க்ரைம் த்ரில்லர் படங்களாதான் அமையுது...
நடிகை சாய் தன்ஷிகாவிற்கு அறிமுகமே தேவையில்லை. பிரபல இயக்குநர்களின் ‘குட்புக்’கில் எப்போதும் இருப்பவர். கதாநாயகி, வில்லி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக பண்ணக்கூடியவர். சமீபத்தில், ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘அதிர்ஷ்டசாலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். முதல்முறையாக வெப் சீரிஸ்... எப்படியிருந்தது அனுபவம்?
ரொம்ப வித்தியாசமான அனுபவம். சினிமாவிற்கும், வெப் சீரிஸிற்கும் பெரிசா வித்தியாசம் தெரியல. ஆனா, வெப் சீரிஸ்ல என் கேரக்டர் உட்பட ஒவ்வொரு கேரக்டரும் அழுத்தமானதாக இருக்குது. டைரக்டர் நாகா சாருடன் ஐந்து மாதங்கள் ஷூட்டிங் பயணத்துல நிறைய கத்துக்கிட்டேன். அவர் ‘மர்மதேசம்’, ‘சிதம்பர ரகசியம்’னு பல சீரியல்களும், ‘ஆனந்தபுரத்து வீடு’ உள்ளிட்ட படங்களும் பண்ணினவர். அவரின் கதைக்களம் நடிப்பிற்கு பெரும் பலம் சேர்க்கும். காசி, கும்பகோணம், ஏலகிரி மலைனு பல இடங்கள்ல டிராவல் பண்ணி ஷூட்டிங் எடுத்தோம். காசி ஷூட்டிங் ஒரு புனித யாத்திரைக்கு போன மாதிரி இருந்தது. கங்கையில் ஆரத்தி பார்த்ததும், அங்கேயே என் பிறந்தநாளைக் கொண்டாடினதும் எல்லாமே அலாதியானது.
சில இடங்கள்ல புலி, யானைகள் நடமாட்டம் இருந்ததாகச் சொன்னாங்க. அங்கெல்லாம் ரொம்ப சிரமப்பட்டு ஷூட் பண்ணினோம். ஒருவழியா பத்திரமா போய் திரும்ப வந்தோம்.பனி நிறைந்த காட்டுப் பகுதியில் என்னை புல்லட் ஓட்ட வச்சாங்க. இப்படி நிறைய மெனக்கெட்டு நடித்தேன். வெப் சீரிஸைப் பார்த்திட்டு பலரும் பாராட்டினபோதுதான் ரொம்ப சந்தோஷமா இருந்தது.
2021ல் ‘லாபம்’ படத்திற்குப் பிறகு தமிழ்ல படங்கள் பண்ணலையே..?
ஆமாம். நான் எப்பவும் எனக்கான கதாபாத்திரங்கள் வித்தியாசமா இருக்கணும்னு நினைப்பேன். இப்ப ஓடிடி பிளாட்ஃபார்ம் வேறு வந்திருச்சு. புது கான்செப்டுடன் புதிய இயக்குநர்கள் நிறைய வர்றாங்க. அவங்களுக்கு ஏற்ப நாமும் டெடிகேஷனுடன் வொர்க் பண்ணணும். அப்பதான் ஃபீல்டுல நிலைச்சு நிற்க முடியும். அதனாலேயே ரொம்ப யோசிச்சு தேர்ந்தெடுத்து பண்றேன். அதனால்தான் தாமதம்.
சினிமாவிற்குள் வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு... எப்படி வந்தது சினிமா ஆர்வம்?
என் மாமா அருண் சினிமாவில் இருந்தார். அவர் மூலமாகதான் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனேன். அவர் நடிகை சிம்ரன், ஜோதிகாவிற்கு மானேஜராக இருந்தார். அதனால் சினிமாவுக்குள் ஈசியா வரமுடிஞ்சது. இப்பவும் எனக்கு வழிகாட்டி அவர்தான். சின்ன வயசுல எனக்கு கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிக்கணும்னுதான் ஆசை.
ஆனா, பள்ளிப் படிப்பு முடிக்கும்போதே ‘பேராண்மை’ பட வாய்ப்பு வந்திடுச்சு. அப்ப சினிமா பத்தி ஒண்ணுமே தெரியாது. இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சார்தான் ஒரு பேராசிரியராக இருந்து சினிமாவை சொல்லிக் கொடுத்து கேமரா முன்னாடி என்னை நிறுத்தினார். அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். ‘அரவான்’, ‘பரதேசி’, ‘கபாலி’, ‘இருட்டு’... போன்ற படங்கள் உங்களை ரொம்ப கவனிக்க வைச்சதே..?
