இனி ஸ்மார்ட் போன்கள் தேவையில்லை... வருகின்றன AI கண்ணாடிகள்!



நோக்கியா நிறுவனர் பெக்கா லண்ட்மார்க் உலக பொருளாதார மாநாட்டில்  (World Economic Forum) பேசியபோது, ‘‘2030ம் ஆண்டுக்குள் - அதாவது 6G தொழில்நுட்பம் வருவதற்கு முன்னரே - ஸ்மார்ட்போன்கள் தனது மதிப்பை இழந்துவிடும். பலரும் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களை சுமக்கத் தேவையில்லாத சூழலில் இருப்பர்...’’ எனத் தெரிவித்தார். அவர் சொன்னதற்கேற்ப தற்போது செயற்கை நுண்ணறிவின் (AI) அடிப்படையிலான அத்தனை கருவிகள் கண்டுபிடிப்பில் டிஜிட்டல் உலகம்  மூழ்கியிருக்கிறது.

அதில் ஒன்று AI கண்ணாடிகள். இதன் வரவு உலகை தலை நிமிர வைக்கும் என்கிறார்கள் டிஜிட்டல் நிபுணர்கள். அதாவது மொபைலுக்கு அடிமையாகி தலை குனிந்து கிடக்கும் உலகை தலை நிமிர்த்தி பார்க்க வைக்கும். 
கண்களில் அணிந்து கொள்ளும் வகையிலான இந்தக் கண்ணாடிகள்தான் முழுமையான டிஜிட்டல் யுகத்தை ஆரம்பித்து வைக்கப் போகும் கருவி என்கிறார்கள் கணினி வல்லுனர்கள். உடலுடன் பொருத்திக் கொள்ளும் நவீன டிஜிட்டல் கருவிகளின் வரவு இந்தக் கண்ணாடிகள் மூலமாகத்தான் துவங்க இருக்கின்றது.

ஏற்கனவே ஸ்மார்ட் வாட்ச், மணிக்கட்டு பேண்ட், டிராக்கர் உள்ளிட்டவை இருப்பினும் அவையனைத்தும் மொபைல், கணினி அடிப்படையில் அல்லது மொபைல் செயலி அடிப்படையிலான சப்போர்ட்டில்தான் இயங்குகின்றன. இவை எதுவும் மொபைல் போல் தானியங்கி கிடையாது. ஆனால், கண்ணாடிகள் தன்னிச்சையாக செயல்படும். இவற்றை அணியக்கூடிய கருவிகளாக (Wearable Devices) வகைப்படுத்தலாம்.

AI கண்ணாடிகள், ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் அதிக நவீன வசதிகளும், சேவைகளும் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். முழுமையான AR ஒருங்கிணைப்பு (Full Immersive AR Integration) கொண்டு நேரடி ஹோலோகிராபிக் காட்சிகள் வழியாக கல்வி மற்றும் டிஜிட்டல் விளையாட்டுகளில் திறம்பட உதவும். 

இயல்பான உலகத்தை மெய்நிகர் உலகுடன் இணைத்து சமநிலைப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். இந்த கூகுள் AI கண்ணாடிகளின் அசிஸ்டென்ட்கள் கிட்டத்தட்ட ஓர் ஆலோசகர் போல் நம்முடன் இன்னொரு நபராகவே இருக்கும். கேட்கும் முன்பே காலநிலை குறித்த பரிந்துரைகளுடன் தன்னிச்சையான உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கும்.

அதாவது நீங்கள் குடும்பத்துடன் வெளியில் சென்றிருக்கும் தருவாயில் சில மைல் தூரத்தில் மழையோ புயலோ வரவிருக்கிறது எனில் உடனடி அலர்ட் கொடுத்து உடன் அருகாமையில் இருக்கும் தங்குமிடம் அல்லது பாதுகாப்பு இடம் குறித்த பட்டியல்களைக் கூட கேட்காமல் கொடுக்கும் அளவுக்கு மேம்பட்ட நிலையில் இருக்கும்.

குறிப்பாக 6G வேக இணைய வசதியில் செயல்படும். சுயமாகவே சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, நினைவுகள் மற்றும் பதிவுகள் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு தன்னிச்சையாக நமக்கு முன் செய்து முடிக்கும் வசதி, மேம்பட்ட மொழி பெயர்ப்பு... இப்படி நம் கற்பனைக்கு எட்டாத வகையில் AI கண்ணாடிகள் சேவைகள் வழங்குமாம்.

