ஜாலி கேலி ஃபேமிலி மேன்தான் இந்த Mr. ஹவுஸ்கீப்பிங்!



காங்ஸ் (எ) கனகா, லோக்கல் லோகநாதன், ஸ்வாதி... என ஒரு 10 நிமிட வீடியோவில் 15க்கும் மேலான கேரக்டர்கள், ஏராளமான கான்செப்ட்களுடன் இன்று இருக்கும் தனிநபர் யூடியூப் சேனல்கள் அத்தனைக்கும் முன்னோடி என்றால் அது ‘ஜம்ப் கட்ஸ்’ ஹாரி பாஸ்கர்தான். 
அன்லிமிடெட் இன்டர்நெட் காலமே துவங்காத வேளையிலேயே யூடியூப் சேனல் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர். இவருடைய ‘எதுக்கு’ இப்போது வரையிலும் டிரெண்ட். தற்போது ‘Mr. ஹவுஸ்கீப்பிங்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

எதுக்கு..?

ஹாஹா... இதைக் கேட்டுதான் அதற்கான பதிலைத் தேடி இப்போ இங்கே உங்க முன்னாடி முதல் வெள்ளித்திரை கதையின் நாயகனா நிற்கறேன். ஒரு பெரிய பயணம். என்னதான் யூடியூப் பிரபலமாக, அங்கே நம்மள நிரூபிச்சாலும் சினிமாவுக்கு அந்த முகம் மட்டும் பத்தலை. மேலும் நானும் வெறும் யூடியூப் முகத்தை மட்டும் வெச்சிட்டு சினிமா ஆடியன்ஸை சந்திக்கவும் விரும்பலை.

இது வேற ஒரு களம். இங்கே விளையாட நிறைய தைரியமும், தன்னம்பிக்கையும், முக்கியமா திறமையும் வேணும். அந்தத் திறமையை வளர்த்துக்க நடிப்புப் பயிற்சிகள், என்னுடைய இன்னொரு சேனலிலேயே வெப் சீரிஸ், குறும்படங்கள், ஆல்பம், பாடல்கள்... இதெல்லாம் உருவாக்க ஆரம்பிச்சோம். 

என் தங்கச்சியும் விஸ்காம் ஸ்டூடண்ட்தான். நானும் அவங்களும் சேர்ந்தே சில புராஜெக்ட் செய்தோம். அதைத் தொடர்ந்துதான் இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் சந்திப்பு. அவரும் ஓர் இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக்க சில குறும்படங்கள், சீரிஸ் இதெல்லாம் செய்து தன்னுடைய ப்ரொஃபைல் பூஸ்டிங்கில் இருந்தார். சேர்ந்து பயணிக்க ஆரம்பிச்சோம்.

மற்ற யூடியூப்வாசிகளை விட உங்க பயணம் நெடுந்தூரப் பயணமாக இருக்கே?

திருச்சி சொந்த ஊர். அப்பா ராஜேந்திரன், அம்மா விஜயா, தங்கச்சி மோனிஷா. அப்பா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சொந்தமாக வைத்து நடத்திட்டு இருக்கார். அம்மா ஹவுஸ் வைஃப்.

தங்கச்சி மோனிஷா ஒரு விளம்பரக் கம்பெனியில் வேலை செய்திட்டு இருக்காங்க. இயக்குநராவதுதான் அவங்க கனவு. லயோலா கல்லூரியில்தான் விஸ்காம் படிச்சேன். தொடர்ந்து ஒரு ஆறு மாசம் அசிஸ்டென்ட் கேமராமேனாக ஒரு படத்தில் வேலை செய்தேன். அந்தப் படத்தின் இடைல பிரேக் கிடைச்சப்போ ஏன் யூடியூபில் வீடியோஸ் செய்யக்கூடாதுன்னு தோணுச்சு.

சில கான்செப்ட் செய்தோம். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து யூடியூப் சேனல்லயே பயணிக்க ஆரம்பிச்சேன். அந்த சமயம்தான் அன்லிமிடெட் இன்டர்நெட் உலகமா நாம மாறினோம். எனக்கான அங்கீகாரம் இன்னும் அதிகமா கிடைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து சினிமா நடிப்புதான் குறிக்கோள் என்கிறதால இன்னொரு சேனல் ஆரம்பிச்சு அங்கே ஷார்ட் ஃபிலிம்ஸ், சீரிஸ், வெப் மூவி... இப்படி முயற்சி செய்துகிட்டே இருந்தோம்.

ஷார்ட் ஃபிலிம் செய்யணும்... ஆனா, அதேசமயம் அதிலிருந்து ஒரு சின்ன வருமானமும் வரணும். அப்போ அதுக்கு ஏத்த மாதிரி ப்ரொஃபஷனல் ஆகவும் குவாலிட்டியாகவும் கொடுக்கணும். இதை டார்கெட்டா வச்சுதான் நல்ல கன்டென்டா ஷார்ட் ஃபிலிம்ஸ் செய்தோம்.

‘Mr. ஹவுஸ்கீப்பிங்’..?

காலம் காலமாகவே ஹவுஸ் கீப்பிங் அப்படின்னாலே பெண்கள்தான் இருக்காங்க. ஒரு சேஞ்சுக்கு ஒரு பையன்... அதுவும் படிச்ச ஒரு பையன்... எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டு வேலைக்குப் போனா எப்படி இருக்கும்?

