திசை மாறும் ஹீரோயிசம்!
நம்மூர்களில் எல்லாமே சினிமாதான். சினிமா வழியாக நல்லவைகளும், கெட்டவைகளும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணாமல் இல்லை.
கல்வி, மருத்துவம், நீதி, நேர்மை, தர்மம், நட்பு, குடும்ப பாசம் என பல நன்னெறிகளை சினிமா எனும் காட்சி ஊடகம் வழியாக மக்கள் மனதில் அவ்வப்போது விதைக்காமல் இல்லை. அவை அனைத்துக்கும் காரணம் கதாநாயகனின் ஹீரோயிசம்.
ஆனால், சமீப காலமாக வெளியான சில படங்களில் ஹீரோயிசம் என்ற பெயரில் வில்லன் செய்யும் அனைத்து வேலையையும் ஹீரோ செய்வதுபோல் சித்தரிக்கப்படுகிறது.
இது சினிமாவுக்கும், சமூகத்துக்கும் ஆரோக்யமாக இருக்குமா என்ற கேள்வியை 2025ல் எழுப்பியாக வேண்டும். அண்மையில் வெளியான ‘புஷ்பா-2’ படத்தின் கதை, சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளைக் கடத்தி விற்கும் கூட்டம்... அதன் தலைவர்... அவருக்கான எதிரிகள்... அவருடைய ஆசைகள்... ஏக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை மையப்படுத்தி இருந்தது. 2021ம் ஆண்டு இந்தப்படத்தின் முதல்பாகம் வெளியானது. அந்தப்படத்தில் செம்மரம் வெட்டும் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்குவார் கதாநாயகன்.
அந்தப் படத்தில் தொழிலாளர்களை வஞ்சிக்கும் முதலாளிக்கு எதிரான போராட்டம், குறுமுதலாளிகளை ஏமாற்றும் பெருமுதலாளிகளுக்கான நடவடிக்கை ஆகியவற்றோடு, விரும்பும் பெண்களையெல்லாம் வலுக்கட்டாயமாகப் பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தும் பண மற்றும் ஆதிக்கத் திமிர் பிடித்தவனை அடித்து நொறுக்கி கதாநாயகியைக் கரம் பிடிப்பது ஆகிய அம்சங்கள் முதல்பாகத்தில் இருந்தன.
கடைசியாக காவல்துறை அதிகாரியை அவமானப்படுத்தி கூனிக்குறுக வைப்பதோடு அந்தப்படம் முடியும்.ஒரு கடத்தல்காரனை கதாநாயகனாக வைத்துக் கொண்டிருந்தாலும் முதல்பாகத்தில் அவர் செய்யும் செயல்களின் பெரும்பகுதி வெகுமக்களுக்கு ஆதரவாக அமைந்திருந்தது.
அதனால் தமிழில் வந்த ‘மலையூர் மம்பட்டியான்’ வகைப்படங்களோடு சேர்த்து அந்தப்படமும் கொண்டாடப்பட்டது.ஆனால், இரண்டாம் பாகத்தில் அதே கதாநாயகன் செய்யும் செயல்கள் எல்லாமே வெகுமக்களுக்கு எதிரானவையாகவே அமைந்திருக்கின்றன. இதில் முதன்மை வில்லனாக இருப்பதே செம்மரக் கடத்தலைத் தடுத்து சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிற காவல்துறை அதிகாரிதான்.இதுவே பெரிய குற்றம் எனும்போது, படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான நிகழ்வு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.சட்டவிரோதமாக செம்மரம் வெட்டுபவர்களைப் பிடிக்க, தானும் ஒரு தொழிலாளியாக மாறுவேடமிட்டுப் போய் அவர்களைக் கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி.
அப்படிக் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் புஷ்பாவின் ஆட்கள். அதில் ஒருவருக்கு அன்று திருமணம். மணமேடையில் மணப்பெண் அவருக்காகக் காத்திருக்கிறார். அவரோ கைது செய்யப்பட்டு காவலில் இருக்கிறார்.இந்நிலையில் ‘புஷ்பா அண்ணன் எப்படியும் மணமகனைக் கூட்டிவந்துவிடுவார்’ என்கிற பில்டப் கொடுக்கப்படுகிறது.
அதுபோலவே புஷ்பா நேரடியாக அந்தக் காவல்நிலையத்துக்குச் செல்கிறார். அங்கு போய் மணமகனை மட்டும் விட்டுவிடுங்கள் என்று கேட்கிறார். இல்லையில்லை... உத்தரவிடுகிறார்!
அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்தாயிற்று. இப்போது அவரை வெளியே விட்டால் எங்கள் வேலையே போய்விடும் என்று காவலதிகாரி பவ்யத்துடன் பதிலளிக்கிறார். புஷ்பா என்ன செய்கிறார் தெரியுமா?
அந்தக் காவல்நிலையத்தில் மொத்தம் வேலை செய்வது எவ்வளவு பேர்? அவர்களின் ஓய்வுகாலம் எப்போது? அதுவரை அவர்கள் வாங்கவிருக்கும் சம்பளம் எவ்வளவு? ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பணப்பலன் எவ்வளவு... ஆகிய அனைத்தையும் கணக்குப் போட்டு முப்பது லட்சம், நாற்பது லட்சம் என அவர்கள் சொல்லும் தொகையை மூட்டை மூட்டையாகக் கொடுத்துவிட்டு தொழிலாளர்கள் அனைவரையும் மீட்டுச் செல்வார்.
இப்படி ஒரு காட்சி வைப்பதன் மூலம் இந்தச் சமுதாயத்துக்கு இந்தப் படக்குழு சொல்லும் செய்தி என்ன?
இதற்கடுத்து இன்னொரு இடத்தில், முதலமைச்சரோடு புகைப்படம் எடுக்க ஆசைப்படுவார் புஷ்பா. அது அவருடைய ஆசை இல்லை. அவர் மனைவியின் ஆசை. கடத்தல்காரனோடு ஃபோட்டோ எடுப்பதா என்று முகத்துக்கு நேராகக் கேட்டு மறுத்துவிடுவார் முதலமைச்சர். இதனால் மனைவியின் ஆசை நிராசையாகிறது. அந்தக் கோபத்தில் அவர் முதலமைச்சரையே மாற்ற முனைகிறார்.அந்த முயற்சியில் ஈடுபடும்போது ஒன்றிய அமைச்சரைத் தொடர்புகொள்ள அவர் தம்பியை அணுகுகிறார்.
ஒன்றிய அமைச்சருக்கு போன் மூலம் தொடர்பு ஏற்படுத்தித் தருவதற்கு ஐந்து கோடி ரூபாய், அந்த ஒன்றிய அமைச்சருக்கு இருபத்தி ஐந்து கோடி, சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்குத் தகுந்தாற்போல் இரண்டு கோடி, மூன்று கோடி என்று கொடுத்து முதலமைச்சரையே மாற்றிவிடுகிறார். அதன்பின் அவரோடு ஏற்கெனவே எடுத்த புகைப்படத்தை வீட்டில் மாட்டுகிறார். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது பாஜக ஆட்சியில் சர்வசாதாரணமாகிவிட்டது. தமிழ்நாட்டிலேயே கடந்த ஆட்சியில் கூவத்தூர் சம்பவம் பிரபலம். அப்படி சமூகத்தில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளைத்தான் சினிமாவில் காட்சிப்படுத்துகிறோம் என்று சினிமா படைப்பாளிகள் சொல்லலாம். இவையெல்லாம் அரசியல்கட்சிகளுக்கான போட்டி காரணமாக நடந்தவை. ஒரு கடத்தல்காரர் தலையிட்டு மாற்றியவை அல்ல.
ஒரு காவல்நிலையத்திலுள்ள அனைவரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியும் என்றும், ஒன்றிய அமைச்சர், மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என்றும் காட்டியிருப்பதன் மூலம் மக்கள் என்ன உணர்வார்கள்?
இவை படத்தில் உள்ள முக்கியமான அம்சங்களைப் பற்றிய கருத்துகள் மட்டுமே. இன்னும் வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளில் உள்ள விஷயங்களையெல்லாம் கணக்கிலெடுத்தால் நிறையச் சொல்லலாம்.இந்தப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு பான் இந்தியா படம் என்கிற பெயரில் எல்லா மாநிலங்களிலும் வெளியாகியிருக்கிறது.
இதற்கு இந்தப் படம் மட்டும் காரணமில்லை. 2022ல் வெளியான ‘கேஜிஎஃப்’ படமும் முக்கிய காரணம். அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் பாராளுமன்றத்துக்குள்ளேயே போய் ஓர் உறுப்பினரைச் சுட்டுக் கொல்வார் கதாநாயகன். அதையும் தணிக்கைக் குழு அனுமதித்து சான்றிதழ் கொடுத்தது. அந்தப்படம் வெளியானதிலிருந்து எல்லா மொழிக் கதாநாயகர்களுக்கும் அதைப்போல் அல்லது அதற்கும் மேலே பில்டப் காட்சிகள் வேண்டும் என்கிற ஆசை அல்ல வெறியே வந்துவிட்டது.
