டர்ராகும் INDIA டூரிஸம்



டிசம்பர் மாதம் என்றாலே உலகமே சுற்றுலாத் துறையில் திக்கித் திளைக்கும். ஆனால், இந்தியா மட்டும் உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு கெட்ட கனவாகவே இருந்து வருகிறது. 
ஒரு குட்டி நகரமான துபாய்க்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளைவிட இந்தியாவின் சுற்றுலாத் தளங்களுக்கு பயணிக்க விரும்பும் பயணிகளின் வரத்து கடந்த பல வருடங்களாகவே அதல பாதாளத்துக்கு செல்வதாக பல புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. 

சாட்சிக்கு, ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை 2047ம் வருடத்துக்குள் 10 கோடியைத் தொட்டுவிடும் என்று உற்சாகமாக ஆருடம் சொல்கிறது. ஆனால், போகிறபோக்கில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக 2019ம் ஆண்டில் ஃபிரான்ஸ் தேசத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்னிக்கை 9 கோடி. 2023ம் ஆண்டில் ஸ்பெயினுக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடி. இந்தியா 10 கோடி சுற்றுலாப் பயணிகளைத் தொடவேண்டும் என்றால் இன்றைய தேதிக்கு சுற்றுலாத்துறை 15 சதவீத வளர்ச்சியையாவது எட்டவேண்டும். ஆனால், 2001 மற்றும் 2019 ஆண்டுகளுக்கிடையில் இந்தியா எட்டியது வெறும் 8.5 சதவீத வளர்ச்சிதான். எடுத்துக்காட்டாக 2019ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடிதான்.

இதே ஆண்டில் உலகிலேயே குட்டித் தீவான துபாய்க்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையோ ஒரு கோடியே 60 லட்சம். சென்ற ஆண்டை எடுத்துக்கொண்டாலும் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் துபாய்க்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 11 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், அதே ஆறு மாதங்களில் இந்திய சுற்றுலாத்துறை 10 சதவீத சரிவு.

காரணம் என்ன?

இந்தியாவுக்கு ஒரு வெளிநாட்டுப் பயணி வருகிறார் என்றால் பல அரசுத் தடைகளை அவர் எதிர்கொள்ள வேண்டும். அத்துடன் மாசு கேடு, அசுத்தம், சுற்றுலா இடங்கள் குறித்த போதிய விளம்பரங்கள் இல்லாதது... என எல்லாம் சேர்த்துதான் சுற்றுலாவுக்கான ஒரு கெட்ட கனவாக இந்தியாவை வெளிநாட்டினருக்கு மாற்றி இருப்பதாக பிரபல
பத்திரிகையான ‘எக்கானமிஸ்ட்’ குற்றம் சாட்டுகிறது.

சரி... உள்ளூர் பயணிகளின் நிலை?

இன்றைய தேதியில் உள்ளூர் பயணிகளை மட்டுமே ஈர்க்கும் ஒரு சுற்றுலாத் தளமாக இந்தியா இருக்கிறது. ஆனாலும் மேல் மத்திய தர மற்றும் உயர் மத்திய தரத்துக்கு எல்லாம் உள்ளூரைவிட தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள்தான் விருப்பத்துக்குரிய சுற்றுலாத்தளங்களாக உள்ளன. கொஞ்சம் விலை மலிவாக இச்சுற்றுலா இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள் டூரிஸ்ட் நிபுணர்கள்.

உதாரணமாக தில்லியிலிருந்து கோவாவுக்கு ஆகும் செலவு, கட்டணங்களைவிட தில்லியிலிருந்து தாய்லாந்து நகரமான பாங்காக்குக்குச் செல்வதுதான் மலிவு என்று சொல்கிறார்கள்.

அதேபோல இலங்கை, வியட்னாம், தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகள் எல்லாம் மலிவானதாக இருப்பதோடு எந்த பிக்கல் பிடுங்கலும் இந்தியா போல இல்லை என்றும் இந்த நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்தியா ஏகப்பட்ட கெடுபிடிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்க பல நாடுகள் விசா இல்லாமலேயே எங்கள் நாட்டுக்கு வரலாம்... பயணிக்கலாம் என அறிவித்து டூரிஸத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. 

சுற்றுலா என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியைக் கொடுப்பது. இந்தியாவின் மொத்த உள்ளூர் உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாவின் பங்கு 2002 மற்றும் 2003க்கு இடையில் 5.8 சதவீதமாக இருந்தது. ஆனால், இதுவே 2019 மற்றும் 2020க்கிடையே 5.2 ஆகக் குறைந்துள்ளது.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்தியா சுற்றுலாத் துறையில் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. இதை சரி செய்தால் மட்டுமே ‘வெல்கம் டூ இந்தியா’ இனிக்கும். இல்லையெனில் கசக்கும்.

டி.ரஞ்சித்