சன்னி லியோன் பெயரில் மோசடி!
உலகில் ஒவ்வொரு நாளும் நிறைய ஏமாற்று வேலைகளும், மோசடிகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதில் சில மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும்போது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தும். ஆனால், இன்னும் சில மோசடிகளோ ‘இதில்கூடவா’ எனப் பேச வைக்கும். சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோசடி இப்படியொரு ரகம். அதாவது பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வந்துள்ளார் ஒருவர். கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடந்தது. அப்போது பாஜக தேர்தல் வாக்குறுதியாக திருமணமான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியது.
இந்நிலையில் ஆட்சிக்கு வந்ததால் இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி, ‘மஹ்தாரி வந்தனா யோஜனா’ என்ற பெயரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நேரம் வீரேந்திர ஜோஷி என்பவர், அங்கன்வாடி ஊழியர் வேதமதி ஜோஷியுடன் இணைந்து மோசடி ஆவணங்கள் மூலம் ‘மஹ்தாரி வந்தனா யோஜனா’ திட்டத்தில் பதிவு செய்தார்.
இதற்கு அவர் சன்னி லியோன் பெயரைப் பயன்படுத்தினார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ஜானி சின்ஸ் பெயரை கணவர் பெயராக பதிவிட்டார். இதன் மூலம் போலி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று அதனை தனது கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
திடீரென இந்த முறைகேட்டை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனே பஸ்தார் மாவட்ட கலெக்டர் ஹரிஸ் எஸ் இதனை விசாரிக்க உத்தரவிட்டார். அப்போதுதான் வீரேந்திர ஜோஷியும், வேதமதி ஜோஷியும் பிடிபட்டனர். 2024ம் ஆண்டின் இறுதி இப்படி யொரு செய்தியுடன் விடைபெறுகிறது!
பி.கே.
|