அவர்கள் வெறிக்குத் தீனி போடுவது போல் திரைக்கதை எழுதி வாய்ப்பு பெறுகிறார்கள் இயக்குநர்கள்.
அப்பாவிப் பொதுஜனம்தான் இவற்றையும் பணம் கொடுத்துப் பார்த்து கைதட்டிவிட்டு வெளியில் வந்து வீட்டுக்குப் போகும்போது முகப்பு விளக்கில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்று கையில் இருக்கிற மீதிக்காசை தண்டமாகக் கட்டிவிட்டு புலம்பிக் கொண்டே வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். சினிமா என்பது கனவுலகமாக இருந்தாலும் சரி, கற்பனை உலகமாக இருந்தாலும் சரி... அதில் காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு அம்சமும் சமூகத்திலும், இளைஞர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.அது மட்டுமல்ல... கனவுலகம் வேறு; நிஜ உலகம் வேறு என்பதை சமீபத்திய அல்லு அர்ஜுனின் கைது சம்பவம் தெளிவாக்கியுள்ளது. படத்தில் காவல் நிலையத்தையே விலைக்கு வாங்கியவரால் சட்டம்-ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகும்போது சட்டம் தன் கடமையைச் செய்தது நினைவில் இருக்கலாம்.
பொழுதுபோக்கு என்ற பெயரில் எதிர்மறை சிந்தனைகளை விதைக்காமல் இருப்பதுதான் படைப்பாளிகளுக்கு அழகு! மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.ஹீரோக்கள் நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கிறார்கள். எம்ஜிஆரின் ‘மலைக்கள்ளன்’, தியாகராஜனின் ‘மலையூர் மம்பட்டியான்’, நெப்போலியனின் ‘சீவலப்பேரி பாண்டி’ போன்ற படங்களில் போலீஸ் ஹீரோவைத் தேடுவதுபோல் காட்சிகள் இருக்கும். போலீஸ் ஒருவரைத் ,தேடினாலே அவர் சட்டத்துக்கு புறம்பானவர்தான்.
‘மலைக்கள்ளன்’ படத்தில், இருக்கிறவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்பார் ஹீரோ. ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தில் கிராமவாசிகளுக்கு நன்மை செய்வார் ஹீரோ. அந்தப் படங்களின் கதாநாயகன்கள் சம்பாதித்த பணம், பொருள் எல்லாவற்றையும் தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தாமல் இல்லாத மக்களுக்கு வாரி இறைப்பார்கள். அது ஒரு வகை ஹீரோயிசம். அதை மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் கொண்டாடினார்கள்.
ஆனால், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ போன்ற படங்கள்..?
காவல் துறையில் சிலர் தவறு செய்கிறவர்களாக இருக்கலாம். அதற்காக மொத்த காவல் துறையையும் தவறானவர்களாகவும், பணத்துக்கு விலை போகக்கூடியவர்களாகவும் காட்சிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆட்சியையும், அரசாங்கத்தையும் விலை பேசுவது எல்லாம் நம் அரசியலமைப்பையே ஏளனம் செய்வதுதான்.ஹீரோவை கடத்தல்காரனாகவோ, சட்ட விரோத செயல்களைச் செய்கிறவர்களாகவோ காண்பிக்கலாம்.
ஆனால், அதற்கு ஒரு நியாயத்தை கற்பிக்க வேண்டும். அதற்கு பொருத்தமான காரணத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும். எந்த காலக்கட்டத்திலும் தர்மம் தர்மம்தான்; அதர்மம் அதர்மம்தான்.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கமர்ஷியலுக்காக பல அம்சங்களைச் சேர்த்தாலும் சமூக நோக்கத்தோடு தர்மத்தையும் வைக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி படமெடுப்பது கடத்தல் தொழிலுக்கு சமமானதுதான். தவறான விஷயங்களைச் சொல்லி, சமூக நீதிக்கு எதிரான கருத்துகளைச் சொல்லி சம்பாதிப்பது, தவறான வழியில் சம்பாதிப்பது போன்றதுதானே?
எஸ்.ராஜா
|