எக்ஸ்ரே, ஸ்கேன் நோ... உடல் உள்ளே இருப்பதை கண்ணாலே பார்க்கலாம்!



யெஸ். FD &C Yellow

5 கண்டுபிடிப்பால் கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளை கண்ணாலே நன்கு பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
FD &C Yellow 5 கண்டுபிடிப்பு என்றால் என்ன?  

X-ray, CT ஸ்கேன் மூலம் நம் உடலின் உள் உறுப்பு கட்டமைப்புகளை படம் பிடிக்க முடியும். இதன் மூலம் பல்வேறு நோய்களை விரைவாகவும் திறமையாகவும் கண்டறிய முடியும்.
இதனால், மருத்துவருக்கு நோயாளியின் நிலையைப் பற்றிய துல்லியமான தகவல் தெரிவதோடு, அவர்களின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், தகுந்த சிகிச்சையை எளிதாக்கவும் X-ray, CT ஸ்கேன் சேவைகள் உதவுகின்றன.

இந்நிலையில்தான் FD &C Yellow 5 கண்டுபிடிப்பு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.  ஆய்வகத்தில் எலிகளைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் தொழில் நுட்பம் மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.நம் உடல் 70% தண்ணீரால் ஆனது. இருந்தாலும், நம் உள் உறுப்புக்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. தண்ணீர், கொழுப்பில் ஒளியைப் பிரதிபலிக்கும் பண்பு ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே இதற்கு முக்கிய காரணம்.

நம் உடலில் இரண்டு நிறமிகள் உள்ளன. இவற்றில் முதன்மையானது நம் இரத்தச் சிவப்பணுவில் உள்ள சிவப்பு நிறமியான ஹிமோகுளோபின். இரண்டாவது, நம் தோலில் செல்களில் உள்ள மெலனின் என்ற நிறமி. இவை இரண்டும் நம் உடலில் இல்லையென்றால், நம் உடல் ஒளி ஊடுருவிச் செல்லும் கண்ணாடி போலத்தான் இருக்கும். ஒளி நம் உடலைத் துளைத்துச் சென்று கொண்டிருக்கும். எனவே, நாம் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது. ஹிமோகுளோபின், மெலனின் உதவியால்தான் நாம் ஒருவரை ஒருவர் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நம் அனைவரின் விழித்திரையும் கருமை நிறத்தில்தான் இருக்கின்றன. விழித்திரையில் கருமை நிற மெலனின் அதிக அளவில் உள்ளதே இதற்குக் காரணம். இங்கு கருமை நிறம் பறிபோனால் கண் தெரியாமல் போகும்! கருமையே நம் விழித்திறன்.இரத்தத்தில் ஹிமோகுளோபின் இல்லை என்றால் நம்மால் உயிர்வாழ முடியாது. 

காரணம், இந்த நிறமிதான் உடலெங்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது.சிறுவயதில் இரவு நேரங்களில் கையில் டார்ச் லைட்டுடன் நடந்து செல்லும்போது, ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும் டார்ச்சை உள்ளங்கையால் மூடி விளையாடுவோம் இல்லையா... அப்பொழுது ஒளி ஊடுருவும்போது உள்ளங்கை சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

இவ்வாறு உள்ளங்கை சிவப்பு நிறத்தில் தெரிய அங்கு இருக்கும் தண்ணீரும் கொழுப்புப் படலமும்தான் காரணம். இந்த ஒளிச் சிதறலைக் கட்டுப்படுத்தினால் உள் உறுப்புகளை எளிதாகக் காண முடியும்.கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஒளிச்சிதறலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கு பணியாற்றும் குவோசங் ஹங் (Guosong Hong) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. இவர் தன்னுடன் 21 ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து எலியின் உடலைக் கண்ணாடி போல் மாற்றியுள்ளார்.சிவப்பு டார்ட்ரசின் (red tartrazine) என்ற ஒரு உணவு வண்ணப் பொடி உள்ளது. இதனைச் சுருக்கமாக மஞ்சள் 5 (FD&C Yellow 5) என அழைக்கின்றனர்.‌ வண்ண வண்ண கேக் செய்ய இந்தப் பொடியையும் பயன்படுத்துகின்றனர்.

