சமூக செயற்பாட்டாளர் to Sub Title ஸ்பெஷலிஸ்ட்!
தமிழ் சினிமா இப்போது உலகம் போற்றும் சினிமாவாக மாறியுள்ளது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் சப் டைட்டில். கதை மாந்தர்கள் பேசும் புரியாத மொழியை ஆங்கிலத்தில் சப் டைட்டில் செய்து வெளியிடுவதால் சீனர்கள், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் என பல தேசத்தைச் சேர்ந்தவர்கள் நம்மூர் படங்களைக் கொண்டாடுவதைக் காண முடிகிறது. அந்த வகையில் ஆங்கில சப் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்த படம் ‘விடுதலை 2’. அந்தப் படத்துக்கு சப் டைட்டில் எழுதியவர் கவிதா கஜேந்திரன். பலருக்கு சமூக செயற்பாட்டாளராக நன்கு பரிச்சயமானவர். வடசென்னைவாசி என தன்னை பெருமையாக அழைத்துக்கொள்பவர்.
சமூக செயற்பாட்டாளராக வர வேண்டும் என்ற உத்வேகம் எப்படி ஏற்பட்டது?
சொந்த ஊர் சென்னை. அப்பா லாரி டிரைவர். அம்மா குடும்பத் தலைவி. கணவர் ஜான், ஊடகவியலாளர். படிச்சது ஆங்கில இலக்கியம். கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கும். அப்படி எனக்கும் எதிர்காலம் பற்றிய கேள்வி இருந்துச்சு. அப்போது ஞாநி சாரின் ‘ஓ பக்கங்கள்’ என்னை ஈர்த்துச்சு. அவருடைய ‘பரிக்ஷா’வில் சில காலம் இருந்தேன். ஞாநி சாரை என் வாழ்க்கையின் முன்னோடின்னு சொல்லலாம். சமூகத்தில் நீதிக்கு எதிராக ஒரு நிகழ்வு நடக்கும்போது உண்மைத்தன்மையோடும், அச்சமின்றியும் இயங்குவதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்திலிருந்தே வேலைக்குச் சென்றாலும் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு உதவியாக இருக்கணும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்துச்சு. அதற்கு, அரசியல் நிலைப்பாடுடன் இடது சாரி சிந்தனையாளராக என்னை முழுமையாகக் கட்டமைத்துக் கொண்டேன்.பெண்கள் இயக்கங்கள், அரசியல் இயக்கங்களில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தேசிய, மாநில அளவில் பல முகாம்கள், பல பயணங்கள் என தொடர்ச்சியாக இயங்க ஆரம்பித்தேன்.
2018ல் பெண்களுக்கான கூட்டமைப்பு ‘அமைதிக்கான பிரச்சார நடை’யை தேசியஅளவில் நடத்தினார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஐந்து குழுக்கள் தில்லியை நோக்கி பயணிச்சது. அதில் அஸ்ஸாமிலிருந்து தில்லி சென்ற குழுவை வழிநடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதச்சார்பின்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்விதமாக சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை நடைபெற்ற நடைப்பயணத்தில் பல்வேறு தரப்பு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையொட்டி ‘பீப்பிள்ஸ் வாட்ச்’ அமைப்பு நடத்திய உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவில் நானும் அங்கம் வகித்திருக்கிறேன். அனைத்து பெண்கள் கூட்டமைப்பிலும் ஆக்ட்டிவ்வாக பல வருடங்களாக இயங்கினேன்.உலகத்தில் ஆணுக்கு சரிசமமாக பெண்கள் இருக்கிறார்கள்.
பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் அரசியல் புரிதலுடன் இருக்கிறார்களா என்று கேட்டால் தங்களுக்கு அதுல என்ன சம்பந்தம் இருக்கு என்ற நிலைதான் உள்ளது. அரசியல் வேறு, வாழ்க்கை வேறு கிடையாது.
சமூகத்தில் பெண்களுக்கும் பொறுப்பு இருக்கு. பெண்கள் பல போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது வரலாறு. பெண்களை அரசியல்படுத்துவதுதான் சமூக செயற்பாட்டாளர்களின் முக்கிய வேலை. அது அரசியல் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.
இங்கு யாரும் அடிமையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பலர் வழி இல்லைன்னு நினைக்கிறார்கள். அப்படியில்லை. தேடலுடன் வந்தால் வழி உண்டு என்பதுதான் உண்மை. அதுதான் சமூக செயற்பாட்டாளராக வருவதற்கு எனக்கு உந்துதலாக இருந்துச்சு. உங்கள் பார்வையில் சமூக செயற்பாடுகளுக்கு என்ன அர்த்தம்?
