வெடிக்கக் காத்திருக்கிறது பட்டாசு நகரம்!



நியூஸ் வியூஸ்

கிட்டத்தட்ட நூறாண்டாக பல லட்சம் குடும்பங்களுக்கு சோறு போட்ட தொழில் பட்டாசுத்தொழில்.‘சிவகாசிக்கு போனா எந்த வேலையாவது செஞ்சி பொழச்சுக்கலாம்’ என்கிற அளப்பரிய நம்பிக்கையை தென்மாவட்டத்து மக்களுக்கு கொடுத்திருந்த நகரம், இன்று பசியால் வாடுகிறது.

எட்டு லட்சம் பேர் வேலையின்றி தவிக்கின்றனர். மூன்று லட்சம் பேர் நேரடியாக பட்டாசுத் தொழிலிலும், ஐந்து லட்சம் பேர் மறைமுகமாகவும் (அச்சு மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவை) பட்டாசு உற்பத்தியை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வருடத்துக்கு தோராயமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நகரம். நாட்டில் விற்கப்படும் பட்டாசுகளில் 85 சதவிகிதத் தேவையை, இதுநாள்வரை சிவகாசியே பூர்த்தி செய்து வந்திருக்கிறது.இரண்டாயிரம் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு தீபாவளி முடிந்ததில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படவில்லை. பட்டாசு ஆலைகளுக்கு அச்சுவேலைகள் செய்துதரும் சிவகாசியின் பெரிய பிரிண்டிங் பிரஸ்ஸுகளும் போதுமான ஆர்டர்களின்றி அல்லல் படுகின்றன. இதுவரையிலேயே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

என்னதான் ஆனது குட்டி ஜப்பானுக்கு?

1922ல் தொடங்குகிறது இந்த வரலாறு.கந்தக பூமியான சிவகாசியில் அப்போது விவசாயம் செய்யமுடியாது என்கிற நிலை இருந்தது. அந்த காலக்கட்டத்தில் விவசாயம் தவிர்த்த வேறு தொழில் செய்யவும் மக்களுக்குப் பயிற்சியில்லை.அப்படிப்பட்ட சூழலில் பி.அய்யசாமி நாடார், ஏ.சண்முக நாடார் என்கிற இரு இளைஞர்களின் தொலைநோக்குப் பார்வையே, பின்னாளில் சிவகாசி பெற்ற சிறப்புகளுக்கு எல்லாம் காரணம்.
தங்கள் ஊரில் எந்தத் தொழிலை மேற்கொண்டால் தாங்கள் பிழைக்கமுடியும், மக்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு வழங்க முடியுமென்று ஆய்வு செய்தார்கள்.

அதன் அடிப்படையில் தீப்பெட்டித் தொழில் மற்றும் பட்டாசு தயாரிக்கும் குடிசைத்தொழில் குறித்த தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்காகவே இவர்கள் இருவரும் அப்போது கல்கத்தாவுக்குச் சென்றார்கள். அங்கே ஆறேழு மாதங்கள் தங்கியிருந்து, அத்தனை தொழில்நுட்பங்களையும் கற்றார்கள்.
வங்காளத்தில் அப்போது இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தவர் சதிஷ் சந்திரதாஸ் குப்தா. அவரிடம்தான் இவர்கள் நேரடிப் பயிற்சி பெற்றார்கள்.

ஊருக்குத் திரும்பியதுமே சிறிய அளவில் தீப்பெட்டிகளை தயாரிக்கத் தொடங்கினார்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொழிலை விரிவாக்கும் நோக்கத்தில் பட்டாசுகளும் தயாரிக்க ஆரம்பித்தார்கள். இருவரும் இணைந்து சிவகாசியின் முதல் பட்டாசு ஆலையை 1923ல் தொடங்கினார்கள். இங்கு தயாரிக்கப்பட்டவையே பட்டாசுப் பிரியர்களிடையே பிரபலமான அணில் மற்றும் அய்யன் பிராண்ட் பட்டாசுகள்.

அந்த காலக்கட்டத்தில் இறக்குமதிப் பொருட்களுக்கு பெரும் தடைகள் இருந்தன. குறிப்பாக சீனப்பட்டாசு ரகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, உள்ளூர் தயாரிப்புகள் வளர்வதற்கு காரணமாக அமைந்தன.இச்சூழலைப் பயன்படுத்தி பட்டாசுத் தொழிலை விரிவாக்கம் செய்ய, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து நவீன இயந்திரங்களை பெரும் முதலீட்டில் வாங்கினார்கள்.

தீப்பெட்டித் தொழில்  பட்டாசுத் தொழில் இரண்டுமே ஒரு கொடியில் பூத்த இருமலர்களாகக்தான் ஆரம்பத்தில் இருந்தன. மக்களுக்கு தீப்பெட்டி அடிப்படைத் தேவையாக இருந்ததால், அதற்குரிய வரிகளுக்கு அரசு ஏராளமாகச் சலுகை கொடுத்தது. இதனாலேயே தீப்பெட்டித் தொழிலும், பட்டாசுத் தொழிலும் இருவேறு தொழில்களாகப் பிரிய நேரிட்டது (பட்டாசுக்கு வரி அதிகம்).

