தலிபான் தடைகளை உடைத்தெறியும் ஆப்கன் பெண்கள்!



இணையதளம் + சமூக வலைத்தளம்...

நம் தேசம் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் நமக்கு அருகாமையில் இன்னொரு நாடு தனது சுதந்திரத்தை இழந்தது. ஆம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. 
ஆப்கனின் அதிபராக இருந்த அஷ்ரப் கனியை அகற்றிவிட்டு, தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் ஆகஸ்ட் 15, 2021. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த இந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. மக்கள் போதுமான சுதந்திரமின்றி நெருக்கடியின் பிடியில் உள்ளனர்.
 பல லட்சம் மக்கள் வெறும் ரொட்டியும், தேநீரும் மட்டும் உண்டு வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதில் மிகப்பெரிய நெருக்கடி அக்காலம் முதல் இக்காலம் வரையிலும் பெண்களுக்குத்தான்.

1996ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து 2001ம் ஆண்டு வரை இவர்கள் பெண்களுக்கு செய்த கொடுமைகளை உலகம் மறக்காது. மீண்டும் 2021ம் ஆண்டு அமெரிக்க படை ஆப்கனிலிருந்து வெளியேறியதையடுத்து மீண்டும் தலிபான் ஆட்சி அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெண்களின் சுதந்திரமும் முழுமையாக பறிக்கப்பட்டு அடிப்படை உரிமைகளும் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டன. 

பெண்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது, முகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும், ஆண் துணை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்லக் கூடாது, திருமணத்தைக் கடந்த உறவுக்கு உயிர் போகும் வரை கல்லடி... என்பது உட்பட பணியிடங்களிலும் கடுமையான தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமீபத்திய புதிய கட்டுப்பாடாக சத்தமாக பேசக்கூடாது மற்றும் குரல் எழுப்பி பிரார்த்தனை செய்யக்கூடாது என பெண்களின் குரலுக்கும் தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு சுலபமாக உலகில் இயற்கையான சக்திகளை அடக்கி வைக்க முடியாது என்பதற்கு ஏற்ப தங்களை தாங்களே வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கன் பெண்கள்.

‘‘எங்களுக்கான வாழ்வாதாரத்தை நாங்களே உருவாக்கிக் கொண்டாலும் இது அத்தனையும் உண்மையான வெளிப்படையான சுதந்திரத்திற்கு ஈடாகாது!’’
 வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் அத்தனை ஆப்கன் பெண்களின் ஒரே குரல் இதுதான். எனினும் அதையும் மீறி மரங்கள் தனித்தனியே நின்றாலும் அதன் வேர்கள் நிலத்துக்கடியில் ஒன்றிணைந்து இருப்பது போல் அங்கே பெண்களின் வாழ்வாதாரம் ரகசிய பிணைப்புடன் ஒருவருக்கொருவர் உதவிகளை பரிமாறிக்கொள்ள தங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இது சாத்தியம்... என்ன சொல்கிறார்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள்..?  

‘‘எங்களின் கடைசி நம்பிக்கை இந்த இணையதளம்தான்...’’ இன்னமும் நம்பிக்கை மிஞ்சியிருப்பதை காட்டுகிறது பெகஸ்தா என்னும் 24 வயது இளம் பெண்ணின் வார்த்தைகள்.
‘‘இணையதளமும் சமூக வலைத்தளங்களும் மட்டும்தான் என்னுடைய ஒரே ஆயுதமாக இப்போது வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் நாங்கள் எங்களுடைய குடும்பப் பெயரை பயன்படுத்தவே முடியாது. அல்லது உண்மையான பெயரையும் பயன்படுத்த முடியாது.

ஏனெனில் நாங்கள் இணைய தளத்தை அல்லது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தலிபான் அதிகாரிகளுக்கு தெரிந்தால் உயிருக்கே உத்திரவாதம் கிடையாது. எங்கள் குடும்பத்தினருக்கு தெரிந்தாலும் பெண்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதால் மொத்த குடும்பத்திற்கும் பேராபத்து வந்து சேரும் என்பதாலேயே சொந்த குடும்பமே எங்களைக் கட்டுப்படுத்தத்தான் நினைப்பார்கள்...’’ இது ரெக்கை முளைத்தும் பறக்க முடியாமல் திண்டாடும் பெகஸ்தாவின் வலி மிகுந்த வார்த்தைகள்.