ஒரு சமூக சீர்கேடு ஏற்படும்போது அதைக்குறித்து கண்டும் காணாமலும் போகும் நிலை, அது நம் பிரச்னை இல்லை என்று கடப்பது போன்ற சூழ்நிலையில் மக்களை அரசியல்படுத்துவது, புரிதலை ஏற்படுத்துவதுதான் சமூக செயற்பாடு. தமிழ்நாட்டில் பண்பாடு, கலாசாரம் என்பவை ஆழமாக வேர் கொண்டது.
நம்முடைய வேர்களை நோக்கிய தேடலுக்கு அழைத்துச் செல்வது, அவர்கள் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி ஒருவரை அரசியல்படுத்துவதுதான் சமூக செயற்பாடு. ‘விடுதலை 2’ படத்துக்கு சப்-டைட்டில் எழுதும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ஆங்கில இலக்கியம் படிச்சதால மீடியா நண்பர்கள் மூலம் சினிமா தொடர்பு கிடைச்சது. அப்படி ஏழெட்டு வருடங்களாகவே திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் எழுதும் வேலையை செய்து வருகிறேன். ‘யாகாவாராயினும் நா காக்க’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ போன்ற படங்களில் வேலை செய்துள்ளேன்.
வெற்றிமாறன் தோழர் தயாரிக்கும் ‘மனுஷி’ படத்துக்குதான் முதலில் கமிட்டானேன். அந்த சமயத்தில் ‘விடுதலை 2’ படத்தை சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பும் வேலை நடந்ததால் உடனடியாக சப் டைட்டில் எழுதும் வாய்ப்பு கிடைச்சது. அதன் பிறகு ரிலீஸ் வரை வேலை இருந்துச்சு. ‘விடுதலை 2’ படத்தில் என்ன மாதிரியான சாவல்கள் இருந்துச்சு?
‘விடுதலை 2’ படத்தை திரைப்படமாக மட்டுமல்லாமல், அரசியல் பணி மாதிரிதான் பார்க்க முடிஞ்சது. ஏனெனில், படத்தில் வரும் மொழி நடை, வார்த்தைகள், கதை பேசும் அரசியல் முழுக்க முழுக்க நடந்த அரசியல் வரலாற்றைப் பேசியது.அதை உள்வாங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தேடல்கள், புத்தக வாசிப்பு என என்னை முழுமையாக அர்ப்பணித்து வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.
முக்கியமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிஞ்சு பண்ணுவதில் சவால் இருந்துச்சு. தப்பா புரிஞ்சு பண்ணிடக்கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக அவர்களுடைய டீமுடன் பேசிப் பேசி பண்ணினேன். எல்லாமே இயக்குநரின் பார்வையில் இருந்துச்சு.
முழுப் படத்தையும் பார்த்துதான் சப் டைட்டில் பண்ணினேன். வெற்றிமாறன் தோழர் முக்கியமான காட்சிகளுக்கு அவரே டப்பிங் பேசி யிருப்பார். அதைக் கேட்கும்போது சுவாரஸ்யமா இருந்ததோடு, நுணுக்கமாக பல விஷயங்களை ஏற்றி, இறக்கி பேசியிருப்பார். அது கதையின் அழுத்தத்தைப் புரிஞ்சுக்க உதவியா இருந்துச்சு.
வெற்றிமாறன் தோழர் ஆங்கிலம் படிச்சவர் என்பதால் சப்டைட்டிலுக்காக மொழிபெயர்ப்பு செய்த மொத்த வசனங்களையும் பிரிண்ட் அவுட் எடுத்து பேராசிரியர் பேப்பர் கரெக்ஷன் பண்ணுவது மாதிரி கரெக்ஷன் போடுவார். அப்படி அவர் சினிமாவுக்கான வார்த்தைகளைச் சேர்க்கும்போது அது படத்துக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துச்சு.இந்த இடத்துல வெற்றிமாறன் தோழரின் அர்ப்பணிப்பு குறித்து சொல்ல வேண்டும். அவர் எழுத மாட்டார்ன்னு சிலர் சர்வசாதாரணமாக பேசியதை யூடியூப் காணொலியில் பார்த்திருக்கிறேன். அது தவறு.
படப்பிடிப்பில் இருக்கும்போதும் சில வார்த்தைகளுக்கான தரவுகள் கேட்பார். அப்படி ஆங்கிலத்தில் படிச்ச கன்டென்ட்டுக்கு தமிழில் வார்த்தைகளைக் கேட்டதுண்டு. அது மார்க்சிஸ்ட் மெட்டீரியல். அதையெல்லாம் படத்தில் பார்க்கும்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமா இருந்துச்சு.
