5,8ம் வகுப்பு ஆல் பாஸ் ரத்து... CBSE க்கு மட்டும்தானேனு அலட்சியம் வேண்டாம்... மாநில கல்விக்கும் விரைவில் இது வரும்!
எச்சரிக்கிறார் கல்வியாளர்
சமீபத்தில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ‘ஆல் பாஸ்’ முறையை ரத்து செய்து அரசாணை வெளியிட்டது. இந்தச் செயல் கல்வியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டுவந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் ‘ஆல் பாஸ்’ நடைமுறை அமலானது.
இந்நிலையில், 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஆர்டிஇ விதிகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறினால் அவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்கலாம் எனத் திருத்தம் செய்யப்பட்டது. இப்போது ‘ஆல் பாஸ்’ நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதில், 5 மற்றும் 8ம் வகுப்புபடிக்கும் ஒரு மாணவர் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அவருக்குக் கூடுதல் ஆதரவும், ஆலோசனைகளும் வழங்கி, தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 2 மாதத்திற்குள் மறுதேர்வு எழுதும் வாய்ப்பை வழங்க வேண்டும்.மறுதேர்விலும் அந்த மாணவர் தேர்ச்சி பெறத் தவறினால், அவரை மீண்டும் 5ம் வகுப்பிலோ அல்லது 8ம் வகுப்பிலோ தொடர்ந்து படிக்க வைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ‘இந்தப் புதிய விதியானது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் சைனிக் உட்பட சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும், இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்தஅணுகுமுறையை தேர்வு செய்யலாம்’ என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டின் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மாநில அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு இந்த முறை பொருந்தாது. ஆனால், ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும்.என்றாலும், ‘சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் நம் குழந்தைகள்தான்; இது குழந்தைகளின் உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம். அதுமட்டுமல்ல. இந்த நடைமுறையை ஒன்றிய அரசு பின்னாளில் மாநில பாடத்திட்டத்திற்குள்ளும் திணிக்க அழுத்தம் கொடுக்கலாம்’ எனக் கடுமையாக எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ‘‘இந்த நடைமுறை தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கம். அதில்தான் 3, 5, 8ம் வகுப்புகள் என ஒவ்வொரு நிலையிலும் தேர்வு வச்சு சோதிக்கப்படும்
முறை இருக்கு. அப்பதான் அடுத்த நிலைக்குப் போகமுடியும். இதைப் பின்பற்றி அச்சுறுத்தும் விதமா ஆல் பாஸ் முறையை ரத்து செய்து அரசாணையாகக் கொண்டு வந்திருக்காங்க. கடந்த 1968, 1986, 1992ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கைகளில் கல்வியாளர்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் நிராகரிப்போம்னு யாரும் சொல்லல.
ஆனா, மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த இந்தத் ‘தேசிய கல்விக் கொள்கை 2020’யை நிராகரிப்போம்னு சொல்றோம். காரணம் கல்வியின் அணுகுமுறையில் இன்புட் முறைதான் இருக்கிறது. அவுட்புட் முறை கிடையாது.பொதுவாக கல்வியின் செயல்பாட்டில் எல்லா குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பைக் கொடுக்கணும்.
இது படிக்கிற குழந்தை, இது படிக்காத குழந்தை, இது ஆர்வமுள்ள குழந்தை, இது ஆர்வமில்லாத குழந்தைனு பாகுபடுத்தக் கூடாது. எல்லா குழந்தைகளும் ஆர்வத்துடன் படிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதே இன்புட் முறை. ஆனா, ‘தேசிய கல்விக் கொள்கை 2020’, அவுட்புட் முறையை வலியுறுத்துகிறது. எத்தனை பேர் தேர்ச்சி பெறுகிறார்களோ அதற்கு கிரேடு தருவோம்னு சொல்லுது. ஆக, ஒரு பள்ளிக்கூடத்தின் கிரேடு உயர்வதற்கு குழந்தைகளே பொறுப்பேற்க வேண்டியிருக்கு. இது எப்படி சரியாகும்?
2014ல் மோடி ஆட்சி வந்தவுடன் பாஜக அரசு செய்த முதல் வேலை திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக நிதி ஆயோக் அமைச்சது. இந்த நிதி ஆயோக், எவையெல்லாம் பொருளாதார ரீதியாக பயனற்ற பள்ளிகள்னு பார்க்குது. ஐந்து குழந்தைக்காக ஒரு ஆசிரியரா... 50 குழந்தைகளுக்காக ஒரு பள்ளியானு கேட்குது. அப்ப அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைச்சிடுங்கனு சொல்லுது.
50 குழந்தைகளுக்காக நடக்கும் பள்ளிதான் தொடக்கப்பள்ளி; அருகமைப் பள்ளி. இதை நீக்கணும்னு சொன்னா தொடக்கப்பள்ளி என்ற இலக்கணத்திலிருந்தே மாறுபடுகிற மாதிரிதானே. அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்க சொல்றதுதான் இவர்கள் நோக்கம்.இந்த உத்தியில் ஒன்றுதான் 5, 8 வகுப்புகளுக்கு தேர்வு வைப்பது.