அங்கே ஒரு பொண்ண சந்திக்கிறான். அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்களை அடிப்படையா வச்சுதான் மொத்த கதை. படம் முழுக்கவே எந்த அளவுக்கு காமெடியா எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்திருக்கோம். அதுவும் ஒரு 25 வயசு பையன் ஒரு வீட்ல வீட்டு வேலை செய்யறதுக்காக போனா என்னென்ன நடக்கும்... எவ்வளவு சர்ச்சைகளை சந்திப்பான்... இப்படி எல்லாமே இந்தப் படத்தில் பார்க்கலாம்.

எங்கே இந்தப் படத்தின் கதை உருவானது?

எங்க சேனலில் வெப் சீரிஸ் மற்றும் ஷார்ட் ஃபிலிம்ஸ்காக நிறைய ஐடியாக்கள் யோசிச்சிட்டே இருப்போம். அப்படி யோசிச்ச ஒரு கதைதான் இந்தப் படம்.

இயக்குநர் அருண் ரவிச்சந்திரன், இயக்குநர் பி வாசு சாருக்கு பல வருடங்களாக அசோசியேட் டைரக்டராக இருந்தவர். அவர் கூட்டிட்டு வந்த கேமராமேன் குலோத்துங்க வர்மன் சினிமாட்டோகிராபர் ஆர்.டி.ராஜசேகர் சாருடைய அசிஸ்டென்ட்.

இப்படி ஒவ்வொருத்தருமே சினிமாவுக்கு தயாரா தன்னை உருவாக்கியிருந்தாங்க. யூடியூப் சேனலில் ஒரு பெரிய பட்ஜெட் படம் செய்யலாம் அல்லது வெப் சீரிஸ் உருவாக்கலாம். இப்படி யோசிச்ச கதைதான் இந்தப் படமே. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் அத்தனையும் முடிச்சு பார்க்கும் பொழுது ஒரு முழுமையான வெள்ளித்திரைக்கான படமாகவே இருந்துச்சு.

 ஏன் வெள்ளித்திரையில் முயற்சி செய்யக் கூடாது அப்படின்னு முடிவெடுத்து இப்ப தியேட்டர் ரிலீசா ‘Mr. ஹவுஸ் கீப்பிங்’ வருது. நாங்க அத்தனை பேருமே முதல் சினிமா அறிமுகம் கொடுக்க காத்திருக்கோம். எடிட்டர் ராமசுப்பு என் கூடவே என்னுடைய சேனலில் வேலை செய்தவர். அவருக்கும் இதுதான் முதல் படம்.

படத்தின் மியூசிக் டைரக்டர் ஓஷோ வெங்கட். இசையமைப்பாளராக இவருக்கும் இதுதான் முதல் படம். ஆனா, இதற்கு முன்பு ‘அகண்டா’, ‘வக்கீல் சாப்’, ‘மிஸ்டர் மஜ்னு’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்கள், தமிழில் ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களில் இசைக் கலைஞரா வேலை செய்திருக்கிறார். எங்க அத்தனை பேரையும் நம்பி பணம் போட்டார் தயாரிப்பாளர் முரளி சார். அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாங்க எங்க எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசர் அஃப்ரோஸ்.

நிதின் மனோகர் சார், ராமசாமி சார்  தயாரிப்பாளர்களா எங்களுக்கு ரொம்ப பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க. கூடுதல் செய்தி... இது தேனாண்டாள் ஃபிலிம்ஸின் 101வது படம்.
படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி சொல்லுங்க..?

லாஸ்லியா சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிக்குப் பிறகு ‘ஃபிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பா’ படங்கள்ல நடிச்சாங்க. அவங்களும் ஒரு பெரிய கேப்புக்கு அப்பறம் நல்ல என்ட்ரிக்காக காத்திருந்தாங்க. அந்த சமயம்தான் நாங்க இந்தக் கதையை அவங்ககிட்ட சொன்னோம். இன்னமும் அவங்களுக்கான சரியான இடம் தமிழ் சினிமாவில் கிடைக்கல. நாங்க எப்படி சினிமா என்ட்ரிக்காக காத்திருக்கிறோமோ அப்படி அவங்களும் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரத்துக்காக காத்திருக்காங்க.

இவங்க இல்லாம, இளவரசு சார், ‘குட் நைட்’ படத்தில் அம்மா கேரக்டரில் நடிச்ச உமா ராமச்சந்திரன், சிவசாரா, மேலும் நிறைய யூடியூப் பிரபலங்களை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
பத்து நிமிட வீடியோவுக்கே கலகலப்பு, காமெடி என யோசித்து செய்தவர் நீங்கள்... படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா?

கண்டிப்பா. பக்கா லைட்டான காமெடி படம். ஒரு ரெண்டு மணி நேரம் எல்லாரும் எல்லாத்தையும் மறந்து படம் பார்க்கணும். அதுதான் எங்க நோக்கம். குடும்பமாகவே இந்தப் படம் பார்க்கலாம். காமெடிக்கும் கேரண்டி. 90ஸ் - 2கே... இந்த ரெண்டு தலைமுறையின் சமீபத்திய சர்ச்சைகளும் சண்டைகளும், அதற்கான ஒரு சில சின்ன மெசேஜும் ‘Mr. ஹவுஸ்கீப்பிங்’ல இருக்கு.

ஷாலினி நியூட்டன்