சிறுகதை-மாயன்



“ஒழுங்கா வந்துருவீல்ல..?”

வீரன் கேட்டதற்கு மாயன் தலையாட்டினான்.“பெரிய பார்ட்டி. துட்டு நிறைய கிடைக்கும். பிடிச்சு போச்சுன்னா அடிக்கடி கூப்பிடுவாங்க...” அதற்கும் மாயனின் சந்தோஷத்  தலையாட்டல்.வீரன் சந்தேகமாய்த்தான் கிளம்பிப் போனான். 
மாயன் முன்பெல்லாம் தெளிவாய்த்தான் இருந்தான். மனைவி, மகன்  என்று அழகான குடும்பம். கேலிப் பேச்சுகள். கையில் பணம் கிடைத்து விட்டால் கூட்டாளிகளுக்கும் சேர்த்து விருந்து என்று அமர்க்களப் படுத்தியவன். யார் கண் பட்டதோ. இப்போது எதற்கெடுத்தாலும் சொதப்பல்.

“சொல்ல மறந்துட்டேனே. வீட்டுல பெயின்ட்லாம் வச்சிருக்கேன். வேஷம் போட்டே வந்துரு. வேன்ல ஏறி போய்கிட்டே இருக்கோம்...”இப்போது திரும்பி நடந்தவன் நடையில் ஒரு உற்சாகத் துள்ளல் தெரிந்தது.

அவன் நட்பானபோது அதுவே ஒரு வினோத அறிமுகம். வீரனின் க்ரூப்பில் ஒருவனுக்கு பேதி. டாய்லட் வாசலிலேயே குடி இருந்தான்.‘என்னத்தடா தின்னு தொலைச்ச’ வீரனுக்கு செம காண்டு. கடுப்பில் குமுறியபோது பேதிக்காரன் மறுபடி உள்ளே போய்விட்டான். மூடிய கதவைப் பார்த்து கத்தியவனுக்கு யாரோ தோளைத் தொட்ட உணர்வு. திரும்பிப் பார்த்தால் மாயன். அப்போது அவன் பெயர் கூடத் தெரியாது.‘‘யாருப்பா..?’’ என்றான் பாதி எரிச்சலாய்.

‘‘என்ன பிரச்னை?’’ மாயன் அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.
‘‘ஏன்... நீ வந்து தீர்த்து வைக்கப் போறியா?’’
‘‘சொல்லுங்க...’’
மாயனின் நிதானமோ அல்லது வேறேதோ வீரனுக்கு அந்த கலவர சூழலிலும் கோபத்தை மட்டுப்படுத்தியது.

‘‘எங்காளு சொதப்பிட்டான்...’’
‘‘கவனிச்சுகிட்டுத்தான் இருந்தேன். பாவம். திடுமென வவுத்தால போனா அவன் என்ன செய்வான். இதெல்லாம் ப்ளான் பண்ணியா வரும்..?’’
‘‘இன்னிக்கு அட்வான்ஸ் கை நீட்டி வாங்கியாச்சு...’’
‘‘அவ்ளோதானே..?’’
‘‘ஆங். மானம் போயிரும். பார்ட்டி டங்குவாரை அறுத்துருவான்...’’
‘‘வேற ஆளு இல்லியா?’’

‘‘இருந்தா ஏன் புலம்புறேன்?’’
‘‘இன்னிக்கு என்ன போடப் போறீங்க?’’
வீரனுக்கு ஒரு புறம் பட
படப்பு. ஆனாலும் ஏனோ பதில்சொல்லிக் கொண்டிருந்தான்.

“எனக்கு வாய்ப்பு தரிங்களா?”
‘‘என்ன... உனக்கா?’’ வீரனின் மனக்குரல் மாயனுக்கும் கேட்டிருக்க வேண்டும்.

‘‘என்ன... நம்பிக்கை இல்லியா?’’
‘‘அதில்ல... முன்னே பின்னே அனுபவம் இருந்தாலே ஒரு பயம் வரும்...’’‘‘இப்ப என்ன... சொதப்பினா அடுத்த தடவை விலக்கிரு. சுலபமா எம்பேர்ல பழியை போட்டுரு...’’
வீரன் அவனைத் திகைப்போடு பார்த்தான். என்ன மாதிரி ஆளு இவன். வீரனிடம் வாயடிக்க மற்றவர்கள் தயங்கும்போது எதிரில் நின்று துணிச்சலாய் பேசுவதோடு மட்டும் இல்லாமல் ஐடியாவும் கொடுக்கிறான்.