இவை எல்லாமே சிறந்த இயக்குநர்களின் படங்கள். அவர்களுடன் வொர்க் பண்ணக்கூடிய வாய்ப்பு எனக்கு கடவுளின் அருளால் கிடைச்சது. அதேபோல நானும் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய உழைப்பை செலுத்தினேன்.
அதன் பிரதிபலிப்பே என்னை கவனிக்க வைச்சது. ‘பேராண்மை’, ‘பரதேசி’, ‘அரவான்’ல நடிச்சதைப் பார்த்திட்டு நிறைய பேர் உங்களை ரொம்பப் பிடிக்கும்னு சொன்னாங்க. அடுத்து பா.இரஞ்சித் சாரின், ‘கபாலி’யில் என் ஹேர்கட்டிங் லுக் பார்த்து பாராட்டினாங்க. ரஜினி சாரோட மகளாக நடிச்சது என் வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பாக்கியம். சுந்தர்.சி சாரை ஓர் இயக்குநராக ரொம்ப பிடிக்கும். அவர் இயக்கத்துல ஒரு படத்திலாவது நடிக்கணும்னு ஆசை இருக்கு. இருந்தும் அவர் கதாநாயனாக நடிச்ச ‘இருட்டு’ல வில்லியாக நடிக்க வாய்ப்பு அமைஞ்சது. இப்படி எல்லாமே, தானாக அமைஞ்சதுதான்.
எல்லாமே த்ரில்லர், க்ரைம், ஹாரர்னு அமைகிறதே..?
எனக்கு கேரக்டர்தான் முக்கியம். நல்ல கேரக்டராக இருந்தால் அதுவாகவே மாறணும்னு நினைப்பேன். லேடி ஓரியண்டட் கேரக்டர்னு விரும்புறது கிடையாது. நல்ல கதைக் களத்தோடு வந்தால் பண்ணுவேன். அப்படியாகவே த்ரில்லர், ஹாரர் படங்களாக அமையுதுனு நினைக்கிறேன்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு வேற்று மொழிகள்லயும் பண்றீங்க..?
தெலுங்கில் கடந்த ஆண்டு ‘அந்திம தீர்ப்பு’, ‘தக்ஷினா’னு நான் நடிச்ச இரண்டு படங்கள் ரிலீஸ் ஆச்சு. அதுக்கு முன்னாடி ‘ஷிகாரு’னு ஒரு படம் வெளியாச்சு. இதில் ஒரு படத்தில் ஹீரோயினாக பண்ணினேன்.
எல்லாமே க்ரைம், த்ரில்லர்தான். அதேபோல மலையாளத்துல பிஜாய் நம்பியார் இயக்கத்துல துல்கர் சல்மான்கூட ‘ஷோலோ’னு ஒரு படம் நடிச்சேன். அது கொரொனா டைம்ல ரிலீஸ் ஆச்சு.கன்னடத்துல ‘உத்கர்ஷா’னு த்ரில்லர் படம் பண்ணினேன். எல்லா மொழி படங்களும் பண்றேன். இப்ப தமிழ்ல அதிகம் கவனம் செலுத்திட்டு இருக்கேன். தன்ஷிகா - சாய் தன்ஷிகாவாக மாறியது எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்னாடி என் வாழ்க்கையில் சில பிரச்னைகளைச் சந்திச்சேன். ஒரு பாயிண்ட்ல இந்த சினிமாவே வேண்டாம்னு இருந்தேன். அப்ப ஈசிஆர் ரோட்ல உள்ள சாய் பாபா கோயிலுக்குப் போனேன்.
அங்க எனக்கு ஒரு வைப் ரேஷன் கிடைச்சது. நான் எதிர்பார்த்த விஷயம் நல்லபடியாகவும் நடந்து முடிஞ்சது. பிரச்னைகள் தீர்ந்து பல நல்ல செய்திகளும் வந்தது. என்னை பாபா ஆசீர்வதிக்கிறார்னு தோணுச்சு. அதனால், என் பேருக்கு முன்னாடி சாய்னு வச்சிக்கிட்டேன். சினிமாவிலும் சாய் தன்ஷிகானு மாறிட்டேன். அடுத்து என்னென்ன படங்கள்?
‘யோகி டா’னு ஒரு ஆக்ஷன் படத்துல ஹீரோயினாக நடிச்சிருக்கேன். இதனை கெளதம் கிருஷ்ணா என்கிற புது இயக்குநர் பண்ணியிருக்கார். அடுத்து மித்ரன் ஆர். ஜவஹர் சார் இயக்கத்துல ‘அதிர்ஷ்டசாலி’ படம் பண்ணி முடிச்சிட்டேன். இதுல மாதவன் ஹீரோவாக நடிச்சார். நானும் மடோனா செபாஸ்டியனும் ஹீரோயினாக நடிச்சிருக்கோம். நல்ல கேரக்டராக வந்திருக்கு.
ஆர்.சந்திரசேகர்
|