Must Watch
ஜாய் ‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக் கொண்டிருக்கும் ஆங்கிலப்படம், ‘ஜாய்’. மருத்துவரும், விஞ்ஞானியுமான ராபர்ட் எட்வர்ட்ஸ், 1968ம் வருடம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் மேலாளராகப் பணிபுரிவதற்காக செவிலியர் ழான் பர்டியை வேலைக்கு எடுக்கிறார். ராபர்ட்டும், பர்டியும் ஒரு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபடப் போகின்றனர். இந்த ஆராய்ச்சிக்காக ராபர்ட் மற்றும் பர்டியுடன் பாட்ரிக் என்பவரும் இணைகிறார்.
மகப்பேறு மருத்துவத்தில் புதுமைகளைச் செய்து வரும் அறுவை சிகிச்சை நிபுணர்தான் பாட் ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐவிஎஃப் என்கிற செயற்கை கருத்தரித்தலுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆராய்ச்சிக்கு அரசாங்கம், சர்ச் உட்பட எல்லோரும் எதிராக இருக்கின்றனர். பத்திரிகைகள் ராபர்ட்டை கேலி செய்து எழுதுகின்றன. ஆராய்ச்சிக்கான நிதி உதவியும் பெரிதாகக் கிடைப்பதில்லை. பர்டியும், அம்மாவும் வழக்கமாக சர்ச்சுக்குச் செல்பவர்கள்.
பர்டி செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சியில் இருப்பது அவரது அம்மாவுக்குத் தெரிய வர, இருவருக்கும் இடையில் பிரச்னை வெடிக்கிறது. அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, மூவரும் எப்படி மகப்பேறு மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகின்றனர் என்பதே திரைக்கதை. உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் பென் டெய்லர்.
ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்
சர்வதேச அரங்கில் பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்து வரும் மலையாளப்படம், ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலையும் குவித்தது. இப்போது ‘ஹாட்ஸ்டாரி’ல் பார்க்கலாம். மலையாளிகளான பிரபாவும், அனுவும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் வேலைசெய்து வருகின்றனர். இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர்.
மருத்துவமனை, வீடு என்று இருப்பவர், பிரபா. அவரது கணவர் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது ஊருக்கு வந்து சில நாட்கள் இருந்தார். அதற்குப் பிறகுஜெர்மனிக்குப் போனவர், பிரபாவுக்குப் போன் கூட செய்யவில்லை. மருத்துவர் ஒருவர் பிரபாவின் மீது ஒருதலைக் காதலுடன் இருக்கிறார். இன்னொரு பக்கம் அனுவோ ஊர் சுற்றுபவள். அவள் இஸ்லாமிய இளைஞனைக் காதலிக்கிறாள்.
பிரபாவும் அனுவும் பணிபுரியும் மருத்துவமனையில் சமையல் வேலை செய்யும் பெண் பார்வதி. பில்டர்கள் பார்வதி குடியிருக்கும் இடத்தை காலி செய்யச் சொல்லி அவருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். பார்வதி, பிரபா, அனுவைச் சுற்றி கதை நகர்கிறது.
இப்படத்தை பாயல் கபாடியா இயக்கியிருக்கிறார். சிறந்த அயல்மொழித் திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளது. சிங்கம் எகெய்ன்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த இந்திப் படம், ‘சிங்கம் எகெய்ன்’. ‘காப் யுனிவர்ஸ்’ வரிசையில் வெளியாகும் ஐந்தாவது படம் இது. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.கலாசார அமைச்சகத்தில் வேலை செய்து வரும் அவ்னியைத் திருமணம் செய்கிறார் டிசிபி சிங்கம். இத்தம்பதிக்கு ஒரு மகன் பிறக்கிறான்.
மும்பையிலிருந்து ஸ்ரீநகருக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார் சிங்கம். தீவிரவாதி உமரால் தாக்குதலுக்கு உள்ளாகிறார் சிங்கம். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குச் சென்று போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார் உமர். சிங்கம் உமரைக் கைது செய்கிறார். இருந்தாலும் உன்னை சும்மா விட மாட்டேன் என்று சிங்கத்தை மிரட்டுகிறார் உமர்.
ஆனால், சிங்கம் உமரைப் பார்த்து பயப்படுவதில்லை. போதைப் பொருள் வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வைத்து, இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டுமிடுகிறார் உமர். சூடுபிடிக்கிறது திரைக்கதை. லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஜாலியாக ஆக்ஷன் படம் பார்ப்பவர்களுக்கு உகந்த படம் இது. இதன் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.
தொகுப்பு: த.சக்திவேல்
|