Must Watch



சிக்கந்தர் கா முக்காதர்

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘சிக்கந்தர் கா முக்காதர்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. மும்பையில் நடந்த ஒரு நகைக் கண்காட்சியில் ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்படுகிறது. மங்கேஷ் தேசாய், காமினி சிங், சிக்கந்தர் சர்மா ஆகிய மூவரின் மீதும் சந்தேகம் எழுகிறது.  இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஜஸ்விந்தர் சிங் நியமிக்கப்படுகிறார். சிக்கந்தர்தான் வைரத்தை எடுத்திருக்க வேண்டும் என்று ஜஸ்விந்தர் நம்புகிறார். ஆனால், அதற்கான சாட்சி எதுவும் ஜஸ்விந்தருக்குக் கிடைக்கவில்லை.

இன்னொரு பக்கம் சிக்கந்தரின் வாழ்க்கையில் பல பிரசனைகள் ஏற்படுகின்றன. வேலையை இழக்கிறார். சுற்றியிருப்பவர்கள் மத்தியில் கெட்ட பெயர் கிடைக்கிறது. இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து காமினியைத் திருமணம் செய்கிறார்.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜஸ்வந்தருக்கும் சிக்கந்தருக்கும் இடையில் பிரச்னை வெடிக்கிறது. இன்னமும் கொள்ளையனை ஜஸ்வந்தர் பிடிக்கவில்லை. ஜஸ்வந்தர் எப்படி கொள்ளையனைப் பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை. கொள்ளைச் சம்பவத்தை மையமாக வைத்து காதில் பூ சுற்றாமல் கொஞ்சம் தீவிரமாகவே கதையைச் சொல்லியிருக்கின்றனர். இப்படத்தை இயக்கியிருக்கிறார் நீரஜ் பாண்டே.

கனக ராஜ்ஜியம்

இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதலை மையமாக வைத்து நிறைய மலையாளப் படங்கள் வந்துவிட்டன. அதில் சமீபத்திய வரவு இது. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. முன்னாள் இராணுவ வீரர், இராமநாதன். நாட்டின் பாதுகாப்புக்காக இருபது வருடங்களுக்கு மேல் இராணுவத்தில் வேலை செய்திருக்கிறேன் என்ற கெத்துடன் இருப்பவர். ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எளிமையாக இருப்பவர்.

ஓய்வுக்குப் பிறகு ஒரு நகைக்கடையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். யாருடனும் எந்தப் பிரச்னையும் செய்யாமல் அமைதியுடன் வாழ்ந்து வருகிறார். எல்லோருடனும் நட்புடன் பழகுவதால் அவரை எல்லோருக்குமே பிடிக்கும். வீடு, வேலை, உறவுகள் என்று அவரது வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. 

ஒரு நாள் எதிர்பாராதவிதமாக வேணு என்பவருடன் மோதல் ஏற்படுகிறது. இராமநாதனுக்கும் வேணுவுக்குமான மோதலை சுவாரஸ்யமாக, எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லிச் செல்கிறது திரைக்கதை. இந்திரன்ஸும், முரளி கோபியும் முக்கிய கதாபாத்திரங்களில் கலக்கியிருக்கின்றனர். குடும்பத்துடன் கண்டு களிக்க ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாகர்.

மெக்கானிக் ராக்கி

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளி வரும் தெலுங்குப்படம் ‘மெக்கானிக் ராக்கி’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. துடிப்பான மெக்கானிக் ராகேஷ். தாத்தா உருவாக்கி வைத்திருந்த பழமையான மெக்கானிக் கடையை நடத்தி வருகிறான். கார் டிரைவிங்கும் கற்றுக்கொடுக்கிறான். அப்சரா மீது காதல் வயப்படுகிறான். தனக்கு ராகேஷ் கார் டிரைவிங் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அப்சரா விருப்பப்படுகிறாள்.

இன்னொரு பக்கம் பிரியா என்ற இளம் பெண்ணுக்கு டிரைவிங் கற்றுக்கொடுக்கிறான் ராகேஷ். பிரியாவுக்கு ராகேஷ் மீது காதல் மலர்கிறது. இந்நிலையில் ராங்கி ரெட்டி என்ற தாதாவுக்கு ராகேஷின் மெக்கானிக் கடை இருக்கும் இடம் தேவைப்படுகிறது. 

அந்த இடத்தை தர மறுக்கிறான் ராகேஷ்.அப்சராவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது பிரியாவின் காதலை ராகேஷ் ஏற்றுக்கொண்டானா? ராகேஷுக்கும் ராங்கிக்கும் இடையிலான பிரச்னை என்னவானது என்பதற்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. வழக்கமான தெலுங்கு மசாலா கதையை எங்கேயும் சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கின்றனர். இப்படத்தின் இயக்குநர் ரவி தேஜா முல்லபுடி.

மேரி

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் 10 டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘மேரி’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.தம்பதிகளான ஜோகிமும், அன்னாவும் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டும் என்று கடவுளிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் முன் தேவதை தோன்றி, பெண் குழந்தை வரம் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை என்று சொல்கிறது.

கடவுளின் சேவைக்குக் குழந்தையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அடுத்த ஒன்பது மாதங்களில் நாசரேத்தில், அன்னா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைதான் மேரி. இயேசுவின் தாயாக கருதப்படும் மேரியின் கதை திரையில் சுவாரஸ்யமாக விரிகிறது.இயேசுவின் பிறப்பு குறித்தும், மேரியைப் பற்றியும் பலவிதமான பார்வைகளும், திரைப்படங்களும் இருக்கின்றன. 

அவற்றில் முக்கியமான ஒன்றாக இப்படத்தை விமர்சகர்கள் சொல்கின்றனர். படத்தின் காட்சியமைப்புகளும், ஒப்பனைகளும் அந்தக் காலத்துக்கே நம்மை கொண்டு செல்கின்றன. மேரியாக நோவா ஹோகன் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் இயக்குநர் டி.ஜே. கருசோ.

தொகுப்பு:த.சக்திவேல்