வந்தது வெள்ளம்... கிடைத்தது தொல்லியல் நாகரீகம்!



கேரளாவின் பம்பை நதி வெளிப்படுத்தியிருக்கும் அதிசயம்

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அரண்முலா டவுன் அருகில் உள்ளது கோழிப்பாலம். பம்பை நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்த மதிய நேரம் அது. சில மாதங்களுக்கு முன்பு கோரதாண்டவமாடிய வெள்ளம் இப்போது ஆற்றொழுக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளத்தின் அச்சம் விலகாத மக்களில் பலர் இன்னமும் கோழிப்பாலம் கிராமத்துக்குத் திரும்பவில்லை என்பதால் ஊரே நிசப்தமாக இருக்கிறது.

சில மீனவர்கள் மட்டும் ஆற்றில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். கரையோர மரங்கள் இன்னமும் நீரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. அதில் ஒரு மரத்தின் வேர்க்கால்களுக்கு இடையே ஏதோ ஓர் உருவம் நெளிவதைப் போல ஒரு மீனவருக்குத் தோன்றியது. என்ன அது என்று உற்று கவனித்தார்.

ஏதோ பொம்மை. இல்லை இல்லை ஏதோ சிலை! அதனை அகழ்ந்து எடுத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. சுடுமண் சிற்பம்! ஏழு கன்னிமார் சிலை. அங்கு இதேபோல இன்னும் நிறைய சிற்பங்கள் இருப்பதையும் கண்டார்கள்.உடனே அவர்கள் அந்த ஊரின் விவரமான ஆளான சுகுமாரனிடம் விஷயத்தைச் சொன்னார்கள். சுகுமாரன் இந்த விஷயத்தை தொல்லியல் துறை, வரலாற்றுப் பேராசிரியர்கள், தொல் பொருள் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்குச் சொல்ல... கோழிப்பாலம் நோக்கிப் பயணித்தது கேரள அதிகாரிகள் குழு.

அடுத்த சில வாரங்களில் ஆற்றின் கரையோரத்தில் இருந்த அந்தக் குறிப்பிட்ட இடம் பரபரப்பானது. மும்பையில் செட்டிலாகிவிட்ட ஒருவருக்குச்  சொந்தமான அந்த இடம் நோக்கி சாரி சாரியாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அஞ்சிலி மூட்டில் கடவு - இதுதான் அந்த இடத்தின் பெயர். கரையோர சாலையையும் இடத்தையும் பிரிக்கும் காம்பவுண்ட் சுவர் வெள்ளத்தில் இடிந்துவிழ அந்த சுவரின் மீதுதான் நீரிலும் கரைகளிலும் அகழ்ந்தெடுத்த விதவிதமான சிலைகளை வெயிலில் உலர்த்தி வைத்திருக்கிறார்கள்.

ஏழு கன்னிமாரும், நாகர் சிலைகளும் இன்னமும் சில ஆண்சிலைகளுமே கூட  கிடைத்துள்ளன. கிடைத்துள்ள நாகர் சிலைகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. நாக்கைத் துருத்திக் கொண்டிருக்கும் இந்த பாம்புச்சுதைகள் போல கேரளத்தில் முன் எப்போதும் எங்கும் வேறு சிற்பங்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள். நாகர் வழிபாடு இந்தியாவில் மிகத் தொன்மையானது என்று நமக்குத் தெரியும். ஆனால், கன்னிமார் வழிபாடும் அதே அளவு தொன்மையானதா என்று தெரியவில்லை.

இந்த சிற்பங்களின் வயதை மதிப்பிட்டால் அதைக் கொண்டு இந்தச் சிற்பங்கள் இருந்த காலச் சூழ்நிலை என்ன, இதை வழிபட்ட மக்கள் யாராக இருக்கக் கூடும், இதன் வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவம் என்ன என்பதை எல்லாம் அறிய முடியும். இதன் மூலம், நம் தென்னிந்தியப் பழங்கால வரலாற்றின் இருளுக்குள் புது வெளிச்சம் பாய்ச்சப்பட வாய்ப்புகள் உள்ளன.  