இது உளவியல் ரீதியான ஒரு தாக்குதல். குழந்தைப் பருவத்தில் பாஸ், ஃபெயில் பத்தின புரிதல் இல்லாத ஒரு குழந்தையை, பாஸ் பண்ணாமல் தடுத்து வைச்சால் அந்தக் குழந்தையின் மனதில் ஏக்கமே வளரும். ‘என்கூட படிச்ச பசங்க எல்லாம் அடுத்த வகுப்புக்குப் போயிட்டாங்க. நான் போகல’னு மட்டும்தான் அந்தக் குழந்தைக்குத் தோணும். ‘நான் ஃபெயிலாகிட்டேன்’ என்பது புரியாது.
ஆண்டுகள் கடக்கும்போதே ஒரு குழந்தைக்கு முதிர்ச்சியும் அனுபவமும் கிடைக்குது.
அதனால்தான் இந்தப் புரிதல் வந்த 15 வயதில் பொதுத் தேர்வு நடத்தப்படுது. இந்த விஷயங்களைக் கணக்கில் எடுத்தே 2009ம் ஆண்டு 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறையைக் கொண்டு வந்தாங்க. குழந்தைகளை மையப்படுத்திய ஒரு மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தினாங்க.
இதுவும் திடீர்னு ஒருநாள் எடுத்த முடிவல்ல. கடந்த 1992ம் ஆண்டில் எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் ஓய்வுபெறும் நாளன்று மாநிலங்களவையில், ‘குழந்தைகளுக்கு இவ்வளவு சுமையைக் கொடுக்கணுமா... பாடநூல் தாண்டி அவர்கள் சிந்திக்க வேண்டாமா’னு விரிவாக ஒரு உரை நிகழ்த்தினார்.
அது இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கியது.உடனே இந்திய அரசு, பேராசிரியர் யஷ்பால் தலைமையில் ஒரு குழுவை அமைச்சது. அந்தக் குழு 1993ம் ஆண்டு ‘சுமையில்லா கற்றல்’னு ஒரு பரிந்துரையைக் கொடுத்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் NCF-2005னு சொல்லப்படுற தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவானது.
இதில் சுமையில்லா கற்றலுக்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக ‘ரெண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டியதில்ல. மூன்றாம் வகுப்பிலிருந்து வாரத்திற்கு அரைமணி நேரமும், ஐந்தாம் வகுப்புனா வாரத்திற்கு ரெண்டு மணி நேரமும் வீட்டுப்பாடம் தந்தால் போதும்’னு சொன்னாங்க. குழந்தைகளுக்கு சுமை கொடுக்கக்கூடாது என்கிற முறையைப் பின்பற்றினாங்க.
அதனுடையப் தொடர்ச்சியாகவே 2009ம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பார்க்கணும். இதே காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் ‘தேர்வு என்கிற முறை குழந்தைப் பருவத்தில் குழந்தைகளை அச்சுறுத்துகிறது. தேர்வுனு சொல்லாமல் குழந்தைகளை மதிப்பீடு செய்யுங்க’னு வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவில் நடந்த ஆய்வும் தேர்வால் குழந்தைகள் அச்சத்திற்கு ஆளாகுறாங்கனு சொன்னது. இதனால்தான் ஆல் பாஸ் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆல் பாஸ்னா அப்படியே குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வச்சு அடுத்த நிலைக்கு அனுப்புவதோ அல்லது ஆண்டுகளைக் கடத்துவதோ அல்ல.
இதன்நோக்கம் குழந்தைக்குக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதான். இதற்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையைக் கொண்டு வந்தாங்க. இந்தத் தொடர் மதிப்பீட்டுல ஃபார்மேட்டிவ் அசெஸ்மென்ட், சம்மேட்டிவ் அசெஸ்மென்ட்னு இரண்டு கூறுகள் இருக்கு.
இதில் ஃபார்மேட்டிவ் அசெஸ்மென்ட் என்பது வயதிற்குத் தகுந்தாற்போல ஒரு குழந்தை கற்றதை வெளிப்படுத்துகிறதா என்பதை மதிப்பீடு செய்றது. அதாவது இதுவரை அந்தக் குழந்தை படிக்காமல் இருந்திருக்கலாம். இன்னைக்கு புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சிருக்கலாம். இன்னைக்கு கேள்வி கேட்டால் பதில் சொல்லுது.
இதெல்லாம் ஃபார்மேஷன்ல வரும். இதனை மதிப்பீடு செய்வாங்க. அப்புறம் சம்மேட்டிவ் அசெஸ்மென்ட்ல, கொடுக்கப்பட்ட பாடநூல், பாடத்திட்டம் குழந்தையால் எந்தளவுக்குப் படிக்க முடிஞ்சிருக்கு, படித்த விஷயங்களை எந்தளவுக்கு வெளிப்படுத்தத் தெரிஞ்சிருக்கு, வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறதா, பேசுதா, எழுதுதானு எல்லாம் பார்ப்பாங்க.