‘‘வந்து...’’
‘‘ரெண்டு தடவை பார்த்திருக்கேன். வசனம் மனப்பாடம். எங்கப்பாரு இந்த வேஷம் போடற புழைப்பு வேணாம்னு வெளுத்துட்டாரு. அதனால கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். உள்ளார அந்த ஆசை கனன்றுகிட்டே இருக்கு. யதேச்சையா இப்ப ஒரு சான்ஸ். அடிச்சான்யா லக்கி ப்ரைஸ்னு...’’மாயனின் கண்கள் ஜொலித்தன. உடல் மொழியில் ஒரு மாற்றம். இவனிடம் என்னவோ இருக்கு என்று வீரனே நம்பத் தொடங்கி விட்டான்.

‘‘சரி. ஆனா...’’
‘‘இது போதும்ணே...’’
வீரனின் க்ரூப்பில் மற்றவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.
‘எதுக்கு ரிஸ்க்’ என்கிற பாணியில் பேசினார்கள்.
‘‘அந்த ஆளு இல்லாம கதையை மாத்தி போட முடியாதா?’’ என்கிற ரீதியில் பேச்சு வளர்ந்தது.

‘‘என்னங்கடா உளர்றீங்க. முக்கியமான வேஷம்டா...’’
‘‘அதனாலதான் சொல்றோம்...’’
‘‘பார்ப்போம்...’’

கோயில் திருவிழா என்றாலே வீரனின் நாடகம், கூத்து  உண்டு. இதை நம்பியே பத்து குடும்பங்கள். சில சமயம் பணம் கொட்டும். சில சமயம் சுமார். ஆனால், கூட்டிக் கழித்துப் பார்த்தால் இன்று வரை பசி இல்லை. பிழைப்பு ஓடுகிறது.

வீரனின் திறமையே அவனுடைய நாடக வடிவாக்கம். புராண சமூகக் கதைகளை எடுத்துக் கொண்டு அதில் அவனுடைய கற்பனையையும் கலப்பான். மூல வடிவத்துக்கு பங்கம் வராத மாதிரி. வசனங்களில் கைத்தட்டல் அள்ளும். ஆளைப் பார்த்தால் ‘இவனா’ என்று கேட்கத் தோன்றும். பள்ளி நாட்களிலேயே ஆரம்பித்து விட்டது இந்த ஆர்வம்.சகாக்களுக்கு சமாதானம் சொல்லி விட்டானே தவிர அவனுக்குள் ஒரு உதைப்புத்தான். அவனுக்குச் சொல்லிக் கொடுத்த பெரியவர் நினைப்பு வந்தது.

‘‘டேய்... எல்லாருமே கத்துக்குட்டிதான் முதல்ல. நானு நீயி... என்ன பொறக்கும்போதே எல்லாம் தெரிஞ்சுகிட்டா வரோம் பூமிக்கு. புத்திசாலி கப்புன்னு புடிச்சுக்குவான். இப்ப நீ கத்துக்கலியா?
சிக்கல் என்ன தெரியுமா. வாய்ப்பே கிடைக்காம செத்துப் போறவன் தாண்டா இந்த மண்ணுல அதிகம். கிடைச்சவன் மேலே மேலேன்னு போறான். 

கிடைக்காதவன் புலம்பிகிட்டே போறான். எது தர்மம் தெரியுமா... நாம மேலே வந்ததும் கீழே இருக்கிறவனைக் கை தூக்கி விடறது. அதை ஒழுங்கா செஞ்சா நாம பொறப்பு எடுத்த பலன் அதான்...’’ஒரு முறை அவருக்கும் அவனுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்தபோது அவர் சொன்ன அறிவுரை.

‘நிராகரிக்க ஒரு வினாடி போதும். வாய்ப்பு கொடுப்போம். இப்ப என்ன. புத்தி உள்ளவன் மேலே வருவான். இல்லாதவன் தன்னோட சக்தி இவ்ளோதான்னு புரிஞ்சுப்பான். எடுத்த உடனே விரட்டி விட்டா பின்னே எப்படிரா கண்டு பிடிக்கறது. நல்லா பாரு. ஜெயிச்சவன்லாம் போராடி வந்தவன் தான். நம்மால முடிஞ்சது ஒரு போராளிக்குக் கை கொடுக்கிறது...’

என்ன சொல்லிக் கொண்டாலும் உள்ளே ஒரு பதற்றம். சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வராமல் இல்லை. ஆனால், அதை எல்லாம் சாமர்த்தியமாய் சமாளித்து இருக்கிறான். அடுத்த சீனுக்கு வர வேண்டியவன் தவறுதலாய் முன் காட்சியிலேயே வந்துவிட்டான். வந்து நின்று விழிக்கிறான்.

அவன் பெயரைச் சொல்லி ‘‘நீ இங்கியா இருக்கே. அம்மா தேடறாங்க பாரு...’’ என்று வீரன் சமயோசிதமாய் பேச அவன் தப்பித்தேன் என்று ஓடிப் போனான்.
வசனத்தில் கோட்டை விட்டபோது ‘‘இப்பதான் புரியுது. நீ ஏன் மாட்டிகிட்டேன்னு. என்ன சொல்ல வரேன்னு தெளிவா சொல்ல மாட்டியா’’ என்று எடுத்துக் கொடுத்து சரியான வசனம் பேச வைத்தான்.இதெல்லாம் பழைய கதை. இன்று புத்தம்புதிதாய் ஒருவன். என்ன செய்வான்?