ஆனால், இதில் பல சவால்களையும் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். முதல் அலர்ட் இதன் விலை. தனி நபர் அந்தரங்க விவரங்கள் என்ற ஒன்றே இல்லாமல், மேலும் தனிமை என்கிற ஒன்றே இல்லாமல் மனித மூளையை செயல்படுத்தும் திறன் படைத்த நவீன கருவியாகவும், நாம் யோசிக்கும் முன் செயல்படும் வகையிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த AI கண்ணாடிகள் உருவாக்கத்தில் கூகுள் மட்டுமல்ல; மெட்டா, மைக்ரோசாப்ட் எனப் பல நிறுவனங்கள் தங்களது பலத்தை சோதிக்கக் காத்திருக்கிறார்கள். இப்போது கை அசைவுகளை மட்டுமே ஸ்மார்ட் வாட்ச் அறிந்து அதற்கான தகவல்கள் கொடுக்கின்றன.

ஒருவேளை கண்களில் அணிந்துகொள்ளும் கண்ணாடி எனில் கண்களின் அசைவு, தலை, குரல் அடிப்படையிலான சேவைகள் என நம் உடல் அசைவுகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கண்ணாடிகள் இயங்கும் என்கிறது கணினி வல்லுனர்கள் குழு.
குறிப்பாக மன அழுத்தம் சார்ந்த வசதிகள் இந்த நவீன கண்ணாடிகளில் இடம் பெறும்.

சமீபத்திய சாம்சங் ஸ்மார்ட் போன்களில் அழைப்பு மொழிபெயர்ப்பு வசதிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது எதிர்த் தரப்பில் பேசிக் கொண்டிருக்கும் நபர் வேறு ஒரு மொழி பேசுபவர் எனில் உடனுக்குடன் அவர் பேசும் மொழியை மொழிபெயர்த்து அப்படியே நமக்கு என்ன மொழியில் வேண்டுமோ அந்த லேங்வேஜில் கொடுக்கும் அளவுக்கு நவீன மொழி
பெயர்ப்பு வசதி கொண்டு வந்திருக்கிறது.

இங்கிருந்து வேறு ஒரு நாட்டிற்குச் சென்றால் கூட இந்த மொழிபெயர்ப்பு போன் அழைப்பு வசதி மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனில் இந்த கண்ணாடிகள் நமக்கு மொழியே இல்லாமல் குறிப்புகள் கொண்டு செயல்படும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதாவது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் மொழிபெயர்ப்போ அல்லது புரிதலோ தேவைப்படாது. அவர் அங்க அசைவுகளில் இருந்து புரிந்துகொண்டு நமக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்தி வழிநடத்தும் அளவுக்கு அட்வான்ஸ் முறையில் இருக்கலாம் என்கிறார்கள்.

AI கண்ணாடிகள் மட்டும்தான் இந்த நவீன டிஜிட்டல் யுகத்தை ஆளப்போகின்றனவா என்றால் இல்லை. ஸ்மார்ட் விரல்கள் (Smart Finger) - தற்சமயம் இவை மேம்பட்ட ரோபாட்டிக் துறையில் செயல்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வளையம் (Smart Ring) - இவையும் ஸ்மார்ட் வாட்ச்சுகள் போல் உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ் துறையில் அதிக பயன்பாட்டில் இருக்கின்றன.

இவைகளும் இன்னும் அடுத்த கட்ட நவீன சேவைகளுடன் களத்தில் இறங்கலாம். இதில் அறிவியலாளர்கள் அச்சப்படும் ஒரு நவீனத்துவம் என்றால் அது உடலில் பொருத்திக் கொள்ளும் சிப்கள்தான். இதற்கான ஆய்வுகளும் ஒருபக்கம் நடந்து வருகின்றன.

இவற்றின் வருகைதான் முழுமையான டிஜிட்டல் யுகத்தையும் உண்மையான உழைக்கும் மெய்நிகர் உலகுக்குமான வித்தியாசத்தை தரம் பிரிக்க முடியாத அளவிற்கு அதீத நவீனமாக இருக்கும் என்கிறார்கள். 

எதிர்வரும் தலைமுறையினர் யோசிக்கும் திறனே இல்லாமல் அல்லது அதற்கான தேவையே இல்லாமல் இருப்பார்கள். அத்தனைக்கும் தன்னிச்சையாக சப்டைட்டில்கள் போடப்படும். அல்லது ஆடியோ விவரிப்பு நிகழும்.மொத்தத்தில் தனிநபர் விவரங்கள் என்றே ஒன்று இல்லாமல் கூட போகலாம்.

ஷாலினி நியூட்டன்