‘‘என் பெயர் குல்ஜான். முதியவள். சாலையோரங்களில் புத்தகங்களை விற்கிறேன். மீண்டும் வீடு வந்து சேர்வேன் என்ற நம்பிக்கையில்லாமல்தான் ஒவ்வொரு நாளும் மாலை வீட்டை விட்டு புத்தகங்களை விற்க கிளம்புகிறேன். இப்படி எண்ணற்ற பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயல்படுகிறார்கள்.

என் நாடு நாளுக்கு நாள் பின்தங்கிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் படிப்பறிவில்லாமல் உலக நடப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் இந்த நாவல்கள் மற்றும் உலகத் தலைவர்களின் வரலாறு, சமூக நெறி கதைகள் என என்னால் முடிந்த புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் கொண்டு போய் சேர்க்கிறேன். இதில் என்னுடைய வாழ்வாதாரமும் அடங்கி இருக்கிறது...’’ கண்கள் கலங்குகிறார் குல்ஜான்.

‘‘1996ம் ஆண்டு, ஆட்சியை தலிபான் பிடித்தபோது நான் அப்போது பள்ளி சிறுமி. அன்று என் படிப்பறிவை தொலைத்தேன். இன்றும் அதே சூழல். என்னைப் போலவே பல இளம் பெண்கள் வருங்காலத்தில் படிப்பறிவு இல்லாமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே உயிரையும் துச்சமாக நினைத்து ஒவ்வொரு நாளும் புத்தகங்களை சுமந்து கொண்டு சாலைகளில் சுற்றித் திரிகிறேன். எங்களுக்கான விடிவு காலம் சீக்கிரம் பிறக்கும் என நம்புகிறேன்...’’ அழுத்தமாக சொல்கிறார் குல்ஜான்.   

2021ம் ஆண்டு தலிபான் ஆட்சியைப் பிடித்தபோது இஃபாத்துக்கு வயது 18. பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்து காபுல் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி படிப்பிற்காக பதிவு செய்தார். அதற்கான அனுமதி சீட்டும் கிடைத்துவிட்டது. 

ஆனால், தலிபான் அடக்கு முறையால் ஒரு பெண் தனியாக வாழ்வதற்கோ அல்லது தனியாக பயணிப்பதற்கோ உரிமை மறுக்கப்பட்ட நிலையில் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டார் இஃபாத். சைக்காலஜி படித்து மருத்துவராக இருக்க வேண்டிய இஃபாத் தற்போது தனது வாழ்வில் பெரும்பகுதியை இணையதளத்தில் கழித்துக் கொண்டிருக்கிறார்.

இணையதளம் வழியாக அதிகாரபூர்வ படிப்புகள் படிக்கவும் முடியாது. காரணம், ஆப்கனிலிருந்து எந்த அட்மிஷன் விண்ணப்பங்கள் மற்ற நாடுகளுக்கு சென்றாலும் அங்கிருக்கும் தூதரகம் வாயிலாகத்தான் இன்னொரு நாட்டின் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ள முடியும். ‘‘எனவே என்னுடைய விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதோ இப்போது வீட்டிலிருந்தே பெயிண்டிங் செய்து இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறேன்.

இதுவரையிலும் 200 டாலர் வரையிலும் என்னுடைய பெயிண்டிங் மூலம் வருமானம் வந்திருக்கிறது. உடன் இருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலமாக என்னுடைய தோழிகளுடன் பேசிக்கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறேன்...’’ தன்னுடைய மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவர் கனவு கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து கொண்டிருப்பதை குடும்பத்துடன் வேடிக்கை பார்த்து வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார் இஃபாத்.

தலிபான் ஆட்சியில் இணைய தளம் சீனா மற்றும் துபாய் உள்ளிட்ட மற்ற நாடுகளில் இணையதளத்தை அரசாங்கத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கட்டுப்பாடுகளை விதித்து இயக்கிக் கொள்ள முடியும். அதாவது சீன தயாரிப்பு மென்பொருள் மற்றும் செயலிகளை மட்டும்தான் சீன மக்கள் பயன்படுத்த முடியும். அதேபோல் துபாய் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல வசதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படி கட்டுப்பாடுகளுடன் கூடிய இணைய தளத்தை பயன்படுத்த நிறைய பணம் செலவிட வேண்டும்.

