ரேஸிங்கே... அஜித்தே..!
இன்று ஒரு நகரத்தின் வளர்ச்சியை அடையாளப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக அந்நகரத்தில் நடக்கின்ற கார் பந்தயங்கள் இருக்கின்றன. அந்தளவுக்கு கார் பந்தயங்கள் முக்கியமான இடத்தில் இருக்கின்றன. அதனால்தான் துபாய், பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே கார் பந்தயங்கள் நடக்கின்றன. சமீபத்தில் கூட சென்னையில் கார் பந்தயம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கார் பந்தயம் பல்வேறு படிகளைத் தாண்டித்தான், இன்று உயரிய இடத்தை எட்டியிருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே மோட்டார் வாகனங்களுக்கான பந்தயங்கள் ஆரம்பித்துவிட்டன. ஆனால், அது ஒரு விளையாட்டாக உருவானது இருபதாம் நூற்றாண்டில்தான். அப்போது கார் மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களும் ஒரே பந்தயத்தில் கலந்துகொள்வார்கள். 1887ல் பாரிஸ் நகரில் 2 கிமீ தூரத்துக்கு மோட்டார் வாகன பந்தயம் நடந்தது. இப்போட்டியில் ஜார்ஜெஸ் பூட்டன் என்பவர் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் பங்குபெற்ற ஒரே போட்டியாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிதான் கார் பந்தயத்துக்கான முதல் புள்ளியை வைத்தது. அந்நாட்களில் மோட்டார் வாகனப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. விபத்து குறித்து பயம் இருந்தது. அதனால் போட்டியில் பெரிதாக யாருமே கலந்துகொள்ளவில்லை.
ஜார்ஜெஸ் பூட்டன் மட்டுமே கலந்துகொண்டிருந்தாலும் கூட, அந்தப் போட்டியை பாரிஸ் நகரமே வேடிக்கை பார்த்திருக்கிறது. பாரிஸில் இருந்து வெளியாகும் ‘லே பெடிட் ஜேர்னல்’ என்ற பத்திரிகை ஜூலை 22, 1894ல் கார் பந்தயத்தை நடத்தியது. இதைத்தான் உலகின் முதல் கார் பந்தயமாகக் கருதுகின்றனர். பாரிஸிலிருந்து ரோவன் நகரம் வரை இந்தப் பந்தயம் நடந்தது. 10 பிராங்க் நுழைவுக்கட்டணத்தைச் செலுத்தி, 102 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். பந்தய தூரம், 127 கி. மீ.
பத்திரிகை விற்பனையை அதிகரிப்பதற்காக இந்தப் போட்டியை ‘லே பெடிட் ஜேர்னல்’ நடத்தியதாகச் சொல்கின்றனர். இந்தப் போட்டி ஐரோப்பா முழுவதும் முக்கிய பேசு பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல், கார் பந்தயத்துக்கான நல்ல அடித்தளத்தையும் இட்டது.
அன்றிலிருந்து கார் பந்தயத்தை விளம்பர நோக்கில் பெரு நிறுவனங்கள் அணுக ஆரம்பித்தன. கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது காரின் பெருமையைப் பறைசாற்றவும், தயாரிப்புகளைப் பரிசோதிக்கவும், கௌரவத்துக்காகவும் போட்டிகளை நடத்தின. பெரும் பணக்காரர்களுக்கு முக்கிய பொழுதுபோக்காகவும் கார் பந்தயங்கள் மாறின. அடுத்து, ‘சிகாகோ டைம்ஸ் ஹெரால்டு’ எனும் நாளிதழ், 1895ல் அமெரிக்காவின் முதல் கார் பந்தயத்தை நடத்தியது. இந்தப் போட்டியில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும்
கலந்துகொண்டன. 1893ல் தான் அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகமாகியிருந்தன. அதனால் மோட்டார் சைக்கிளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக இந்தப் போட்டி நடந்ததாகச் சொல்கின்றனர்.
அமெரிக்கா கார் பந்தயங்களில் நுழைந்தாலும் கூட, அப்போது ஃபிரான்ஸின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. 1907ம் வருடம் சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து, ஃபிரான்ஸில் பாரிஸ் வரையிலான நீண்ட தூர கார் பந்தயம் நடந்தது. சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்டது இந்தப் பந்தயம். இதில் ஐந்து கார்கள் கலந்துகொண்டன. இப்போட்டியில் இத்தாலிய இளவரசரான சிபியோன் போர்கீஸ் வெற்றிபெற்றார். அந்த நாட்களில் சரியான சாலை வசதிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி நீண்ட தூர பந்தயங்களுக்கு வித்திட்டது. அத்துடன் நீண்ட தூரத்துக்கு ஏற்றவாறு கார்களை வடிவமைக்கவும் உதவியது. 1908ல் நியூயார்க்கிலிருந்து பாரிஸ் வரை கார் பந்தயம் நடந்தது. வரலாற்றில் நீண்ட தூரம் நடந்த மோட்டார் வாகன போட்டி இதுதான். இப்போட்டியில் ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவைச் சேர்ந்த அணிகள் பங்குபெற்றன.
இப்படியான நீண்ட தூரப் போட்டிகளில் அணிகளாக கலந்து கொள்வதுதான் வழக்கம். 22 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் போட்டியில் அமெரிக்க அணி வென்றது.
கார் பந்தயங்கள் சூடுபிடிக்க, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பந்தயங்களுக்கு என்று பிரத்யேகமாக ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்தன.
கார் பந்தயங்களுக்கு உகந்தவாறு டிராக் அமைத்து போட்டிகள் நடந்தன. இன்று ‘போர்ஸே’, ‘லம்போர்கினி’, ‘பெராரி’, ‘ மெர்சிடஸ்’, ‘ஆடி’, ‘புகாட்டி’... என ஏராளமான நிறுவனங்கள் ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிக்கின்றன. நவீனமான கார் டிராக்குகளும் இருக்கின்றன. இந்த கார் டிராக்குகள்தான் நகர வளர்ச்சியின் முக்கிய அம்சங்களாகின்றன. மட்டுமல்ல, ஐம்பதுகளில் அறிமுகமான ‘பார்முலா ஒன்’ போட்டி கார் பந்தய்த்தை முக்கியமான சாகச விளையாட்டாகவும் மாற்றிவிட்டது. இன்று ஏராளமான பிரிவுகளில் கார் பந்தயங்கள் நடக்கின்றன. இந்நிலையில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி, மீண்டும் கார் பந்தயங்களில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் அஜித். இந்த அணியில் ஃபேபியன் டுஃபியக்ஸ், மேத்யூ டெட்ரி, கேமரோன் மெக்லியோட் ஆகிய சர்வதேச கார் பந்தய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அஜித்தின் அணி வருகிற ஜனவரியில் துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறது. இதற்குப் பிறகு ஐரோப்பாவில் நடக்கும் கார் பந்தயங்களிலும் அஜித்தின் அணி கலந்துகொள்கிறது.
அணியின் உரிமையாளராக இருந்தாலும் கூட, ஓட்டுனராகவும் அஜித் செயல்படுவார் என்கின்றனர். பொதுவாக உரிமையாளர்கள் தங்களின் அணியினர் போட்டியில் கலந்துகொள்ளும்போது வெளியிலிருந்து ஒரு பார்வையாளராக ஆதரவு மட்டுமே தருகின்றனர்; பெரும்பாலும் ஓட்டுனராக செயல் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|