நாம் கேக் சாப்பிடும்போது இந்த வண்ணப் பொடியையும் சேர்த்து சாப்பிடுவோம். இந்தப் பொடியைத் தண்ணீரில் கலக்கி எலியின் வயிற்றுப் பகுதியில் தடவுகின்றனர். அதனால் அந்தப் பகுதியில் உள்ள தோல் சிவப்பு நிறமாக மாறுகிறது.இதற்குக் காரணம் ஒளியில் உள்ள நீல நிறத்தைச் சிவப்பு டார்ட்ரசின் உறிஞ்சிக் கொள்கின்றது. 

இதனால் உடலில் உள்ள தண்ணீரும் கொழுப்பும் ஒரே ஒளி பிரதிபலிக்கும் பண்பைப் பெறுகின்றன.அதாவது 589 நானோ மீட்டர் கொண்ட ஒளியைத் தண்ணீர் 1.33 அளவில் வளைக்கிறது. அதே ஒளியைக் கொழுப்பு 1.45ல் இருந்து 1.48 வரை வளைக்கிறது.

ஆனால், இந்த உணவு வண்ணப் பொடி தடவப்பட்டவுடன் தண்ணீரும் கொழுப்பும் ஒரே மாதிரியாக ஒளியைப் பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. இதனால், உடலில் பாயும் ஒளியின் சிதறல் குறைகிறது. எனவே, தோல் உள்ளிட்ட உடலில் உள்ள தசைகள் கண்ணாடிபோல் காட்சியளிக்கின்றன. இதனால் ஒளி தசைக்குள் ஆழமாக ஊடுருவத் தொடங்குகிறது. 

இதன் காரணமாக இந்த வண்ணப் பொடி தடவப்பட்ட இடத்தில் ஒளியைப் பாய்ச்சினால் உள் உறுப்புக்கள் கண்ணுக்குக் காட்சியளிக்கத் தொடங்குகின்றன.இதன் மூலம் கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளை நன்கு பார்க்க முடியும். கூடுதலாக மூளையில் ஆங்காங்கே பயணிக்கும் இரத்தக் குழாய்களையும் நன்கு பார்க்கலாம். கைகால்களில் உள்ள‌ தசைநார்களின் அமைப்பைத் தெளிவாகப் பார்க்கலாம்.

மேலும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் மட்டும் அல்ல, சுருங்கி விரியும் நுரையீரலையும் தெளிவாகப் பார்க்கலாம். இனிமேல் ஸ்கேன் செய்து பார்க்கத் தேவையில்லையென இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு எதற்கெல்லாம் பயன்படும்?

தோல் புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய, அதன் பரிமாணத்தை முழுமையாகச் சோதனை செய்ய இந்த முறை பெரிதும் உதவியாக இருக்கும்.மட்டுமல்ல; இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அழகு சாதன, ஒப்பனை வழிமுறைகளும் அதிக அளவில் உதயமாக வாய்ப்புகள் உள்ளன.முக்கியமாக இந்தக் கண்டுபிடிப்பால் எக்ஸ்ரே போன்ற அபாயகரமான ஒளிக் கதிர்களை மருத்துவ காரணங்களுக்காக உடலில் பாய்ச்சுவது பெருமளவில் குறையும். 

எக்ஸ்ரே கதிர்கள் உடலில் பாயும்போது தண்ணீர் மூலக்கூறு உடைகிறது. அதனால் H+, OH- அயினிகள் உருவாகின்றன. இவை செல்களைக் கொன்று குவிக்கும் திறன் படைத்தவை. மேலும் மரபணுவை அப்பளமாக நொறுக்கும் சக்தி படைத்தவை.

பெரும்பாலானவர்களின் உடல் இப்படி உடைந்த மரபணுவைச் சரி செய்யும் ஆற்றல் பெற்றது. ஆனால், உடைந்த மரபணு சரி செய்யப்படவில்லை என்றால் விளைவு படுமோசமாகும். இது புற்றுநோய்க்குக்கூட வழிவகுக்கும். எனவே, சக்தி வாய்ந்த எக்ஸ்ரேவை உடலில் பாய்ச்சிக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. 

இதற்கு இந்த உணவு வண்ணப் பொடி தொழில்நுட்பம் (FD&C Yellow 5) பெருமளவு உதவும்.இந்த வண்ணப் பொடி தடவப்பட்ட இடத்தைத் தண்ணீரால் கழுவினால் உடல் தன் பழைய இயல்பு நிலைக்கு மாறிவிடும். அந்த இடத்தில் ஒளி ஊடுருவாது. மேலும் இந்த வண்ணப் பொடியைத் தடவுவதால் எந்தப் பாதிப்பும் வராது.

என்.ஆனந்தி