தலிபான்களின் ஆட்சியும் எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்கள் வாயிலாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவேதான் முழுமையான அல்லது கட்டுப்பாடுகள் நிறைந்த இணையதளத்தை இன்னமும் தலிபான் ஆட்சி கொண்டுவரவில்லை அல்லது கொண்டுவர முடியவில்லை. 

இதனால் மட்டும்தான் அங்கே பெண்களும் அவர்கள் விருப்பப்படி இணையதளத்தை இன்னமும் பயன்படுத்த முடிகிறது. ஆனால், கூடிய விரைவில் நவீன கட்டுப்பாடுகள் நிறைந்த இணையதள சேவையை ஆப்கானிஸ்தானில் கொண்டு வருவோம் என்கிறார் தலிபான்களின் தலைவர் ஹிபத்துல்லாஹ் அகுந்த்சடா.

‘‘முழுமையான கட்டுப்பாடுகள் வரும் வரையிலாவது எங்களின் வாழ்வாதாரத்தில் முடிந்தவரை வாழ்ந்து கொள்கிறோம்...’’ வேதனைகள் வார்த்தைகளில் தெரிய தினமும் உடல் முழுவதும் துணிகளால் மறைத்துக் கொண்டு மங்கலான வெளிச்சத்தில் இருக்கும் ஒரு அடித்தள கடையில் துணிகள் விற்கிறார் செதிகா. 

அவருக்கு வயது 23. பேச்சுத் துணைக்குக் கூட நண்பர்கள் இல்லாமல் தன்னந்தனியாக நாள் முழுவதும் கடையில் வேலை செய்ய வேண்டிய நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு AI சாட்பாட் கிபியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் செதிகா. செதிகாவின் ஆங்கில மொழி ஆசிரியரும் இந்த ஏஐதான்.

27 வயது ஹீலா தனது வாழ்வின் 90 சதவீத நேரத்தை கிரிப்டோ கரன்சி வருமானம் குறித்து தெரிந்து கொள்ளும் முயற்சியில் செலவழிக்கிறார். எப்படியாவது ஏதேனும் ஒரு நேர்மையான வழியில் தனக்கு ஒரு சிறு வருமானம் வர வேண்டும் என்பதுதான் ஹீலாவின் குறிக்கோள். ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒருமுறை pi நெட்வொர்க் செயலியின் பட்டனை அழுத்த அவருடைய மொபைல் செயல்பாட்டிலேயே இருந்து கொண்டு கிரிப்டோ கரன்சி நடைமுறையை நிறுத்தாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த செயலி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான், ஈராக் உள்ளிட்ட போர்க்கள பூமியில் அதீத பிரபலம். காரணம் இதனை மிகச் சாதாரண மொபைலிலும் கூட இலவசமாக பயன்படுத்த முடியும்.

ஆனால், pi நெட்வொர்க் மூலம் பெரிய வருமானம் கிடைத்ததற்கான சான்றுகள் இதுவரை கிடையாது. முழுமையாக பணத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த இணையதளம் இப்போது வரை கற்றலுக்கான நெட்வொர்க்காக மட்டுமே பயன்படுவதாக அங்கு இருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர். 

மற்ற டிரேடிங் செயலி போல் இந்த நெட்வொர்க்கில் பணம் சம்பாதிப்பது என்பது இப்போது வரை சாத்தியமில்லை. ஆனால், ஒரே சமயத்தில் பல பெண்கள் சேர்ந்து பெட்டிங் முறைப்படி இந்த நெட்வொர்க்கை பயன்படுத்தும் பொழுது ஒரு சில பெண்களுக்கு இதன் மூலம் மிகச் சிறிய தொகை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

22 வயது ஃபர்யல், தினமும் கூகுள் மீட் மூலம் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஊடக உரிமை (media rights) மற்றும் குற்றப்பிரிவு சட்டங்கள் (criminal  laws) குறித்த வகுப்புகள் எடுத்து வருகிறார். இவருக்கான கூகுள் மீட் ஆன்லைன் வகுப்பறையை வெளிநாடு வாழ் ஆப்கானிஸ்தான் தன்னார்வலர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். 