வீரனின் தடுமாற்றம் செல்விக்குப் புதிராய் இருந்தது.
“என்னய்யா அலை பாயுற?”
நடந்ததைச் சொன்னான். “தப்பு பண்ணிட்டேனோன்னு இருக்கு புள்ள...”
செல்வி சிரித்தாள். “இதுல என்னய்யா குழப்பம். அவனை ரெண்டு வசனம் பேசச் சொல்லி பார்த்துரு...”
அட... அது ஏன் தனக்குத் தோன்றவில்லை. அந்த நிமிட படபடப்பில் விட்டாச்சு.

“அதுக்குத்தான் உன்னைய கட்டுனேன்...”
அணைத்துக் கொள்ள வந்தவனின் பிடியிலிருந்து லாவகமாய் நகர்ந்து கொண்டாள்.
“போய்யா போ...”மாயனின் குடிசையும் பக்கத்திலேயேதான். போனால் அவன் வீட்டில் இல்லை. அவன் மகன் மட்டும் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

“ஒங்கப்பன் எங்கடா?”“அய்யனார் கோயில் பக்கம் போனாரு...’’வீரன் மனதில் குழப்பம். அங்கே எதற்குப் போனான். கால்கள் தன்னிச்சையாய் நடந்தன.வேறு யாரும் இல்லை.

 பூசாரி ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தார். அவர் எதிரே மாயன். அவனுக்குப் பின் அய்யனார் தூக்கிய அரிவாளுடன்.வீரன் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அய்யனார் மட்டும் பார்த்திருக்கலாம். அல்லது அவரும் மாயனின் நடிப்பில் கிறங்கி விட்டாரோ.

மாயனின் வேஷத்துக்கு உண்டான வசனங்களைத் தெளிவான உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்களுடன் பேசிக் கொண்டிருந்தான். பின்னாலிருந்த ஆலமரத்தில் இருந்த பறவைகள் கூட கீச்சிட மறந்து அமைதியாய் இருந்தன.அரை மணி நேரம் ஓடியது தெரியவில்லை. வீரன் துளிக்கூட சத்தம் எழுப்பாமல் திரும்பி விட்டான். உள்ளூர ஒரு பொறாமை. தன்னையே தூக்கிச் சாப்பிட்டு விடுவான் போல் இருக்கே.செல்வி ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தாள்.

“என்னய்யா... என்னாச்சு பேயறைஞ்சாப்ல வர. ஆளு டிமிக்கி கொடுத்துட்டானா...’’செல்வியைப் பார்த்து கை கூப்பினான்.“நல்ல ஐடியா சொன்ன புள்ள. நல்லா இரு...”“அய்யோ. என்னய்யா இது...”இந்த முறை அவளே ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.பிறகுதான் மாயனின் சேட்டைகள் ஆரம்பித்தன. 

ஒப்புக் கொள்வது வராமல் இருப்பது போல் வம்புகள். இந்த தடவை சொதப்பினால் கழற்றி விடவேண்டியதுதான். திறமை இருந்தால் மட்டும் போதுமா. வாக்கு சுத்தம் வேண்டாமா.ஒவ்வொருவருக்கும் தகவல் சொல்லியாச்சு. ‘‘வேன் புறப்படும்போது சரியா வந்துரணும்.

லேட்டாக்கினா சிக்கல்...’’சிக்கல் வேறு உருவத்தில் வந்தது. ஏற்பாடு செய்தவர்கள் பேசினார்கள். ‘‘எதிர்பாராத பிரச்னை. நாடகம் பின்னால இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு. திரு
விழாவே தள்ளிப் போவுது...’’மற்றவர்களுக்கு சொல்லியாச்சு. இந்த மாயனை மட்டும் பார்க்க முடியவில்லை. வீடு பூட்டிக் கிடந்தது. என்னாச்சு அவனுக்கு?
வேன் வரும் வழியில் ஏறிக் கொள்ளலாம் என்று மாயனும் மகனும் முன்பே போய் விட்டார்கள்.

அழகாய் கிருஷ்ணர் வேஷம். மாயனின் மனைவி ‘‘பையன் பசிக்குதுன்னு சொல்றான்யா. ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்த்துட்டு வரேன்...’’ என்று போயிருந்தாள்.பூட்டிக் கிடந்த கடை வாசலில் மாயக் கண்ணனும் மகனும் வராத வேனுக்குக் காத்திருந்தார்கள்.அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் மூடிய கண்களில் வண்ணக் கனவுகள். ‘அப்பா எதுனாச்சும் வாங்கித் தருவாரு... துட்டு கிடைச்சதும்...’.

ரிஷபன்