இரண்டாம் உலகப்போரின் போது வெடிப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கெடுபிடி அதிகமானது. பட்டாசுகள் தயாரிப்பது மற்றும் விற்பது தொடர்பான லைசென்ஸ் முறையும் அறிமுகமானது.இதன் அடிப்படையில் 1940ஆம் ஆண்டிலிருந்துதான் பட்டாசுத் தொழில் முழுமையாக அமைப்புரீதியான கட்டமைப்புகளோடு செயல்படத் தொடங்கியது. நிறையப்பேர் இத்தொழிலில் முதலீடு செய்ய முன்வந்தார்கள்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பட்டாசு ஆலைகளில் பணிபுரியத் தொடங்கினார்கள். மற்ற தென்மாவட்டத்து ஆட்களும் வேலை தேடி சிவகாசிக்கு வந்தார்கள். விவசாயக் கூலிகளாக சம்பாதிக்கும் பணத்தைவிட பன்மடங்கு வருமானத்தை பட்டாசு ஆலைகளில் அவர்கள் பெறமுடிந்தது. சமூகத்தில் கவுரவமும் அவர்களுக்குக் கிடைத்தது.இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளை நாடெங்கும் வினியோகிக்கும் தேவைக்காக சரக்கு போக்குவரத்துத் துறையும் உருவாகி, அதன் வாயிலாகவும் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் தீக்குச்சி மற்றும் பட்டாசு தயாரிக்கத் தேவையான ரசாயன கச்சாப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் இங்கேயே ரசாயன ஆலைகளை நிறுவி, தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே தயாரிக்கத் தொடங்கினார்கள்.கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தூங்கும் நகரமாக இருள்சூழ்ந்து இருந்த சிவகாசி, பட்டாசுத் தொழில் தந்த வெளிச்சத்தால் சுறுசுறுப்பான நகரமாக செயல்படத் தொடங்கியது.

பட்டாசுகளை பேக்கிங் செய்வதற்கும், அவற்றின் முகப்பில் ஒட்டுவதற்கு லேபிள்களைகவர்ச்சிகரமாக பிரிண்டிங் செய்வதற்குமான தேவை 1940களின் இறுதியில் ஏற்பட்டது. அதையடுத்தே சிவகாசியில் பிரும்மாண்டமான பிரிண்டிங் பிரஸ்கள் உருவாகத் தொடங்கின.

ஒரு கட்டத்தில் உழைப்புக்கு அஞ்சா சிவகாசிக்காரர்களின் கடுமையான உழைப்பால், பிரிண்டிங் தொழிலிலும் சிவகாசி நாடெங்கும் பிரபலமானது. வடநாடுகளில் இருந்தெல்லாம் கூட பிரிண்டிங் ஆர்டர்கள் குவியத் தொடங்கின. ஒருநாளைக்கு மூன்று ஷிப்ட் என்று சிவகாசியின் அச்சு இயந்திரங்கள் இடைவெளியே இல்லாமல் வருடம் முழுக்க ஓடிக்கொண்டே இருந்தன.

இன்று உலகம் முழுக்கவே சிவகாசி, தன்னுடைய உழைப்புக்காக பிரபலம் அடைந்திருக்கிறது. ‘குட்டி ஜப்பான்’ என்று செல்லமாக அடைமொழியிட்டுதான் சிவகாசியை அடையாளம் சொல்கிறார்கள்.அப்படிப்பட்ட சிவகாசிதான் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து செயல்படாமல் முடங்கியிருக்கிறது. வந்தவர்களுக்கு எல்லாம் வேலைவாய்ப்பு வழங்கி மகிழ்ந்த நகரம், வேலையில்லாமல் தெருவுக்கு வந்து போராடும் நிலைக்கு போயிருக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு மூன்று தனி மனிதர்கள், பட்டாசு வெடிக்கப்படுவதால் தங்கள் குழந்தைகளின் சுவாசம் பாதிக்கப்படுகிறது என்று வழக்கு தொடுத்தார்கள். பட்டாசு தயாரிப்பதற்கும், விற்கப்படுவதற்கும் தடை வேண்டும் என்று கோரினார்கள்.

அதன் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம், நாடெங்கும் பட்டாசு வெடிப்பதற்கு குறிப்பிட்ட நேரம் என்கிற வரையறையைக் கொடுத்தது. மேலும் பட்டாசு தயாரிக்க அடிப்படை கச்சாப் பொருளான பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலுக்கு ஏதுவான ‘க்ரீன் பட்டாசுகள்’தான் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்துதான் சிவகாசி பட்டாசு ஆலைகளும், தொழிலாளர்களும் போராடி வருகின்றனர்.“உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் நிபந்தனைகளும், தடைகளும் இந்தத் தொழில் குறித்த அடிப்படையான அறிதல் இன்றி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழிலின் ஆணிவேரையே பிடுங்கியிருக்கிறார்கள்” என்கிறார்கள் பட்டாசுத் தயாரிப்பாளர்கள்.சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தீர்ப்பை நாம் விமர்சிக்க முடியாது. அதற்கு உள்நோக்கம் கற்பிப்பதும் சட்டத்துக்கு விரோதமானது.

ஆனால், பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை, போதுமான மாற்று ஏற்பாடுகள் இன்றி ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் முடக்குவது எவ்வகையில் நியாயம்?
லட்சக்கணக்கானோர் கதறுகையில் அவர்களது குரலைக் கேட்காமல் மத்திய, மாநில அரசாங்கங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன?

யுவகிருஷ்ணா