Thermoluminescence dating (TL) எனப்படும் தொழிநுட்பத்தைக் கொண்டு இந்த சிற்பங்களின் வயதைத் துல்லியமாக வரையறுத்து விட முடியும் என்கிறார்கள். அரசின் இந்த அறிவிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுவரை, பல்லாண்டு காலமாக மண்ணில் புதைந்திருந்ததால் இந்த சிற்பங்கள்மேல் படிந்துள்ள வரலாற்றுக்கால மண்ணை நீக்கி, ஈரப்பதம் உலர வெயிலில் காயவைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்செயல் என்பதற்கு ஆய்வுகளில் எப்போதுமே ஒரு தனியிடம் உண்டு. பல கண்டுபிடிப்புகள் தற்செயலாக எதையோ கண்டுபிடிக்கப் போய் எதையோ கண்டுபிடித்ததாக இருக்கின்றன. இந்த பம்பைக் கரை அகழாய்வு விவகாரத்திலும் அப்படித்தான் நிகழ்ந்தது. இது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

ராஜீவ் புலியூர் என்ற ஆசிரியப் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களுக்கு இந்த பம்பை அகழாய்வுகளைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றார். அந்தக் குழுவில் ஒருவரான கோபிகா என்ற மாணவி இந்த சுடுமண் சிற்பங்களைப் பார்த்துவிட்டு, குறிப்பாக, நாகரைப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் என்ன பெரிய விஷயம்? எங்க வீட்டுல இதைவிடப் பெரிய பொருட்கள் எல்லாம் கிடைச்சிருக்குதாக்கும்’ என்று சொல்ல, அதிர்ச்சியான ஆசிரியர் உடனே நேராக கோபிகாவின் வீட்டுக்குப் போய்ப் பார்த்தார்.

கோபிகா சொன்னபோதுகூட யாரும் நம்பவில்லை. நேரில் பார்த்தபோது அதிர்ந்தேவிட்டார்கள்!பெரிய பெரிய கற்கள், கல் தூண்கள், கற்படுக்கைகளை கோபிகாவின் அப்பா காட்டினார். பாக்கு மட்டையில் சாப்பாட்டுத் தட்டு தயாரிக்கும் தொழில் செய்துவரும் கோபிகாவின் அப்பா பெயர் மத்தசேரில் கோபாலகிருஷ்ணன். ‘இதெல்லாம் என்னவென்ேற எனக்குத் தெரியவில்லை.

நான் சின்ன வயதாக இருக்கும்போது இருந்தே இது எல்லாம் எங்க இடத்தில்தான் இருக்குது. எங்க நிலம் முழுக்க இது போல நிறைய இருக்கு. ஒருவேளை தோண்டிப் பார்த்தா நிலத்துக்குள்ளும் இது போல நிறைய இருக்கலாம். ஏன், தங்கப் புதையல்கூட இருக்கலாம்...’ என்று வெள்ளந்தியாகச் சொல்லும் கோபாலகிருஷ்ணன், இந்தக் கற்களைக் கொண்டு வீடு கட்ட முயன்றாராம்!ஏனோ அதற்கு இந்தக் கற்கள் தோதாக வராததால், வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

கோபிகாவின் தந்தை வீடு கட்ட முயன்ற கல் எது தெரியுமா? அதை, மெகாலித்திக் கால கற்கள் என்பார்கள். அதாவது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை. வசிப்பிடத்திற்காகவும், மரித்தவர்களை அடக்கம் செய்வதற்காகவும் பெரிய பெரிய கல் வீடுகளைக் கட்டுவார்கள் மெகாலித்திக் கால மனிதர்கள்.

சுமார் 12 ஆயிரம் ஆண்டுகள் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட பழங்காலம் அது. விவசாயத்தை நாம் கண்டுபிடித்தே பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன! மொழியை உருவாக்கி ஐம்பதாயிரம் ஆண்டுகளே முடிந்துள்ளன.

அப்படியானால் இந்தக் கற்கள் எவ்வளவு பழந்தன்மை வாய்ந்தவை? மனித குலத்தின் பொக்கிஷங்களில் ஒன்று இவை. ஆதிமனிதர்கள் பம்பையின் கரையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் பிரமாண்ட சாட்சிகளாக இருக்கும் இந்தக் கற்களைத்தான் தன் அறியாமையால் சிதைத்து வீடு கட்ட முயன்றிருக்கிறார் அவர்.

இப்போது, அந்த இடத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மேலும் ஏதேனும் அகழ்வுகள் கிடைக்குமா என்று பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘என் இடத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், எனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்’ என்று கோருகிறார் கோபாலகிருஷ்ணன். இந்த இரு இடங்களிலும் ஆய்வுகள் செய்யப்பட்டால் நம் தென்னிந்திய வரலாற்றின் மீது மேலும் சில வெளிச்சக் கற்றைகள் விழ வாய்ப்புள்ளது. காத்திருப்போம்!                         

இளங்கோ கிருஷ்ணன்