இந்தியாவின் புதிய நாயகன்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையெல்லாம் கடந்து இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரராக உருவெடுத்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.இக்கட்டுரை எழுதப்படும் நிமிடம் வரை 284 ரன்களைக் குவித்துள்ளார். இந்திய அணி எப்போதெல்லாம் பேட்டிங்கில் தடுமாறியதோ, அப்போதெல்லாம் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் இந்தியாவைக் காப்பாற்றி உள்ளது. முதல் சில இன்னிங்ஸ்களில் 40 ரன்களைக் கடந்தாலும், உடன் பேட்டிங் செய்ய யாரும் இல்லாததால் 40களில் ஆட்டம் இழந்த அவர், இப்போது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இத்தனைக்கும் இந்திய அணிக்குள் ஒரு பந்துவீச்சாளராகத்தான் நிதிஷ் குமார் ரெட்டி வந்துள்ளார். அதிலும் ஐபிஎல் போட்டிகளில் ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணிக்காக சிறப்பாக ஆடியதால் அவருக்கு இந்திய அனியில் இடம் கிடைத்தது. கிடைத்த இடத்தை சிக்கென அவர் பிடித்துக்கொள்ள, இப்போது ஆல்ரவுண்டர் இடத்தில் ஹர்த்திக் பாண்டியாவின் இடத்துக்கு செக் வைத்துவிட்டார். பேட்டிங்குடன் பந்துவீச்சில் 3 விக்கெட்களையும் வீழ்த்திய நிதிஷ்குமார் ரெட்டி, இப்போது ஆல்ரவுண்டர் இடத்தில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த நிதிஷ் குமார் ரெட்டி, 6 வயது முதலே கிரிக்கெட் மீது காதலாக இருந்திருக்கிறார். மகனின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்த அவரது அப்பா முத்யாலா ரெட்டியும், தன் வேலை வெட்டி எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பேட்டும் கையுமாக மகன் பின்னால் சுற்றியுள்ளார்.
அப்பாவின் தியாகத்துக்கு கிடைத்த பயன் இது என்கிறார் நிதிஷ் குமார் ரெட்டியின் முதல் பயிற்சியாளரான குமார் சுவாமி.நிதிஷ்குமார் ரெட்டியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணிதான். கடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத்துக்காக நிதிஷ்குமார் சிறப்பாக ஆட, பலரது பார்வையும் அவர்மீது விழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர் ஹைதராபாத் அணியில் இருந்து விலகினால் 20 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்துகொள்ள பல பெரிய அணிகள் தயாராக இருந்துள்ளன. ஆனால், அதை நிதிஷ் குமார் ரெட்டி ஏற்கவில்லை என்கிறார் குமார் சுவாமி.“நான் மற்ற அணிகளுக்கு சென்றால், அவர்கள் பலகோடி ரூபாய் கொடுப்பார்கள். ஆனால், ஒரு ஆட்டத்தில் சரியாக ஆடாவிட்டாலும் என்னை பெஞ்சில் உட்காரவைத்து விடுவார்கள்.
ஆனால், ஹைதராபாத் அணி, என்னை தங்களில் ஒருவராகப் பார்க்கிறது. அவர்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தருவார்கள். மேலும் என் திறமையை முதலில் கண்டறிந்தது ஹைதராபாத் அணிதான். அதனால் நான் எந்த அணிக்கும் போகமாட்டேன். என்னை வளர்த்து ஆளாக்கிய ஹைதராபாத் அணியிலேயே இருப்பேன்...” என்று தன்னிடம் நிதிஷ் குமார் ரெட்டி கூறியதாகச் சொல்கிறார் குமார் ரெட்டி.நிதிஷ்குமார் ரெட்டியின் அந்த மனதுதான் இன்று அவரை உச்சத்திற்கு கொண்டுபோயிருக்கிறது.
ஜான்சி
|