வெற்றிமாறன் தோழர் முன் ஆயத்தம் இல்லாமல் படப்பிடிப்புக்கு வருவதில்லை. அவரிடம் கலைஞனுக்குரிய வாசிப்பு, தேடல் எல்லாம் இருக்கு. அதை ஆவணபூர்வமாக என்னால் சொல்ல முடியும்.படத்தில் பல இடங்கள்ல மொழி தேடல் இருந்துச்சு. ஒவ்வொரு வசனத்துக்கும் ஒரு அடித்தளம், பீரியட் கனெக்ஷன் இருக்கும்.
கருப்பன் கதாபாத்திரம் தொடங்கி தொழிற்சாலை, கடைசி காட்சி என படம் முழுவதும் இன்டர் கனெக்ஷன் இருக்கும். காட்சிகள் ஒன்றொடு ஒன்று கனெக்ட் ஆகணும்னா வசனம் ஆழமான அரசியல் கொண்டதாக இருந்தால்தான் கனெக்ஷன் சரியா இருக்கும்.
மார்க்சிய கண்ணோட்டத்துடன் பண்ணையார் அடிமைத்தனம், ஃபேக்டரி முதலாளிகளின் அடக்குமுறை, சாதிய முறை, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் வெவ்வேறு வார்த்தைகள் இருந்துச்சு. சரியான புரிதலுடனும், வாக்கிய கோர்வையுடனும் எழுத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று நூல்கள் உதவியாக இருந்துச்சு.
சில வசனங்களுக்கு துல்லியமாகஅர்த்தத்தை வெளிப்படுத்தும் ஆங்கில வார்த்தைகளைத் தேடுவதும், அச்சொல் தமிழில் வெளிப்படுத்தும் அரசியல் கருத்துக்கு நிகரானதாக இருக்கிறதா என பொருத்திப் பார்ப்பதும் சவாலாகவே இருந்துச்சு.
‘அழித்தொழிப்பு’ன்னு ஒரு வார்த்தை வரும். அது அறிமுகம் இல்லாத வார்த்தை. ‘அனிலேஷன் ஆஃப் கிளாசஸ்’ என்பதுதான் அதன் சாராம்சம். ‘அனிலேஷன் மூவ்மெண்ட்’ இந்திய வரலாற்றில் நடந்துள்ளது. அதற்காக பல புத்தகங்கள், ஆன்லைன் தரவுகளைப் படிக்க ‘விடுதலை 2’ வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துச்சு. தோழர் வெற்றிமாறன் தேசிய இன உரிமை, தேசிய சுய நிர்ணயம், மொழிவழி தேசியம், சந்தைப் பொருள், சுரண்டல், நீர்வளம் போன்ற இடது அரசியல் வார்த்தைகளை சினிமா சொல்லாடலில் கொண்டுவந்தது ஆர்வத்தைக் கொடுத்துச்சு.கம்யூனிச நூல்கள், மா-லே இயக்க நூல்கள், மார்க்சிய அரசியல் புத்தகங்கள், வலைத்தளங்கள் என பல தேடல்கள் இருந்ததோடு என்னையும் வாசிக்க வெச்சது.
தமிழ் சினிமாவில் சப் டைட்டில் பணிகளுக்கான முக்கியத்துவம் எப்படி உள்ளது?
சப் டைட்டில் வேலை என்பது தமிழ் மொழியின் கருத்துக்களை பிற மொழி பேசுபவர்கள் புரிந்துகொள்ள உதவும் வழி. இப்போது பலர் உலக சினிமாவைப் பற்றிப் பேசுகிறார்கள்.
அப்படங்கள் முழுவதையும் சப் டைட்டில் மூலமாகத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு செல்வதில் சப் டைட்டிலுக்கு முக்கிய பங்கு உண்டு. ரஜினி, விஜய்சேதுபதி உட்பட பல நடிகர்களின் படங்களை பல மொழி மக்கள் பார்க்கிறார்கள். அதற்கு காரணம் சப் டைட்டிலுடன் அப்படங்கள் வெளிவருவதுதான்.
சப் டைட்டில் ஒர்க் அவ்வளவு எளிதான வேலை கிடையாது. மில்லி செகண்டில் வேலை செய்யணும். பெரிய பொறுப்பு. நேரம் செலவழித்து செய்யணும்.‘விடுதலை 2’ படம் எதைப் பற்றி பேசியது என்றால், இளைஞர்கள் தங்களின் வரலாறு எது என்பதைத் தெரிந்துகொள்ளக் கூடிய பாதையை உருவாக்கிக் கொடுத்துள்ளது.வரலாறு தெரியாத போக்கு இளைஞர்கள் மத்தியில் உள்ளது.
நம் வரலாற்றைத் தேடிச்செல்லும் உந்துதலை இந்தப் படம் கொடுத்திருக்கு.படத்தில் எனக்கு பிடிச்ச வசனங்கள் நிறைய இருந்தாலும், ‘நம்மிடம் சிறந்த தத்துவம் இருக்கிறது...’ எனும் வசனத்தை மறக்க முடியாது.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்: கிஷோர்
|