தினமும் அவர்கள் கூகுள் மீட்டைத் துவங்கி விபிஎன் மூலம் இணைப்பு கொடுத்து அதன் மூலம் வகுப்பெடுக்கிறார் ஃபர்யல். வெளிநாட்டில் இருந்து செயல்படுத்தப்படும் இந்த இணையதளத்தை தலிபான் அதிகாரிகளால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் உள்ளூர் காவலர்கள் மூலம் அவ்வப்போது ஆன்லைன் வகுப்புகள் ஏதேனும் நடக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வீட்டை விட்டு வெளியேறும் பெண்களின் மொபைல் ஃபோன்களை சோதனையிடும் முறையும் நிகழ்ந்து வருகிறது.

எனவே ஃபர்யல் வீட்டை விட்டு வெளியேறும்பொழுது மொபைல் போனை எடுத்துச் செல்வதில்லை. 27 வயது சதியா, ஆன்லைனில் உடைகள் விற்கும் தொழில் செய்து வருகிறார். ஆனால், தனது உடைகளை காட்சிப்படுத்த எந்த மாடல் பெண்களும் தயாராக இல்லாத நிலையில் அவரது தொழிலும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில் அவ்வப்போது மதத்திற்கு எதிராக அவர் செயல்படுவதாக தலிபான் ஆதரவு ஆண்களின் அடக்குமுறைகள் வார்த்தைகளாகவும் இணைய தடை செயல்பாடுகளாகவும் அவரது தொழிலுக்கு இடையூறு செய்வதாகவும் தெரிவிக்கிறார்.

இதற்கிடையில் சில சமூக ஆர்வலர் பெண்கள் போலியாகவும் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் உருவாக்கி தலிபான் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். இவையும் அவ்வப்போது அதிகாரிகளால்  கவனிக்கப்பட்டு உடனடியாகவே பதிவுகள் நீக்கப்படுகின்றன அல்லது கணக்குகள் முடக்கப் படுகின்றன. தொடர்ந்து இவர்களின் இந்த போராட்டக் குரல் அதே இணையதளம் மூலம் கல்வி கற்று வரும் மற்றும் தொழில் செய்து வரும் பெண்களுக்கும் சில நேரங்களில் இடையூறாக இருப்பதாகவே சொல்கிறார்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள்.

ஆப்கானிஸ்தானின் 98% பெண்கள் ஏதாவது ஒரு இணையதள வழி படிப்பையோ அல்லது பயிற்சியையோ எடுத்துக் கொள்கிறார்கள். ஐந்தில் மூன்று பெண்கள் ஆன்லைன் வாயிலாக கைவினைப் பொருட்கள், உடைகள், நகைகள் என விற்பனை செய்கிறார்கள். இன்னும் சில இணையதள வசதி குறித்து கொஞ்சம் கூட தெரியாத பெண்கள் வெளிச்சம் மங்கிய பிறகு தங்களது விடியலை நோக்கி இருட்டான சாலைகளில் உடைகள், புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், சின்ன சின்ன பொம்மைகள் என விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதற்கு இணங்க தினம் தினம் நசுக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையே தங்களின் வாழ்வாதாரத்தையும் முடிந்தவரை நிலைநிறுத்திக்கொண்டு வளர்ந்து வருகிறார்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள். ஆனால், உலகம் ஒன்றிணைந்துதான் இவர்களை முழுமையாக வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த உலகில் பிறந்த அத்தனை பெண்களுக்கும் அந்தந்த நாட்டின் சட்ட திட்டப்படி அல்லது கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி ஏதோ ஒரு வகையில் நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களுக்கான இந்த கட்டுப்பாடுகள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளைக் கடந்து நிற்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தனது உயிரை மட்டுமின்றி தன் மொத்த குடும்பத்தின் உயிரையே பணயம் வைத்துத்தான் அங்கே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காலம் தான் இவர்களுக்கான தடைகளை நீக்க வேண்டும். அதற்கான முன் முயற்சி 2025ம் ஆண்டாவது எடுக்கப்பட்டால் நல்லது. உலகை நேசிக்கும் மக்கள் அனைவரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

ஷாலினி நியூட்டன்