ஃபிபா விருது வென்றவர்கள்!
சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிபா, 2024ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியது. இதில் பிரேசில் நட்சத்திரம் வினிசியஸ் ஜூனியர் ஆண்களுக்கான ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றார். பெண்களுக்கான ஃபிபாவின் சிறந்த வீராங்கனை விருதினை ஸ்பெயினைச் சேர்ந்த ஐதானா பொன்மதி பெற்றார்.
ஐதானா பொன்மதி கடந்த 2023ம் ஆண்டும் பெண்களுக்கான ஃபிபாவின் சிறந்த வீராங்கனை விருதினை பெற்றிருந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதினை பெற்று அசத்தியுள்ளார்.
இதேபோல அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் சிறந்த ஆண் கோல்கீப்பருக்கான ஃபிபா விருதினை வென்றார். இவர் ஏற்கனவே 2022ம் ஆண்டும் இந்த விருதினை பெற்றிருந்தார். அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல்கீப்பர் அலிசா நாஹர், ஃபிபாவின் சிறந்த பெண் கோல்கீப்பருக்கான விருதினைப் பெற்றார். கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க கால்பந்து அணி தங்கம் வெல்ல உதவியாக இருந்ததற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டது. இதனுடன் சிறந்த பயிற்சியாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
பி.கே.
|