற்ற துணிகளை வைக்க இடமில்லாமல் போகும்.
வீட்டை மாற்றி அமைப்பது ஒரு பெரிய வேலையா என்று கூட பலர் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் முழுதும் வீட்டைச் சுத்தப்படுத்திப் பார்த்தால்தான் அதில் இருக்கும் கஷ்டம் புரியும். அதுவே ஒரு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.
இதற்கான தீர்வை நாங்க கொடுக்கிறோம். சிலர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வீட்டை அமைத்துத் தரச் சொல்லி அழைப்பார்கள். சிலசமயம் ஒரு வருட மெயின்டினன்சும் நாங்க செய்கிறோம். சிலர் எனக்கு ஒரு முறை அமைத்துக் கொடுத்தால் போதும், அதன்பிறகு நாங்க பார்த்துக் கொள்கிறோம் என்பார்கள். அதற்கேற்பவும் ஒழுங்குபடுத்தித் தருகிறோம்...” என்று சொல்லும் ஆன்சல், சின்னச் சின்ன டிப்ஸ்களும் அளித்தார்.
“மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களின் கப்போர்ட்களை சுத்தம் செய்யுங்க. முக்கியமா தேவையற்ற துணிகளை அகற்றி, பயன்படுத்தும் துணிகளை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குர்த்தி லெக்கின்ஸ், ஜீன்ஸ் என்பதுதான்பெண்களின் அன்றாட உடையாகிவிட்டது.
துப்பட்டா மற்றும் லெக்கின்ஸ்களை நிறத்திற்கு ஏற்ப தனியாக அடுக்கி வைத்தால், தேர்வு செய்வது எளிது. புடவைகளுக்கு உகந்த ஹேங்கர்களை தேர்வு செய்யுங்கள். துணிகளை சுருட்டி வைக்காமல் அழகாக மடித்து வையுங்கள். அலுவலக உடை, வீட்டில் அணியும் உடை என்று பிரித்து வையுங்கள். சமையல் அறையிலும் காபிப்பொடி, சர்க்கரை, உப்பு போன்றவற்றை எடுக்க வசதியான இடத்தில் வைக்க வேண்டும். மளிகைப் பொருட்கள் வாங்கும்போது, ஒரு பேக்கட் பொருட்களை மட்டும் ஜாரில் கொட்டி வையுங்கள். அப்போதுதான் அவை தீர்ந்துபோவது சட்டென்று தெரியும். உடனடியாக வாங்க வசதியாக இருக்கும்...” என்றவர் தன் எதிர்காலத் திட்டம் குறித்தும்
விவரித்தார்.
“தற்போது சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் செய்து வருகிறோம். அந்தந்த இடத்தில் எங்களுக்கு என தனிப்பட்ட குழு அமைத்து செயல்படுத்தி வருகிறோம்.
இதை விரிவுபடுத்தி இந்தியா முழுக்க ‘அரேஞ்ஜ் இட் ஆல்’ செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கான வேலையில் இறங்கி இருக்கிறோம். மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆலோசனை வழங்கி வருகிறோம். நாம் வாழும்வீடு அழகாகவும் அதே சமயம் ஒரு மனநிறைவான உணர்வினைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்...” அழுத்தமாகச் சொல்கிறார் ஆன்சல்.
ப்ரியா
|