யார் இந்த நமிதா தாபர்?
‘‘உலகின் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட வேண்டும் என்றால் இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்...’’ என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார் ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தி. இவரது கருத்துக்கு நாலாப்பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. சமீபத்தில் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு எதிராக நமிதா தாபர் என்ற பெண் வைத்த கறாரான விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘‘பெரிய நிறுவனங்களில் டன் கணக்கான பணம் ஈட்டும் நிறுவனத் தலைவர்கள், உயர் பொறுப்புகளை வகிப்பவர்கள் வேண்டுமானால் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்யட்டும். இறுதி வரை அவர்கள் தினமும் 24 மணி நேரம் கூட வேலை செய்யட்டும். யார் வேண்டாம் என்றார்கள். ஆனால், குறைந்த சம்பளம் வாங்கும் இளைஞர்களிடம் வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமே இல்லை...’’ என்பதே நமிதாவின் விமர்சனம்.
இதற்கு எல்லா தரப்புகளிடமிருந்தும் ஆதரவுக்குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த ஒரே விமர்சனத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் அறிமுகமாகிவிட்டார் நமிதா.
யார் இந்த நமிதா தாபர்?தொழில் அதிபர், முதலீட்டாளர், தொலைக்காட்சி ஆளுமை என பன்முகம் கொண்டவர், நமிதா தாபர். புனேவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவரும் மருந்து நிறுவனம், ‘எம்க்யூர்’. சர்வதேச அளவில் பிசினஸ் செய்து வருகிறது ‘எம்க்யூர்’. தவிர, வருடத்துக்கு 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் நிறுவனம் இது.
இங்கே 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர்தான், நமிதா தாபர். இந்தியாவின் முக்கிய பெண் பிசினஸ் ஆளுமைகளில் இவரும் ஒருவர். புனேவில் வசித்துவந்த வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் நமிதா.
இவருடைய தந்தை சதிஷ் மேத்தா உருவாக்கிய நிறுவனம்தான், ‘எம்க்யூர்’. அமெரிக்காவில் எம்பிஏ முடித்துவிட்டு, தந்தையின் நிறுவனத்திலேயே சிஎஃப்ஓவாக வேலை செய்ய ஆரம்பித்தார்.
இப்போது நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். இதுபோக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் பிசினஸ் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ் ஆக வலம் வந்திருக்கிறார். நமிதாவின் சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய். இப்படிப்பட்ட செல்வாக்கான ஒரு நபர், உழைக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதுதான் இதில் ஹைலைட்.
த.சக்திவேல்
|