இந்த இரண்டு மதிப்பீட்டிலும் ஆசிரியர்கள் குழந்தைகளின் வெளிப்பாட்டுத் திறனைப் பரிசீலிக்கணும். அதனைக் கொண்டு மதிப்பீடு செய்யணும். உதாரணத்திற்கு மூன்றாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு எழுத்துக்கள் தெரிஞ்சிருக்கணும்.
சொற்கள் தெரிஞ்சிருக்கணும். ஒருவேளை இவை தெரியலனா ஏன் தெரியலனு காரணத்தைக் கண்டறியணும். அப்படியாக அந்தக் குழந்தையைப் பாகுபடுத்தாமல் இயல்பாகப் படிக்கிற சூழலுக்குள் கொண்டு வரணும். இதற்கு ஆசிரியர்கள் உதவி செய்து அதனை எளிதாக்கணும்...’’ என்கிற பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் ‘பெற்றோர் தேர்வு முக்கியம் என நினைக்கிறார்களே’ என்றோம்.
‘‘சில ஆய்வுகள், ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு இரண்டாம் வகுப்பு புத்தகம் வாசிக்கத் தெரியலனு சொல்லுது. இதன் அடிப்படையில்தான் பெற்றோர், ‘அப்ப ஐந்தாம் வகுப்புக்கான திறன் இருந்தால்தானே ஆறாம் வகுப்பு படிக்கமுடியும். அப்ப ஒரு வகுப்பில் தடுத்து நிறுத்தணும் இல்லையா... அதுக்கு ஒரு தேர்வு வேண்டாமா’னு கேட்குறாங்க.
இப்படி சொல்கிற ஆய்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட அந்தப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் இருந்தாங்களானு பார்த்ததா... அந்த ஆசிரியர் கற்றல், கற்பித்தல் பணியைத் தவிர வேறு எந்த நிர்வாக வேலைகளும் செய்யலனு சொல்லமுடியுமா..? அந்தப் பள்ளியில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருந்தார்னு குறிப்பிட்டு இருக்காங்களா... இப்படியான வினாக்களுக்கு சர்வேயில் எந்த பதிலும் இல்ல. தொடக்கப்பள்ளியில் 200 டூ 225 வேலை நாட்கள் இருக்குது. இதில் ஒரு குழந்தை குறைந்தபட்சம் 200 நாட்கள் பள்ளிக்கு வந்து கற்றல் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட்டிருந்தால் எப்படி அந்தக் குழந்தை கற்காமல் போகும்?
இத்தனை நாட்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டும் ஒரு நான்கைந்து குழந்தைகளுக்கு இடர்பாடு இருக்கலாம். அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதரவு நிலையை நாம் உருவாக்கித் தரணும் என்பதுதான் நியாயமான அணுகுமுறை. அதைவிடுத்து தேர்வு மூலம் தடுத்து நிறுத்துவது நியாயமில்ல. வளர்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் அரசே தன் பொறுப்பிலும், செலவிலும் கல்வியைத் தருது. சமமான கற்றல் வாய்ப்பிற்கு ஏற்ப ஆசிரியர்களை உருவாக்கிக் கொடுக்குது.
குழந்தைகளுக்கான ஆதரவு நிலையை எடுக்குது. இது சம்பந்தமாகத்தான் நாம் விவாதம் நடத்த வேண்டுமே தவிர, தேர்வு பற்றி பேசக்கூடாது. அது குழந்தைகள் உரிமைக்கு எதிரானது.அதனால், ஒரு குழந்தையை ஒரே வகுப்பில் தங்க வைச்சால் அந்தக் குழந்தைக்கு ஏக்கமே அதிகரிக்கும். அந்த ஏக்கம் கல்வியின் மீதே வெறுப்பை ஏற்படுத்தும். இதன்பிறகு அந்தக் குழந்தை இந்தப் பள்ளிக்கூடமே வேண்டாம்னு இடைநிற்றல் செய்யும்.
அதனால், இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தைக் கொடுக்கும் பிரச்னைங்கிறதை அனைவரும் உணரணும். அதேபோல இந்த ரத்து தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கே பொருந்தும்னு நினைக்கக்கூடாது. அதில் படிப்பவர்களும் நம் குழந்தைகள்தான். அதனால், இதை நாம் அனுமதிக்கக்கூடாது. இது பின்னாடி மாநில அரசையும் கட்டுப்படுத்தலாம்.
‘தேசிய கல்விக் கொள்கை 2020’யை முழுமையாகக் கொண்டு வரணும்னா, அரசியலமைப்பு சட்டத்திலேயே சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். அதனாலேயே அவங்க இப்படியான நிர்ப்பந்தங்களைத் தந்து பழக்கப்படுத்த நினைக்கிறாங்க. இதன்வழியாக பின்னாளில் மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளும் நிலையை அவங்க உருவாக்கலாம்...’’ என எச்சரிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
பேராச்சி கண்ணன்
|